

மாங்காய் சீசன் வந்துவிட்டாலே, அதை உப்பு, காரம் தொட்டுச் சாப்பிடுவது பலருக்கும் பிடிக்கும். ஆனால், பள்ளிப் பருவத்தில் பெட்டிக்கடைகளில் வாங்கிச் சாப்பிட்ட அந்தப் புளிப்பும் இனிப்பும் கலந்த 'மேங்கோ மிட்டாய்' நினைவுகள் இன்றும் நம்மில் பலருக்கு நாவில் எச்சில் ஊறவைக்கும்.
அந்தப் பழைய நினைவுகளை மீட்டி, எந்தவிதமான செயற்கை நிறமூட்டிகளோ ரசாயனங்களோ இல்லாமல், வீட்டிலேயே மிகவும் சுத்தமான முறையில் இந்த டிரை மேங்கோ மிட்டாயை நாம் தயார் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
நல்ல புளிப்பான பச்சை மாங்காய் - 2
சர்க்கரை - 1 கப்
மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
வறுத்த சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
சாதாரண உப்பு - ஒரு சிறிய சிட்டிகை
பொடித்த சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை!
முதலில் பச்சை மாங்காய்களை நன்றாகக் கழுவி, தோலை முழுமையாகச் சீவி விடுங்கள். பின்னர் அதைச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் மாங்காய் துண்டுகளைப் போட்டு, அவை மூழ்கும் அளவு மட்டும் தண்ணீர் ஊற்றி, மாங்காய் நன்றாகக் குழைந்து வேகும் வரை கொதிக்க வையுங்கள். வெந்த மாங்காய் துண்டுகளை நன்றாக ஆறவைத்து, தண்ணீரை வடித்துவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, நல்ல நைஸான விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
இப்போது ஒரு கடாய் அல்லது நான்-ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, நாம் அரைத்து வைத்துள்ள மாங்காய் விழுதை அதில் சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, அதனுடன் சர்க்கரை, மிளகாய்த் தூள், வறுத்த சீரகத் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கைவிடாமல் கிளற வேண்டும்.
சர்க்கரை உருகியதும் கலவை சற்று தண்ணியாக மாறும். தொடர்ந்து 10 முதல் 15 நிமிடங்கள் கிளறிக்கொண்டே இருந்தால், மாங்காய் விழுது கெட்டியாகி, கடாயில் ஒட்டாமல் அல்வா பதத்திற்குச் சுருண்டு வரும். இந்தச் சமயத்தில் அடுப்பை அணைத்துவிடுங்கள்.
ஒரு அகலமான தட்டில் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் தடவி, தயார் செய்து வைத்துள்ள மாங்காய் விழுதை அதில் ஊற்றி, சமமாகப் பரப்பி விடுங்கள். இதை அப்படியே நல்ல வெயிலில் 2 நாட்கள் வரை காயவைக்க வேண்டும். கலவை நன்றாகக் காய்ந்து, தட்டில் ஒட்டாமல் பேப்பர்போல எடுக்க வரும். இதை உங்களுக்குப் பிடித்தமான வடிவங்களில் கத்தியால் வெட்டிக்கொள்ளுங்கள்.
வெட்டிய மிட்டாய் துண்டுகளை, பொடித்து வைத்துள்ள சர்க்கரையில் போட்டுப் பிரட்டி எடுத்தால், அட்டகாசமான 'டிரை மேங்கோ மிட்டாய்' ரெடி. இதை ஒரு காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்தால், பல மாதங்கள் வரை கெட்டுப்போகாது.