
முகலாயர்களின் உணவு கலாச்சாரம் உலகப் புகழ் பெற்றது. அவங்க செஞ்ச ஒவ்வொரு உணவுக்கும் ஒரு தனித்துவமான சுவையும், செய்முறையும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு இனிப்பு வகைதான் இந்த முத்தஞ்சன். இது ஒரு வகையான இனிப்பு சாதம். பார்த்தாலே சாப்பிடத் தூண்டும் அளவுக்கு கலர்ஃபுல்லா இருக்கும்.
ஏன்னா இதுல விதவிதமான நட்ஸ், ட்ரை ஃப்ரூட்ஸ் எல்லாம் சேர்ப்பாங்க. கல்யாணம் மாதிரியான விசேஷங்கள்ல இந்த முத்தஞ்சன் செஞ்சா அந்த விருந்தே ஒரு தனி அழகு பெறும். அந்த காலத்து ராஜாக்கள் விரும்பி சாப்பிட்ட இந்த முத்தஞ்சனை இன்னைக்கு நாம எப்படி செய்யறதுன்னு பாக்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 1 கப்
சர்க்கரை - 1.5 கப்
நெய் - 4 தேக்கரண்டி
பால் - 1/2 கப்
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
கிராம்பு - 3-4
பட்டை - ஒரு சிறிய துண்டு
பிஸ்தா - 10
பாதாம் - 10
முந்திரி - 10
உலர் திராட்சை - 1 தேக்கரண்டி
செர்ரி பழம் - 4-5
ஆரஞ்சு எசன்ஸ் - சில துளிகள்
உணவு நிறம் - ஆரஞ்சு, பச்சை, மஞ்சள்
செய்முறை:
பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். ஊறிய அரிசியை சேர்த்து 80% வேகும் வரை சமைக்கவும். அரிசி உடையாமல் பார்த்துக்கொள்ளவும். வெந்ததும் தண்ணீரை வடிகட்டி தனியாக வைக்கவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றவும். சூடானதும் கிராம்பு மற்றும் பட்டை சேர்க்கவும்.
சர்க்கரை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்து ஒரு கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும்.
காய்ச்சிய பாகில் பால் மற்றும் குங்குமப்பூ கலவையை சேர்க்கவும்.
வெந்த அரிசியை பாகில் மெதுவாக சேர்க்கவும். அரிசி உடையாமல் கிளறிய பின்னர், ஏலக்காய் பொடி மற்றும் ஆரஞ்சு எசன்ஸ் சேர்க்கவும்.
விருப்பப்பட்டால், சாதத்தை மூன்று பாகமாக பிரித்து ஒவ்வொரு பாகத்திலும் ஆரஞ்சு, பச்சை மற்றும் மஞ்சள் உணவு நிறங்களை சேர்க்கவும்.
அடுத்ததாக நறுக்கிய பிஸ்தா, பாதாம், முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு 5-7 நிமிடங்கள் தம் போடவும்.
கடைசியாக செர்ரி பழங்களைத் தூவி அலங்கரித்தால் சுவையான முத்தஞ்சன் தயார்.
இதோட கலர்ஃபுல்லான தோற்றமும், நட்ஸ் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸோட சுவையும் யாரையும் கவர்ந்திடும். கொஞ்சம் மெனக்கெட்டு செஞ்சா நம்ம வீட்லயும் இந்த ராஜாவோட ஸ்வீட்டை ருசிக்கலாம். நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. கண்டிப்பா உங்களுக்கும் பிடிக்கும். செஞ்சு பார்த்துட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க.