ஒரு வருடம் கெடாத பாட்டி காலத்து நெல்லிக்காய் ஊறுகாய்: சீக்ரெட் ரெசிபி!

ஆவியில் வேகவைத்து ரசாயனம் இல்லாமல் பாரம்பரிய முறையில் ஆரோக்கியமான நெல்லிக்காய் ஊறுகாய் செய்யும் எளிய முறை.
நெல்லிக்காய் ஊறுகாய்
நெல்லிக்காய் ஊறுகாய்Gemini image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

பாட்டி காலத்து பாரம்பரிய முறையில், ரசாயனப் பொருட்கள் எதுவும் சேர்க்காமல் ஒரு வருடம் வரை கெடாத நெல்லிக்காய் ஊறுகாய் செய்யும் முறையைப் பற்றி இப்பதிவில் காணலாம். 

பெரிய நெல்லிக்காய் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த மருத்துவ குணம் கொண்ட கனியாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, செரிமானத்தை ஒழுங்கு படுத்துகிறது, மலச்சிக்கல் பிரச்சினையை போக்குகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிக அளவில் கிடைக்கும் நெல்லிக்காய்களை பச்சடி, கலந்த சாதம், தொக்கு, ஊறுகாய் என விதவிதமாக செய்து அசத்தலாம்.

ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள்: 

பெரிய நெல்லிக்காய் ஒரு கிலோ நல்லெண்ணெய் -250 மில்லி 

கடுகு - 2 ஸ்பூன் 

வெந்தயம் -2 ஸ்பூன் 

மிளகாய் தூள் -100 கிராம் 

பெருங்காயத்தூள் -1 ஸ்பூன் 

கல் உப்பு -தேவையான அளவு 

மஞ்சள் தூள் -2 ஸ்பூன்

நெல்லிக்காய்களை முதலில் நன்கு கழுவி, ஈரம் போக ஒரு காட்டன் துணியால் நன்கு துடைத்து உலர விடவும். இட்லி பானையில் தண்ணீர் விட்டு அதன் மேல் இட்லித் தட்டை வைத்து நெல்லிக்காய்களை 10 நிமிடங்களுக்கு ஆவியில் வேக விடவும். சிலர் நெல்லிக்காய்களை தண்ணீரில் வேக வைத்து செய்வார்கள். இது நீண்ட நாட்களுக்கு வராது. பிரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை சாப்பிடலாம்.

நெல்லிக்காய் ஊறுகாய்
நெல்லிக்காய் ஊறுகாய்Gemini image

வெந்ததும் சிறிது ஆறவிட்டு நெல்லிக்காய்களை கட்டை விரலால் சிறிது அழுத்தி விட கொட்டைகள் பிரிந்து தனியாக வரும். கொட்டைகளை எடுத்துவிட்டு இதனை ஒரு துணியில் பரத்தி சிறிது நேரம் காற்றில் உலர விடவும்.

அதற்குள் ஒரு வாணலியில் வெந்தயம், கடுகு இரண்டையும் சேர்த்து எண்ணெய் எதுவும் சேர்க்காமல் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். கல் உப்பையும் வெறும் வாணலியில் லேசாக சூடு செய்து கொள்ளவும். சூடு ஆறியதும் அவற்றை மிக்ஸியில் போட்டு நைசாக பொடித்து எடுக்கவும். இப்பொழுது வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து விடவும். கடுகு பொரிந்ததும் பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்துவிட்டு மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து அத்துடன் தயாராக வைத்துள்ள நெல்லிக்காய் சுளைகளையும் சேர்த்துக் கிளறவும்.

அதிக சூட்டில் மிளகாய் தூள் சேர்த்தால் கருகிவிடும், ருசியும் மாறிவிடும். இப்பொழுது அடுப்பைத் திரும்பவும் பற்ற வைத்து, மிதமான சூட்டில் வைத்து பொடித்த வெந்தய, கடுகு மற்றும் கல் உப்புக் கலவையை சேர்த்து நன்கு கிளறவும். மசாலாக்கள் அனைத்தும் நெல்லிக்காயில் நன்கு படுமாறு கிளறி எடுத்து விடவும். சூடு ஆறியதும் பீங்கான் ஜாடி அல்லது கண்ணாடிப் பாத்திரத்தில் பத்திரப்படுத்த ஒரு வருடம் ஆனாலும் கெடாது; ருசியிலும் மாற்றம் இராது.

இதையும் படியுங்கள்:
சமையலறையில் கரப்பான் பூச்சி தொல்லையா? விரட்டியடிக்க இந்த 5 இயற்கை வழிகள் போதும்!
நெல்லிக்காய் ஊறுகாய்

முக்கிய குறிப்புகள்: 

1. கடுகு, வெந்தையப் பொடி, நல்லெண்ணெய் ஆகியவை இயற்கையான பிரிசர்வேட்டிவ்ஸ்கள்(preservatives). இதனை சேர்ப்பதால் உடலுக்கு கேடு எதுவும் வராது.

2. ஊறுகாய் செய்ய பயன்படுத்தும் கரண்டி, பாத்திரம், சேமிக்கும் ஜாடி மற்றும் நம் கைகள் எதிலும் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஈரப்பதம் ஊறுகாயை பூஞ்சை பிடிக்க செய்து விடும்.

3. அதேபோல் ஊறுகாயை எடுப்பதற்கு உலர்ந்த மரக்கரண்டி அல்லது ஸ்பூனைப்பயன்படுத்தவும்.

4. ஊறுகாய்க்கு மேல் ஒரு இன்ச் அளவிற்கு நல்லெண்ணெய் இருப்பது ஊறுகாய் கெடாமல் பாதுகாக்க உதவும். எனவே மேலே குறிப்பிட்ட அளவில் நல்லெண்ணையை பயன்படுத்துவது சிறப்பு. 

இதையும் படியுங்கள்:
10 நிமிடத்தில் சமையல் முடிக்கும் மேஜிக் இன்ஸ்டன்ட் மசாலா விழுதும் பொடியும்!
நெல்லிக்காய் ஊறுகாய்

5. ஊறுகாய்க்கு பொடி உப்பு ஏற்றது அல்ல. கல் உப்பு தான் சிறந்த தேர்வு. ஊறுகாய்க்கு சேர்க்கும் உப்பில் தான் இருக்கிறது ரகசியம். காரம் மற்றும் புளிப்புக்கு ஏற்ப உப்பை சேர்க்க வேண்டும்.

6. ஊறுகாய் செய்தவுடன் பயன்படுத்தாமல் ஜாடியில் போட்டு அதன் வாயை ஒரு காட்டன் துணியால் கட்டி மூன்று நாட்கள் வைக்கவும். தினமும் ஒரு முறை உலர்ந்த மரக்கரண்டியால் கிளறி வரவும். நான்காவது நாள் நெல்லிக்காயின் சாறு, மசாலா மற்றும் எண்ணெய் பிரிந்து பார்ப்பதற்கு பளபளவென்று இருப்பதுடன் நெல்லிக்காயினுள் உப்பு காரம் இறங்கி ருசியாக இருக்கும்.

இந்த பாரம்பரிய செய்முறையைப் பின்பற்றுவதன் மூலம், எவ்வித ரசாயனப் பொருட்களும் இன்றி உங்கள் குடும்பத்தினருக்கு ஊட்டச்சத்து நிறைந்த, நாவிற்கு சுவையான நெல்லிக்காய் ஊறுகாயை ஒரு வருடம் வரை கெடாமல் அப்படியே பாதுகாத்து பயன்படுத்த முடியும்.

logo
Kalki Online
kalkionline.com