

தீபாவளிக்கு விதவிதமான ஸ்வீட் வகைகள் செய்து அசத்துபவர்கள் இடையில் வெற்றியோ தோல்வியோ என அசாத்ய துணிச்சலுடன் செய்து தான் பார்ப்போமே என களத்தில் இறங்குபவர்களும் உண்டு. ஆனாலும் அனைவராலும் விரும்பி கடைகளில் வாங்கும் இனிப்பு வகைகளில் முதல் இடத்தில் இருப்பது காஜு கத்லிதான். காரணம் வீட்டில் செய்தால் ஒழுங்காக வருமோ இல்லையோ எனும் சிறு அச்சம் தான்.
தீபாவளி மட்டுமல்ல பண்டிகை நாட்கள் மற்றும் வீட்டுக்கு விருந்தினர் வரும் போதும் இந்த காஜு கத்லிக்கே முதலிடம். இனிப்புக் கடைகளில் அதிகம் விற்பனையாகும் காஜு கத்லியை மக்கள் விரும்பும் காரணம் முந்திரியின் இயற்கையான சுவையும், மிருதுவான பதமும் தான். மேலும் முந்திரியில் புரதம், நல்ல கொழுப்புகள், மெக்னீசியம், துத்தநாகம், தாமிரம் போன்ற சத்துக்கள் உள்ளதால் உடல் நலத்துக்கும் நல்லது என்பதே. இருந்தாலும் காஜு கத்லியில் சர்க்கரையும் அதிகம் இருப்பதால் நீரிழிவு பாதிப்பு இருப்பவர்கள் அளவோடு சாப்பிடுவது நல்லது என்பதையும் கவனிக்க வேண்டும்.
இந்த இனிப்பை வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம். ஆனால் சில நேரங்களில் கத்லி மிகவும் கடினமாகிவிடும் அல்லது வெட்டும்போது உடைந்து துண்டுகளாகிவிடும். இதைத் தவிர்க்கச் சரியான பதமும் சில எளிய நுணுக்கங்களும் தெரிந்திருக்க வேண்டும். அவ்வளவே. சித்திரமும் கைப்பழக்கம் என்பதுபோல ஸ்வீட்டும் கைப்பக்குவம்தான்.
சரி முதலில் காஜு கத்லி செய்முறை பார்ப்போம்..
தேவையான பொருட்கள்
முந்திரி – 1 கப்
சர்க்கரை – ½ கப்
தண்ணீர் – ¼ கப்
ஏலக்காய்த்தூள் – ¼ டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
நெய் – 1 டீஸ்பூன்
வெள்ளித் தாள் – தேவைக்கேற்ப (விருப்பப்பட்டால்)
செய்முறை
முந்திரியை மிக்ஸியில் போட்டு, இடையிடையே ( ஸ்வைப்பரில்) நிறுத்திப் பொடியாக அரைக்கவும். தொடர்ந்து அரைத்தால் முந்திரியில் உள்ள எண்ணெய் வெளியேறி பேஸ்ட் போல மாறிவிடும் என்பதால் அரைக்கும் போது கவனம் தேவை. நைசான மாவாக மட்டும் அரைக்க வேண்டும். பின்னர் சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.
அடுத்து சர்க்கரைப் பாகு தயாரிக்க
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். சர்க்கரை முழுவதும் கரைந்து, பாகு சற்றே கெட்டியாகத் தொடங்கும்போது முந்திரிப் பொடியை சிறிது சிறிதாக சேர்த்துக் கிளறவும். சரியான பதத்தில் கிளறுதல் முக்கியம்.
கட்டிகள் இல்லாமல் தொடர்ந்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கலவை ஒன்றாகச் சேர்ந்து கெட்டியாகி பாத்திரத்தின் ஓரங்களில் ஒட்டாமல் வரும்போது அடுப்பை அணைக்கவும். சிறிது ஆறியதும் கையில் ஒட்டாமல் உருட்டக்கூடிய பதத்தில் இருக்க வேண்டும்.
இந்த பதம் வந்ததும் அடுப்பில் இருந்து எடுத்து ஏற்கனவே நெய் தடவி தயாராக இருக்கும் ஒரு தட்டில் முந்திரிக் கலவையை கொட்டி மேலே பட்டர் பேப்பர் கொண்டு மூடி சப்பாத்திக் கட்டையால் சற்றே அழுத்தம் தந்து சமமாகத் தேய்க்கவும். முழுமையாக ஆறிய பிறகு கத்தியால் டைமண்ட் வடிவில் கட் செய்து காற்று புகாத ஈரமற்ற டப்பாவில் எடுத்து வைக்கவும்.
முந்திரியை அதிக நேரம் அரைப்பது, சர்க்கரைப் பாகு அதிகமாகக் கெட்டியாவது, கலவையை அதிக நேரம் அடுப்பில் வைத்துக் கிளறுவது, கத்லி முழுமையாக ஆறுவதற்கு முன்பே வெட்டுவது போன்ற காரணங்களால் தான் காஜு கத்லி உடைகிறது என்பதால் இவற்றில் அதிக கவனம் தேவை.
காஜி கத்லி உடையாமல் வெட்ட உங்களுக்காக இந்த 4 முக்கியக் குறிப்புகள் இதோ,
1. முந்திரியை அதிக நேரம் அரைக்காதீர்கள். முந்திரி மாவாக மாற வேண்டுமே தவிர எண்ணெய் வெளியேறி பசைபோல மாறினால் கத்லியின் பதம் மாறிவிடும்.
2. பாகு பதத்தில் கவனம் தேவை. சர்க்கரைப் பாகு மிகவும் கெட்டியாகிவிட்டால் கத்லி கடினமாகும். அதிகத் தண்ணீர் இருந்தால் சரியாக இறுகாது. எனவே பாகு மெல்லக் கெட்டியாகத் தொடங்கும்போதே முந்திரியைச் சேர்க்கவும்.
3. சரியான பதத்தில் இறக்குவது முக்கியமானது. கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வர வேண்டும். ஒரு சிறிய துண்டைக் கையில் உருட்டிப் பார்த்தால் ஒட்டாமல் உருள வேண்டும். இதுவே சரியான பதமாக தெரிந்து கொள்ளுங்கள்.
4. ஆறிய பிறகே வெட்டுவது அதிமுக்கியம். கத்லியை அவசரப்பட்டு வெட்டக்கூடாது. முழுமையாக ஆறிய பிறகு கூர்மையான கத்தியால் மெதுவாக வெட்டினால் உடையாமல் அழகான வடிவம் கிடைக்கும். கத்தியை ஈரமில்லாமல் துடைத்து மேலே நெய் தடவிக் கொள்ளவும்.
கடைகளில் கிடைப்பது போன்ற மிருதுவான காஜு கத்லி வேண்டுமென்றால், முந்திரியை நைசாக அரைப்பது, சரியான பதத்தில் அடுப்பிலிருந்து இறக்குவது, முழுமையாக ஆறிய பிறகு வெட்டுவது ஆகிய மூன்று ரகசியங்களை பின்பற்றி ஜமாய்ங்க.
பண்டிகை காலங்களை இனிப்புடன் சிறப்பிக்க உதவும் மிகச் சரியான, நாவில் கரையும் காஜு கத்லி செய்முறையை முழுமையாகக் கற்றுக்கொள்ளலாம்.