இனி சர்க்கரைவள்ளிக்கிழங்கை இப்படி செஞ்சு கொடுங்க... தட்டே காலியாகும்!

சர்க்கரை வள்ளிக்கிழங்கை வைத்து சூப்பரான பிரைடு ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..
Sweet Potato fried Rice|பிரைடு ரைஸ்
Sweet Potato fried Rice|பிரைடு ரைஸ்AI Image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

சர்க்கரைவள்ளிக்கிழங்கு வைட்டமின் A, C, நார்ச்சத்து, இரும்புச்சத்து நிறைந்தது, டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்றது, நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தி எடையை குறைக்க உதவுகிறது. குறைந்த கிளைசெமிக் குறியீடு காரணமாக நீரிழிவு நோயாளிகளுக்கும் பயன். இதை வைத்து புட்டு, பணியாரம், போண்டா, அல்வா, சாலட், பிரைடு ரைஸ் போன்ற பல சுவையான உணவுகள் செய்யலாம்.

சர்க்கரைவள்ளி கிழங்கு (Sweet Potato) என்பது வைட்டமின் A, C இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த ஒரு மிகச்சிறந்த ஊட்டச்சத்து மிக்க கிழங்கு வகையாகும். அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள இந்த சக்கரவள்ளி கிழங்கை நிறைய பேர் சாப்பிட விரும்புவதில்லை. டயட்டில் இருப்பவர்களுக்கு இது மிகவும் உகந்த உணவாகும். இதில் உள்ள குறைந்த கொழுப்பு மற்றும் அதிக நீர்ச்சத்து, நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தந்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இது உடலுக்கு உடனடி ஆற்றலைத் தருகிறது மற்றும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.

இதில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளைத் தடுத்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வைட்டமின் C சத்துக்கள் நிறைந்திருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

இதன் கிளைசெமிக் குறியீடு (Glycemic Index) குறைவாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் குறைந்த அளவில் இதை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சர்க்கரைவள்ளி கிழங்கு வைத்து புட்டு, பணியாரம், போண்டா மற்றும் அல்வா, சாலட் போன்ற பல வகையான சுவையான உணவுகளையும் தயாரிக்கலாம். ஆனால் இன்று வித்தியாசமாக சர்க்கரை வள்ளிக்கிழங்கை வைத்து சூப்பரான பிரைடு ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..

தேவையான பொருட்கள் :

உதிரியாக வடித்த பாஸ்மதி அரிசி சாதம் - 1 கப்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு - பெரியது 1

சின்ன வெங்காயம் - 50 கிராம்

கறிவேப்பிலை - சிறிதளவு

ப.மிளகாய் - 2

பூண்டு - 4 பல்

கொத்தமல்லி - சிறிதளவு

சீரகம் - கால் தேக்கரண்டி

தனி மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி + கால் தேக்கரண்டி

தனியா தூள் - கால் தேக்கரண்டி

சீரகத்தூள் - கால் தேக்கரண்டி

கரம்மசாலா தூள் - கால் தேக்கரண்டி

Sweet Potato fried Rice|பிரைடு ரைஸ்
Sweet Potato fried Rice|பிரைடு ரைஸ்AI Image

மஞ்சள் தூள் - கால் சிட்டிகை

மிளகு துள் - சிறிதளவு

உப்பு - சுவைக்கு

எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

* சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கொத்தமல்லி, பூண்டு, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சர்க்கரை வள்ளிக்கிழங்கை நன்றாக கழுவி தோல் நீக்கி சிறிதாக சதுர வடிவில் வெட்டிக்கொள்ளவும்.

* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை போட்டு வறுக்கவும்.

* பின்னர் அதில் சிறிது உப்பு, மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

* சர்க்கரை வள்ளிக்கிழங்கு நன்றாக வெந்து மொறு மொறு என்று பொரிந்ததும் எடுத்து தனியாக வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
சர்க்கரை வள்ளிக்கிழங்கு பராத்தா செய்யலாம் வாங்க!
Sweet Potato fried Rice|பிரைடு ரைஸ்

* அதே எண்ணெயில் சீரகம், பூண்டு போட்டு தாளித்த பின்னர் சின்ன வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் மிளகாய் தூள், தனியா தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

* வெங்காயம் வதங்கி மசாலா பச்சை வாசனை போனவுடன் பாஸ்மதி அரிசி சாதம், வறுத்து வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மிளகு துள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

* பின்னர் மூடி போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வைக்கவும்.

* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி, நன்றாக கலந்து இறக்கினால் சூப்பரான சர்க்கரை வள்ளிக்கிழங்கு பிரைடு ரைஸ் ரெடி.

இதையும் படியுங்கள்:
டயட்டில் இருப்பவர்களுக்கு சத்தான சர்க்கரைவள்ளிக்கிழங்கு கேழ்வரகு சப்பாத்தி
Sweet Potato fried Rice|பிரைடு ரைஸ்

இந்த ரெசிபியை குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு லஞ்ச் பாக்ஸ்ல கட்டி கொடுத்த மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க.

logo
Kalki Online
kalkionline.com