
1. பாகற்காய் பச்சடி
தேவை:
பாகற்காய் - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 8 பல்
இஞ்சி - 1 துண்டு
புளி - நெல்லிக்காய் அளவு
வரமிளகாய் - 6
வெல்லம் - ஒரு சிறு துண்டு
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1/4 கப்
செய்முறை:
பாகற்காயைக் கழுவித் துடைத்து, விதை நீக்கி பொடியாக நறுக்குங்கள். வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை தோல் நீக்கி, பொடியாக நறுக்குங்கள். புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். வெல்லத்தைப் பொடித்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து மிளகாயைக் கிள்ளிப் போடுங்கள்.
மிளகாய் வறுபட்டதும் பாகற்காயை சேருங்கள். நிதானமான தீயில் பாகற்காயை பத்து நிமிடம் வதக்குங்கள். பிறகு வெங்காயம், பூண்டு சேர்த்து மேலும் பத்து நிமிடம் வதக்குங்கள். நன்கு வதங்கிய பிறகு புளிக் கரைசலை சேருங்கள். அத்துடன் உப்பு, வெல்லம் சேர்த்து நன்கு கெட்டியான பிறகு இறக்குங்கள். உடலுக்கு நலம் பயக்கும் அறுசுவை பச்சடி தயார்.
2. பாகற்காய் ஊறுகாய்
தேவை:
பிஞ்சு பாகற்காய் - 1/4 கிலோ
தக்காளி, எலுமிச்சம்பழம் - 1
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்
கடுகு, பெருங்காயத் தூள் - தலா ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பாகற்காயைக் கழுவி, ஈரம் போகத் துடைத்து, உள்ளே இருக்கும் கொட்டைகளை நீக்கிவிட்டு, நறுக்கிக் கொள்ளவும். தக்காளி, பச்சை மிளகாயையும் நறுக்கிக் கொள்ளவும். எல்லா காய்களையும் ஒன்று சேர்த்து அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, காய்கறி கலவையைக் சேர்த்துக் கிளறி, ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். இதில் எலுமிச்சம்பழம் பிழிந்து கலக்கினால், பாகற்காய் ஊறுகாய் தயார்.
3. பாகற்காய் பொடிமாஸ்
தேவை:
பெரிய பாகற்காய், வெங்காயம்
தக்காளி – தலா 2
பூண்டு – 4 பல்
கடுகு- 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – தலா 1/4 டீஸ்பூன்
பொட்டுக்கடலைப் பொடி – 1/2 கப்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள், தனியாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்
கெட்டியான புளிக் கரைசல் – 2 டீஸ்பூன்
பொடித்த வெல்லம் – ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பாகற்காய், வெங்காயம், தக்காளி, பூண்டை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, பாகற்காய், வெங்காயம், பூண்டைப் போட்டு வதக்கவும்.
பிறகு புளிக் கரைசலை விட்டு, மஞ்சள்தூள், தனியாத்தூள், வெல்லம் சேர்த்துக் கிளறவும். இதில் நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி, காய் வெந்ததும் கடைசியில் பொட்டுக்கடலைப் பொடி தூவி, நன்றாகக் கிளறி இறக்கவும். சுவையான பாகற்காய் பொடிமாஸ் தயார்.
4. பாகற்காய் தொக்கு
தேவை:
பாகற்காய் - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பு ன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
வெல்லம் - 50 கிராம்
அரிசி - 1 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கசகசா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க:
எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/2 சிட்டிகை
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
முதலில் பாகற்காய், வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கவும். புளியை சிறிது நேரம் தண்ணீரில் ஊற விடவும். அரிசி, கசகசா மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றை வெறும் வாணலியில் சற்று வாசனை வரும் வரை வறுத்து, மிக்ஸியில் அரைக்கவும்.
புளியை கரைத்து எடுத்து வைக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு சேர்த்து பொரிக்கவும். கடுகு பொரிந்ததும் உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்க்கவும்.
பிறகு, பாகற்காயை போட்டு நன்கு வதக்கவும். பாகற்காய் எண்ணெயில் நன்கு வதங்கியதும், வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும். பிறகு தக்காளி சேர்க்கவும். அதனுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, தக்காளி கரையும் வரை நன்கு வதக்கவும். பாகற்காய், வெங்காயம் தக்காளி எல்லாமும் சேர்ந்து நன்றாக குழைந்து வந்ததும், கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை ஊற்றவும்.
காய் நன்றாக வெந்து வரும்போது, வெல்லத்தை பொடி செய்து சேர்க்கவும். அனைத்தும் சேர்ந்து நன்றாக கொதித்து வரும் போது, அரைத்து வைத்திருப்பதை சேர்க்கவும். சில நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து கலந்து விடவும். தொக்கு திரண்டு, வேண்டிய பதத்திற்கு வரும்போது அடுப்பை அணைக்கவும். சுவையான பாகற்காய் தொக்கு ரெடி.