
வாழைத்தண்டை நார் இல்லாமல் நறுக்கி லேசாக எண்ணையில் வதக்கி வைத்துக்கொள்ளவும். இரண்டு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, நாலு மிளகாய் வற்றல் ஆகியவற்றையும் எண்ணையில் வறுத்து, தேவையான அளவு உப்பு, பூண்டு சேர்த்து செய்யும் சட்னி சுவையாக இருக்கும்.
நீங்கள் செய்யும் சட்னியில் உப்பு அதிகமாகிவிட்டால், உருளைக் கிழங்கை இரண்டாக வெட்டி அதில் போட்டால் உப்பை உருளைக்கிழங்கு உறிஞ்சிவிடும்.
புதினா, கொத்துமல்லி சட்னி அரைக்கும்போது உப்பு போடாமல் அரைக்கவும். தேவைப்படும்போது எடுத்து உப்பு சேர்த்தால் சட்னி பச்சை நிறம் மாறாமலும் நல்ல ருசியுடனும் இருக்கும்.
தக்காளி சட்னி செய்யும்போது, எள்ளை வறுத்துப் போட்டு அரைத்தால் மணம் தூக்கலாக இருப்பதுடன் ஆரோக்கியத்துக்கும் நல்லது.
கொத்தமல்லி சட்னி மீந்துவிட்டால் மோரில் சட்னியைப் போட்டுக் கரைத்து விடுங்கள். மசாலா மோர் போல் சுவையாக இருக்கும்.
இட்லிக்கு தொட்டுக்கொள்ள சட்னி செய்யும்போது பொட்டுக்கடலை, தேங்காயுடன், வறுத்த வேர்க்கடலையையும் சேர்த்து அரைத்தால் சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.
கத்தரிக்காய் சட்னி, வெங்காயச்சட்னி, தக்காளி சட்னி செய்யும் போது சிறிதளவு கறுப்பு உளுந்தை எண்ணையில் வறுத்து, கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து சட்னியுடன் கலந்தால், சுவை அசத்தலாக இருக்கும்.
சட்னிக்காக தேங்காயை உடைக்கும்போது கண் உள்ள பாகத்தை முதலில் உபயோகித்து விடவேண்டும். ஏன் என்றால் அந்தப் பகுதிதான் விரைவில் கெட்டுப்போகும்.
மீதமான தேங்காய் சட்னியை கெட்டியான புளிப்பு மோரில் சேர்த்து ஒரு கொதிவிட்டால் சுவையான மோர்க்குழம்பு ரெடி.
மிகுந்துவிட்ட தேங்காய் சட்னியை ரவாதோசை மாவில் கலந்து தோசை வார்த்தால் தோசை மிகவும் சுவையாக இருக்கும்.
இட்லிக்கு தொட்டுக்கொள்ள அரைத்த தேங்காய் சட்னி மிகுந்துவிட்ட தா? அதில் ஒரு கப் தயிர்விட்டு நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி, பொடியாக நறுக்கிய வெங்காயம், சிறிதளவு உப்பு கலந்தால் சுவையான ராய்த்தா தயார்!