

பாஸ்தா (Pasta): பலவகை சாஸ்களுடன் (Tomato, Alfredo, Pesto) தயாரிக்கப்படும் நூடுல் உணவு. இதை செய்ய...
தேவையான பொருட்கள்:
பாஸ்தா – 1 கப் (மக்கரோனி)
தக்காளி – 3
வெங்காயம் – 1 (நறுக்கியது)
பூண்டு – 3 பல் (நறுக்கியது)
ஆலிவ் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
மிளகுத்தூள் – ½ டீஸ்பூன்
சில்லி ஃப்ளேக்ஸ் – சிறிது
சீஸ் – சிறிதளவு (துருவியது)
ஒரேகானோ – சிறிது
செய்முறை:
தண்ணீரில் உப்பு சேர்த்து பாஸ்தாவை 8–10 நிமிடங்கள் வரை வேகவிடவும். வெந்த பாஸ்தாவை வடித்து சிறிது ஆலிவ் எண்ணெய் தெளித்து வைக்கவும். ஒரு வாணலியில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு வதக்கவும். தக்காளி அரைத்து சேர்த்து சாஸ் மாதிரி கெட்டியாக வரும் வரை வேகவிடவும். அதில் உப்பு, மிளகுத்தூள், சில்லி ஃப்ளேக்ஸ், ஒரேகானோ சேர்க்கவும். பாஸ்தாவை சேர்த்து நன்றாக கலக்கவும். மேலே சீஸ் தூவி பரிமாறவும். சற்று காரத்துடன் கூடிய தக்காளிச் சாஸ் பாஸ்தா சிறப்பாக இருக்கும்.
பீட்சா (Pizza): மாவில் தயாரித்து சாஸ், சீஸ், காய்கறி சேர்த்து அடுப்பில் சுடும் உணவு. இதை செய்ய..
தேவையான பொருட்கள்:
மைதாமாவு – 2 கப்
ஈஸ்ட் – 1 டீஸ்பூன்
சர்க்கரை – 1 டீஸ்பூன்
உப்பு – ½ டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
வெந்நீர் – தேவையான அளவு (மாவு பிசைய)
தக்காளி சாஸ் – 3 டேபிள் ஸ்பூன்
சீஸ் – ½ கப் (மொசரெல்லா)
காய்கறிகள் – (வெங்காயம், மிளகாய், தக்காளி, ஆலிவ்) நறுக்கியவை
செய்முறை:
வெந்நீரில் ஈஸ்ட், சர்க்கரை சேர்த்து 10 நிமிடம் புளிக்க விடவும். மைதா, உப்பு, ஆலிவ் எண்ணெய் சேர்த்து, புளித்த ஈஸ்ட் நீர் சேர்த்து மாவாக பிசையவும். மாவை 2 மணி நேரம் மூடி புளிக்கவிடவும். புளித்த மாவை வட்டமாக உருட்டி பேக்கிங் ட்ரேயில் போடவும். அதன் மேல் தக்காளி சாஸ் தடவி காய்கறிகள், சீஸ் போடவும். 180°C வெப்பத்தில் ஓவனில் 15–20 நிமிடங்கள் சுடவும். சீஸ் உருகி, அடிப்பகுதி பொன்னிறமாக வரும்போது பீட்சா தயார்.
லசான்யா (Lasagna);
பாஸ்தா தகடுகள், சாஸ், சீஸ் ஆகியவை அடுக்குகளாக வைத்து சுடப்படும் சிறப்பு உணவு. இதை செய்ய
தேவையான பொருட்கள்:
லசான்யா பாஸ்தா தகடுகள் – 6
காய்கறி – 1 கப் (நறுக்கியது)
தக்காளி சாஸ் – 1 கப்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
பூண்டு – 2 பல்
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
மைதா – 1 டேபிள் ஸ்பூன்
பால் – 1 கப் (வெள்ளை சாஸ் செய்ய)
உப்பு, மிளகு – தேவையான அளவு
மொசரெல்லா சீஸ் – 1 கப்
செய்முறை:
லசான்யா தகடுகளை கொதிக்கும் தண்ணீரில் வேகவிடவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு, காய்கறி வதக்கவும். அதில் தக்காளி சாஸ், உப்பு, மிளகு சேர்த்து கெட்டியாக விடவும். வேறு பாத்திரத்தில் வெண்ணெய் உருகவைத்து மைதா சேர்த்து வதக்கி பால் ஊற்றி வெள்ளை சாஸ் தயாரிக்கவும். பேக்கிங் ட்ரேயில் அடுக்குகளாக முதலில் தகடு, அதன் மேல் தக்காளிச் சாஸ், அதன் மேல் வெள்ளை சாஸ், அதன் மேல் சீஸ் இவ்வாறு 3–4 அடுக்குகள் போடவும். 180°C வெப்பத்தில் 25 நிமிடம் சுடவும். மேலே சீஸ் பொன்னிறமாகி உருகும்போது லசான்யா தயார்.