

தீபாவளி பெயரைச்சொல்லி தினம் தினம் பலகாரங்கள் செய்து சாப்பிட்டு கொண்டிருக்கிறோம் எங்கள் வீட்டில். நேற்று பண்ணிய மிச்சர், இன்று பண்ணிய பட்டர் முறுக்கு, முள்ளு முறுக்கு இன்னும் காலியாகாமல் இருக்கிறது. பட்டன் பாதுஷா சின்ன கப்பில் ஒன்று போட்டு செய்ததால் எண்ணி 11 தான் வந்தது. போட்டோ எடுப்பதற்குள் உடனே காலி ஆகிவிட்டது.
பாரம்பரியமான பாதுஷாவின் சிறிய வடிவம்தான். சுவையான பஞ்சு போன்ற பாதுஷாவை செய்வதும் எளிது; சுவையும் அதிகம். மைதா மாவை உபயோகிக்காமல் சத்தான கோதுமை மாவு கொண்டு எளிதாகச் செய்யலாம்.
1. பட்டன் பாதுஷா
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 கப்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
உப்பு -1 சிட்டிகை
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய்/நெய் - பொரிப்பதற்கு
பாகு காய்ச்ச:
சர்க்கரை -1 கப்
ஏலக்காய் தூள் -1/2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - சில துளிகள்
பிஸ்தா (அ) பாதாம் துண்டுகள் - அலங்கரிக்க
செய்முறை
ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் சோடா, நெய் மற்றும் தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்பு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவை விட மென்மையாக பிசைந்து கொள்ளவும்.
அதிகமாக அழுத்தி பிசைய வேண்டாம். இதை ஒரு ஈரமான துணியால் மூடி 1/2 மணி நேரம் ஊற விடவும்.
பாகு தயாரிப்பது: ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். சர்க்கரை கரைந்து லேசான பிசுபிசுப்பான பதம் (கம்பி பதம் தேவையில்லை) வந்தவுடன் ஏலக்காய் தூள் மற்றும் எலுமிச்சை சாறு (பாகு கட்டியாகாமல் இருப்பதற்காக) சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
ஊறிய மாவை எடுத்து சிறிய உருண்டைகளாக உருட்டி நடுவில் விரலால் அழுத்தி சிறிய ஓட்டை போட்டு சிறிய பட்டன் வடிவில் செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் அல்லது நெய் விட்டு மிதமான சூட்டில் பட்டன் பாதுஷாக்களை நான்கு நான்காகப் போட்டு பொரிக்கவும்.
பொன்நிறமாக ஆனதும் எண்ணெயிலிருந்து வடித்து எடுத்து சர்க்கரைப் பாகில் போட்டு 1 மணி நேரம் அல்லது நன்றாக ஊறும் வரை வைக்கவும். ஊறிய பிறகு மேலே பொடியாக நறுக்கிய பிஸ்தா அல்லது பாதாம் தூவி அலங்கரிக்க பட்டன் பாதுஷா தயார்.
2. ஸ்பைசி துக்கடா:
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 கப்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
ஓமம் (அ) சீரகம் -1 ஸ்பூன்
பெருங்காயத்தூள்- 1/2 ஸ்பூன்
வெண்ணெய் (அ) சூடான எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையானது
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை
அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு, வெண்ணெய், நம்முடைய சுவைக்கேற்ப ஓமம் அல்லது சீரகம் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக எடுத்து மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்க்கவும். கத்தி கொண்டு மாவை சதுரமான அல்லது டைமண்ட் வடிவ துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு நன்கு சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக் கொண்டு வெட்டி வைத்துள்ள துக்கடா துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும். மொறு மொறுப்பான ஸ்பைசி துக்கடா தயார்.
3. ஸ்வீட் துக்கடா:
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 கப்
உப்பு - 1 சிமிட்டு
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1/2 ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
சமையல் சோடா - 1 சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க
செய்முறை
சர்க்கரையை அவரவர் தேவைக்கேற்ப சிறிது கூட்டியோ அல்லது குறைத்தோ போடலாம். சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சர்க்கரை கரையும் வரை சூடாக்கி ஆறவிடவும். பாகு வைக்க தேவையில்லை.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, ஏலக்காய் தூள், சமையல் சோடா மற்றும் உருக்கிய நெய் சேர்த்து நன்கு கலக்கவும். சிறிது ஆறியதும் சர்க்கரை கரைசலை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து பத்து நிமிடங்கள் ஊற விடவும். இதனை சற்று தடிமனாக சப்பாத்தி கல்லில் தேய்த்துக் கொண்டு கத்தியால் நமக்கு விருப்பமான வடிவில் துண்டுகளாகச் செய்யவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் துண்டுகளாக்கிய துக்கடாக்களை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித் தெடுக்கவும். அடுப்பை நிதானமாக எரிய விட வேண்டியது அவசியம். இல்லையெனில் கலர் மாறிவிடும். பொன் கலரில் மொறுமொறுப்பான இனிப்பு துக்கடா தயார்.
4. குல்கந்து ஜாமுன்:
குல்கந்து ஜாமுன் என்பது பாரம்பரிய குலோப் ஜாமுனின் நடுவே ரோஜா இதழ்களால் ஆன குல்கந்து பூரணத்தை வைத்து ஸ்டப்பிங் செய்யப்படும் ஒரு சுவையான இனிப்பு வகையாகும்.
தேவையான பொருட்கள்
ரெடிமேட் ஜாமுன் மிக்ஸ் 1 பாக்கெட்
பால் (அ) தண்ணீர் மாவு பிசைய - தேவையான அளவு
எண்ணெய் (அ) நெய் - பொரிப்பதற்கு
பூரணம் செய்வதற்கு:
குல்கந்து - 2 கரண்டி
பொடித்த பாதாம், முந்திரி துண்டுகள் - 1 கரண்டி
சர்க்கரை பாகு செய்ய:
சர்க்கரை - 2 கப்
தண்ணீர் - 2 கப்
ஏலக்காய் தூள் - 1/2 ஸ்பூன்
ரோஸ் வாட்டர் - சில துளிகள்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் கலந்து பிசுபிசுப்பு பதம் அதாவது அரைக்கம்பி பதம் வந்ததும் ஏலக்காய் தூள், ரோஸ் வாட்டர் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
ஜாமூன் மாவை ரொம்பவும் அழுத்தாமல் தளர்வாக, சிறிது பால் தெளித்து மென்மையாக பிசைந்து கொண்டு, ஒரு கிண்ணத்தில் குல்கந்து மற்றும் பொடித்த டிரை ஃப்ரூட்ஸ்களை கலந்து வைக்கவும்.
பிசைந்த மாவிலிருந்து சிறிய எலுமிச்சை அளவு உருண்டை எடுத்து தட்டையாகத் தட்டி அதன் நடுவில் 1/2 ஸ்பூன் குல்கந்து கலவையை வைத்து மாவின் ஓரங்களை நன்கு சேர்த்து விரிசல் இல்லாமல் மென்மையான உருண்டைகளாக உருட்டவும்.
அடுப்பில் வாணலியை வைத்து நெய் அல்லது எண்ணெய் விட்டு மிதமான தீயில் உருண்டைகளை மொத்தமாக சேர்க்காமல் நான்கு நான்காகப் போட்டு பொன்னிறமாகும் வரை மெதுவாக திருப்பி விட்டு பொரித்தெடுக்கவும். பொரித்த ஜாமூன்களை மிதமான சூட்டில் உள்ள சர்க்கரைப்பாகில் போட்டு நன்கு ஊற விட சுவையான குல்கந்து ஜாமுன் தயார்.
மைதாவிற்குப் பதிலாக ஆரோக்கியமான கோதுமை மாவைக் கொண்டு வீட்டிலேயே கடிகாரச் சுவையில் மொறுமொறுப்பான பலகாரங்களைச் செய்து அசத்தும் திருப்தி.