பொங்கச்சோறும் - சுண்டக்கறியும்

Pongachorum Sundakariyum
Pongachorum Sundakariyum
Published on

'திருநெல்வேலிக்காரன் தின்னே தீத்துருவான்னு' ஒரு சொல் வழக்கு உண்டு. 'தின்னு கெட்ட குடும்பம்' நெறைய இருக்கு. அந்த வகையில சாப்பாட்டை ருசியாய் உண்ணும் திருநெல்வேலிக்காரர்கள் வரலாற்றில் 'சுண்டக்கறி' முக்கியமான இடம்பெறும்.

தைப் பொங்கல் அன்று வாசலில் சம்பா பச்சரிசியில் பொங்கல் வைத்து, இலையில் படைத்த காய்கறிகளை கொண்டு அவியல், வெண்டைக்காய் பச்சடி, புடலங்காய் பொறியல், சிறுகிழங்கு பொறியல் ஆகியவற்றுடன் இடி சாம்பார் வைத்து மதியம் சாப்பிடுவது வழக்கம்.

பொங்கல் அன்று மதியம் பொங்கலுக்கென்றே சிறப்பாக கிடைக்கும் சிறுகிழங்கு, சேப்பங்கிழங்கு, பிடி கிழங்கு ஆகியவற்றுடன் கேரட், பீன்ஸ், உருளை, சீனி அவரைக்காய், முருங்கைக்காய், நாட்டு வாழைக்காய், மாங்காய் ஆகியவை சேர்த்து அவியல் செய்வார்கள்.

அது போல பொங்கச்சோறுக்கு என்றே திருநெல்வேலி பகுதியில் பலவிதமான காய்கறிகளைக் கொண்டு 'இடிசாம்பார்' (மிளகாய் வத்தல், கடலைப்பருப்பு, கொத்தமல்லி, வெந்தயம், சீரகம், பெருங்காயம் வறுத்து, திரித்து தயார் செய்வது) என்ற குழம்பு வைப்பார்கள் (முந்தைய காலத்தில் உரலில் இடித்து தயார் செய்வதால் இதற்கு 'இடிசாம்பார்'ன்னு பெயர்).

இதோடு அவியல், பூசணிக்காய் பச்சடி அல்லது வெண்டக்காய் பச்சடி, சிறு கிழங்கு பொறியல் வகைகள் என தயார் செய்து பொங்கல் விருந்து தடபுடலாக நடைபெறும்.

பொங்கல் அன்று மதியம் இதனை உண்டு ஒய்வெடுத்த பின்னர் இரவில் மீதமிருக்கும் (கட்டாயம் மீதமிருக்கும். அதற்காகவே அனைத்தையும் அதிகமாக வைப்பார்கள்) இடிசாம்பார், அவியல், பச்சடி என எல்லாம் போட்டு 'சுண்டக்கறி' வைக்கும் படலம் இனிதே துவங்கும்.

அதென்ன சுண்டக்கறி?

மதியம் வைத்த இடி சாம்பார், அவியல், பச்சடி, பொறியல் என அனைத்தையும் ஒரு பெரிய பாத்திரத்தில் ஒன்றாய் சேர்த்து அதனை மிதமான தீயில் சூடேற்ற வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சமைச்சா போதுமா? அடுப்ப கிளீன் பண்றது யாரு? இந்த 2 பொருட்கள் போதும்...
Pongachorum Sundakariyum

இந்த கலவைகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து சுண்டி வரும். அதன் வாசனையே ஒரு விதமாக ரம்மியமாக இருக்கும். அதான் சுண்டக்கறி!

இந்த கலவையோடு தேவைக்கேற்ப சற்று புளிக்கரைசல் மற்றும் மிளகாய் வத்தல் பொடி, உப்பு சேர்த்து மண் சட்டியில் சுண்ட வைத்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.

பொங்கச் சோறு:

பொங்க விட்ட (பொங்கலிட்ட) சாதத்தை முந்தைய நாள் இரவில் தண்ணீர் விட்டு வைத்து விடுவோம். இந்த சாதம் தான் எங்களுக்கு மறுநாள் மதிய உணவு.

இந்த பொங்கச்சோறில் (பழைய சோறு) தயிர் விட்டு பிசைந்து சுண்டக்கறியை வைத்து சாப்பிட்டால் (அமிர்தம் சாப்பிட்டது போல அவ்வளவு ருசி) பச்சரிசி சாதம் உருண்டை உருண்டையா உள்ளே போறதே தெரியாம வயித்தை ரொப்பிடும்.

பொங்கலுக்கு மறுநாளுக்கு மறுநாள் பொங்கல் சோறு தீர்ந்திடும். ஆனா சுண்டக்கறி மட்டும் கொஞ்சம் இருக்கும். சூடாக சாதம் வடிச்சு சுண்டக்கறி சேர்த்து அதில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் தேவாமிர்தமாக இருக்கும்!

அதே சுண்டக்கறியை சூடாக தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் ஆகா...சுவையோ சுவை!

பொங்கல் முடிந்த இரண்டு நாட்களுக்கு சுண்டக்கறிதான் எல்லாத்துக்கும் தொடுகறி!

இதையும் படியுங்கள்:
ராஜஸ்தானி கெர் சங்ரி சப்ஜி, தமிழ் நாட்டு சுண்டைக்காய் பொடி செய்யலாம் வாங்க!
Pongachorum Sundakariyum

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com