தினமும் காலையும் மாலையும் டிபனுக்கு சட்னி அரைப்பது என்பது சிறிது கஷ்டமான காரியம் தான். சட்னி பவுடரை தயாராக செய்து வைத்திருந்தால் ஒரே நிமிடத்தில் சட்னியை தயாரித்து விடலாம். இது வேலைக்கு செல்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். காலை அவசரத்திற்கு கை கொடுக்கும் இந்த சட்னிப் பொடிகளை எப்படி செய்யலாம் என்று இப் பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
மிளகாய் வற்றல் - 14 (காரத்திற்கு ஏற்ப கூட்டியும் குறைத்தும் கொள்ளலாம்)
தேங்காய் துருவல் - 1/2 கப்
கட்டிப் பெருங்காயம் - சிறிது
வெல்லம் - சிறிது
செய்முறை:
அடி கனமான வாணலியில் தனித்தனியாக கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், தேங்காய்த் துருவல், கட்டிப் பெருங்காயம் அனைத்தையும் பொன் கலர் வரும் வரை வறுக்கவும். தேங்காய் துருவலுக்கு பதில் உலர்ந்த தேங்காய்த் துருவலையும் பயன்படுத்தலாம். உலர்ந்த தேங்காய்த் துருவல் சீக்கிரம் வறுபட்டு விடும். சிறிது ஆறியதும் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து தேவையான உப்பு, வெல்லத்தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து மிக்ஸியில் நைசாக பொடித்து எடுக்கவும். ஆறியதும் காற்று புகாத டப்பாவில் சேமித்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.
இதனை இட்லி, தோசைக்கு நல்லெண்ணெயுடன் குழைத்தும் சாப்பிடலாம். சூடான சாதத்தில் இதனைப் போட்டு பிசைந்து, தயிர் பச்சடியுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். பொரியல்கள் செய்யும்போது சுவையை கூட்டவும் இந்த சட்னிப் பொடியை கடைசியாக 2 ஸ்பூன் தூவிக் கிளறலாம்.
தேவையான பொருட்கள்:
ஆளி விதை - 1/2 கப்
கறுப்பு உளுந்து - 1/2 கப்
கடலைப்பருப்பு - 1/4 கப்
மிளகாய் வற்றல் - 10
பூண்டு பற்கள் - 6
உப்பு - தேவையானது
செய்முறை:
அடி கனமான வாணலியில் ஒவ்வொரு பொருட்களாக போட்டு நன்கு சிவக்க வறுத்தெடுக்கவும். முதலில் ஆளி விதையை சேர்த்து நன்கு வறுத்து எடுக்கவும். பிறகு கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன் கலர் வரும் வரை வறுத்தெடுக்கவும். கடைசியாக மிளகாய் வற்றலை வறுத்தெடுத்து விட்டு பூண்டையும் சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும். சிறிது ஆறியதும் அனைத்துப் பொருட்களையும் சேர்த்து தேவையான உப்பு போட்டு மிக்ஸியில் பொடித்தெடுக்க மிகவும் ருசியான சத்துக்கள் நிறைந்த ஆளி விதை பூண்டு சட்னி பொடி தயார்.
இதனை சாதத்தில் சிறிது நெய் விட்டு 2 ஸ்பூன் பொடியை சேர்த்து கலந்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். இட்லி, தோசை, பொங்கலுக்கும் சிறிது தண்ணீர் விட்டு குழைத்து உபயோகிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
வெள்ளை எள் - 100 கிராம்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 10
உப்பு - தேவையானது
புளி - சிறிய எலுமிச்சையளவு
பெருங்காயம் -
சிறு கட்டி (அ) பெருங்காயத்தூள்
செய்முறை:
அடி கனமான வாணலியில் வெள்ளை எள்ளை சேர்த்து நன்கு பொரியும் வரை வறுத்தெடுக்கவும். நல்ல தரமான எள்ளை வாங்கினால் சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. சிலவற்றில் கல், மண் போன்றவை இருக்கும். அப்படி இருந்தால் அவற்றை தண்ணீரில் நன்கு அலசி வடிகட்டி வாணலியில் போட்டு வறுக்கவும். சிறிது நேரத்தில் பொரிந்து வெடிக்க ஆரம்பிக்கும்.
அந்த சமயத்தில் தட்டில் கொட்டிவிடவும். பிறகு உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் இரண்டையும் சேர்த்து நன்கு வறுத்தெடுக்கவும். புளியை தூசி தும்பு இல்லாமல் சுத்தம் செய்து பெருங்காய கட்டியுடன் சேர்த்து வெறும் வாணலியில் சிறிது நேரம் பிரட்டி எடுக்கவும்.