

தோசை, இட்லி, சாதம் என அனைத்திற்கும் தொட்டுக் கொள்ள வீடுகளில் அவசியம் தொக்கு வகைகள் தேவைப்படுகிறது. சுருக்கென்று ஒரு தொக்கு இருந்தால் வெறும் தயிர் சாதம் மட்டுமே போதும் என சொல்பவர்கள் நிறைய பேர். தற்போது சின்ன வெங்காயம் விலை மலிவாக இருப்பதால் அதில் தொக்கு செய்தால் சூப்பராக இருக்கும். இதோ உங்களுக்காக சின்ன வெங்காயம் தொக்கு ரெசிபி.
தேவைப்படும் பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 500 கிராம் அரை (இதில் பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயத்தையும் சரிபாதியாக கலந்து கொள்ளலாம். அல்லது சின்ன வெங்காயம் மட்டுமே வேண்டும் என்பவர்கள் அதை மட்டுமே பயன்படுத்தலாம்.)
வறுத்துப் பொடிக்க:
வெந்தயம் -1 டீஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
தனியா- 1 டீஸ்பூன்
சீரகம் -1/2 டீஸ்பூன்
தாளிக்க:
நல்லெண்ணெய்- 1/2 கப்
உளுந்து - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்-2
மிளகாய்த்தூள்- 2 டீஸ்பூன்
உப்பு- தேவைக்கு
மஞ்சள்தூள்- 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1 டீஸ்பூன்
இறுதியில் சேர்க்க:
புளிக்கரைசல் - 11/2 கப்
வெல்லம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் சின்ன வெங்காயத்தை தோலுரித்து நன்கு கழுவி மிக்ஸியில் ஸ்வைப்பரில் விட்டு விட்டு அரைத்துக் கொள்ளவும் .மிகவும் நைசாக அரைக்கத் தேவையில்லை. வெங்காய விழுதை தனியே ஒரு பௌலில் வைத்துக்கொள்ளவும். அடுத்து ஒரு கடாயில் வெந்தயம் கடுகு தனியா சீரகம் ஆகியவற்றை பொரியும் வரை விட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும். ஆறியதும் மிக்ஸியில் இட்டு நைசாக அரைத்து தனியே வைக்கவும்.
இப்போது ஒரு அடிகனமான கடாயை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் உளுந்து, கடுகு , சீரகம் இரண்டு வர மிளகாய் கிள்ளிப்போட்டு பொரிந்ததும் பெருங்காயத்தூள் சேர்த்து அதில் அரைத்து வைத்திருக்கும் வெங்காய விழுதை பக்குவமாக ஊற்றிக்கலக்கவும். சூடான எண்ணெய் கொதிக்கும் என்பதால் வெங்காயத்தை சேர்க்கும்போது சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நன்றாக கிளறிவிட்டு வெங்காயம் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
இதில் இப்போது தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், சிறிது கருவேப்பிலை சேர்த்து மேலும் இரண்டு, மூன்று நிமிடங்கள் வரை வதக்கவும். அதில் இப்போது கரைத்து வைத்திருக்கும் புளிக் கரைசலை ஊற்றி ஒரு 15 நிமிடங்கள் மிதமான தீயில் சற்று திறந்தார் போல் மூடி போட்டு மூடி வைக்கவும்.
ஏனெனில் முழுவதும் மூடி இருக்கும்போது மேலே நீராவி படர்ந்து நீர் தொக்கில் விழுந்தால் விரைவில் கெட்டுவிடும்.
மேலும் வெங்காய தொக்கு ரெடி ஆனதும் எண்ணெய் பிரிந்து மேலே தெறித்துவிடும் வாய்ப்பு உண்டு என்பதால் சற்று கவனமாக இருப்பது நல்லது. இப்போது இறக்கும் தருவாயில் வெல்லத்தை சேர்த்து நன்றாக கலந்து உப்பு காரம் பார்த்து எண்ணெய் பிரிந்து வந்திருக்கும் சமயம் தொக்கு கெட்டியானதும் முன் செய்து வைத்திருக்கும் வெந்தயம் தனியா கலந்த மசாலா பவுடரை சேர்த்து கலந்து இறக்கவும்.
இப்போது அருமையான மணமான சின்ன வெங்காயம் தொக்கு தயார். இதற்கு தாளிதம் செய்த தயிர்சாதம் சூப்பர் காம்பினேஷன் ஆக இருக்கும்.