பணியாரத் திருவிழா! உங்கள் வீட்டுச் சுட்டீஸ்களுக்குப் பிடித்தமான 4 சுவைமிகுந்த ரெசிபிகள்!

tasty-paniyaram-recipes
tasty-paniyaram-recipes
Updated on

மக்காச்சோளம் பணியாரம்

தேவை:

மக்காச்சோளம் - 3 கப்

இட்லி அரிசி - 1 கப்

உருட்டு உளுந்து - கால் கப்

உப்பு - 1/2 டீஸ்பூன்

வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

பருப்பு - 2 டீஸ்பூன்

பெரிய வெங்காயம்- 2

பச்சை மிளகாய் - 3

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:

முதலில் மக்காச்சோளத்தை பிரித்து எடுத்து இரவு முழுவதும் ஊற வைத்து கொள்ளவும். அரிசியை ஐந்து மணி நேரம் வரை ஊற வைத்துகொள்ளவும்.

பின் மாவு அரைப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு உளுந்து மற்றும் வெந்தயத்தை ஊறவைத்து கொள்ளவும்.

பின் இவற்றை கிரைண்டரில் சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும். பின் இந்த மாவில் உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கடலை பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

ஒரு பவுலில் இந்த வெங்காயம், தக்காளி கலவையை சேர்த்து, அத்துடன் தேவையான அளவு அரைத்து வைத்துள்ள மாவை சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

பின் பணியார கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி ஒரு கரண்டி மாவை சேர்த்து மிதமான சூட்டில் வைத்து இரண்டு பக்கமும் வேகவிடவும். சுவையான மற்றும் ஆரோக்கியமான மக்காச்சோள கார பணியாரம் தயார்.

ராகி பணியாரம்

தேவை:

ராகி மாவு - ஒரு கப்

கோதுமை மாவு - அரை கப்

பேக்கிங் சோடா - ஒரு ஸ்பூன்

அரிசி மாவு. - கால் கப்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க :

கடுகு - ஒரு ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - ஒரு ஸ்பூன்

கடலைப்பருப்பு - ஒன்றரை ஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கொத்து (பொடியாக நறுக்கியது)

காரட் - ஒன்று

பச்சை மிளகாய் - 2

எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
வீட்டில் எளிமையான முறையில் வெண்ணிலா ஐஸ்க்ரீம் (Vanilla Ice Cream) செய்வது எப்படி?
tasty-paniyaram-recipes

செய்முறை:

வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும். காரட்டை துருவி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எல்லா வகையான மாவையும் ஒன்றாக போட்டு உப்பு சேர்த்து கலக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, துருவிய காரட், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும்.

பின்னர் வதக்கியவற்றை மாவில் போட்டு கலக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் பணியார கல்லை வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி கரைத்து வைத்திருக்கும் மாவை குழியின் முக்கால் அளவிற்கு ஊற்றி இருபுறமும் நன்றாக திருப்பி போட்டு வேக விட்டு எடுக்கவும். சுவையான ராகி பணியாரம் ரெடி.

வெந்தயப் பணியாரம்

தேவை:

பச்சரிசி - 200 கிராம்

உளுந்து - 6 டீஸ்பூன்

வெந்தயம் - ஒன்றரை டீஸ்பூன்

வெல்லம் - 200 கிராம்

ஏலக்காய் - 2

நெய் - 2 டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் - 10 டீஸ்பூன்

சோடா உப்பு - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும். ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும். அடுப்பில் கனமான அடிப் பகுதியுள்ள பாத்திரத்தை வைத்து சிறிது தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.

இத்துடன் பொடித்த வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிட்டு கரைத்து வடிகட்டவும். ஊறிய அரிசி, உளுந்து, வெந்தயத்துடன் வெல்லம் கரைத்த தண்ணீர் ஊற்றி மையாக கிரைண்டரில் அரைக்கவும்.

மாவை வழித்தெடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து 8 மணிநேரம் புளிக்கவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து, நெய் ஊற்றி தேங்காய்த் துருவல் சேர்த்து லேசாக வதக்கவும்.

இதை புளிக்க வைத்துள்ள மாவில் சேர்த்துக் கலக்கவும். இத்துடன் பொடித்த ஏலக்காய், சோடா உப்பு இரண்டையும் சேர்த்து பணியாரம் ஊற்றும் பதத்துக்குக் கரைத்து, பணியாரக்குழியில் ஊற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். சுவையான வெந்தயப் பணியாரம் தயார்.

இதையும் படியுங்கள்:
சமையலறை ரகசியங்கள்: உணவின் சுவையை இரட்டிப்பாக்க இதோ சில எளிய டிப்ஸ்!
tasty-paniyaram-recipes

மசாலா பணியாரம்

தேவை:

இட்லி மாவு - 2 கப்

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 1-2 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி - 1/2 இன்ச் (துருவியது)

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

துருவிய தேங்காய் - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை ஊற்றி, அதில் எண்ணெயை தவிர, மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்துகொள்ள வேண்டும்.

பின்னர் பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் எண்ணெய் ஊற்றி தேய்த்து, கலந்து வைத்துள்ள மாவை பணியாரங்களாக ஊற்றி, பின் அவற்றின் மேல் லேசாக எண்ணெய் ஊற்றி, மூடி போட்டு 2-3 நிமிடம் வேகவைத்து திறந்து, திருப்பிப் போட்டு வெந்ததும், அவற்றை தட்டில் வைக்கவேண்டும்.

இதே போன்று அனைத்து மாவையும் பணியாரங்களாக சுட்டுக் கொள்ளவேண்டும். இப்போது சுவையான மசாலா பணியாரம் ரெடி.

logo
Kalki Online
kalkionline.com