சௌசௌ காயில் இவ்வளவு சுவையா? அல்வா முதல் கிரேவி வரை!

எளிய பொருட்களில் நாவிற்கு விருந்தளிக்கும் சௌசௌ ஸ்பெஷல் உணவுகள்!
சௌசௌ சமையல்
சௌசௌ சமையல்Gemini image
Updated on

சௌசௌவை அல்வா, சட்னி, பாயசம், பஜ்ஜி, கிரேவி என ஐந்து வகையில் சுவையாக சௌசௌ சமையல் செய்வது குறித்து இந்த கட்டுரை விளக்குகிறது.

1. சௌசௌ அல்வா

தேவையான பொருட்கள்:

துருவிய சௌசௌ காய் – 2 கப்

பசும் பால் – 1 கப்

சர்க்கரை – ¾ கப்

நெய் – 3 டீஸ்பூன்

முந்திரி – 10

செய்முறை:

சௌசௌ துருவலை நெய்யில் வதக்கவும். பின்னர் அதனுடன் பால் சேர்த்து வேகவிடவும். சர்க்கரை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும். கெட்டியான உடன் நெய்யில் வறுத்த முந்திரி வறுத்து சேர்த்து இறக்கவும். அல்டிமேட் சுவையில் சௌசௌ அல்வா ரெடி.

2. சௌசௌ சட்னி

தேவையான பொருட்கள்:

சிறிய சௌசௌ, தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று,

இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்),

பச்சை மிளகாய் - 5,

கறிவேப்பிலை - சிறிது,

கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,

எண்ணெய் - 2 டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, சௌசௌ சேர்த்து வதக்கவும். ஆறியதும், உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதுடன் சேர்க்கவும். சுவையான சௌசௌ சட்னி ரெடி.

3. சௌசௌ பாயசம்

தேவையான பொருட்கள்:

சௌசௌ - 1,

சர்க்கரை - அரை கப்,

பால் - 2 கப்,

பொடித்த ஏலக்காய் - அரை டீஸ்பூன்,

முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் - சிறிதளவு,

வெனிலா எஸன்ஸ் - 2 சொட்டு,

நெய் - சிறிதளவு,

சௌசௌ சமையல்
சௌசௌ சமையல்Gemini image

செய்முறை:

சௌசௌவை நன்கு கழுவி, தோல் சீவி, துண்டு துண்டாக நறுக்கி நீர் விட்டு குக்கரில் வேகவிடுங்கள். வெந்தவுடன் எடுத்து, மிக்ஸியில் போட்டு மைபோல் அரைத்து, அதனுடன் ஒரு கப் பாலும், சர்க்கரையும் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு கொதிக்கவையுங்கள். நன்கு கொதித்தவுடன் மீதி பாலையும் சேருங்கள்.

கடைசியில் முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், பொடித்த ஏலம் போட்டு இறக்குங்கள். இதனுடன் வெனிலா எஸன்ஸ் 2 சொட்டு விட்டு இறக்குங்கள். சூப்பர் சுவையில் சௌசௌ பாயாசம் தயார்.

4. சௌசௌ பஜ்ஜி

தேவையான பொருட்கள்:

சௌசௌ (சிறியதாக) - 1 ,

கடலை மாவு - 1 கப்,

அரிசி மாவு - 1 டீஸ்பூன், மைதா - 1 டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,

ஆப்ப சோடா - 1 சிட்டிகை,

மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்,

உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

சௌசௌவை தோல், விதை நீக்கி வில்லைகளாக நறுக்குங்கள். எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை மாவுடன் ஒன்றாக சேருங்கள். தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து சௌசௌ துண்டுகளை மாவில் நன்கு நனைத்து எடுத்து, எண்ணெயில் போட்டு இரு புறமும் திருப்பிவிட்டு நன்கு வேகவிட்டு எடுங்கள். வித்தியாசமான சுவையில் சௌசௌ பஜ்ஜி தயார்.

இதையும் படியுங்கள்:
நாவில் கரையும் தித்திப்பு அடை: பலாப்பழம் மற்றும் ராகி அடை ஸ்பெஷல்!
சௌசௌ சமையல்

5. சௌசௌ கிரேவி

தேவையான பொருள்கள்:

சௌசௌ -. ஒன்று (பெரியது),

வெங்காயம் - 1,

தக்காளி - 1,

பச்சை மிளகாய் - ஒன்று, இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்,

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,

மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்,

தனியா தூள் - ஒரு ஸ்பூன்,

உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவைக்கேற்ப, தேங்காய் - அரை மூடி (விழுதாக அரைத்துக்கொள்ளவும்.),

தாளிக்க:

பட்டை - ஒரு துண்டு,

லவங்கம் - இரண்டு,

பிரிஞ்சி இலை - ஒன்று

செய்முறை:

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். சௌசௌவை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

இதையும் படியுங்கள்:
பேக்கரி சுவையில் 5 விதமான பிரெட் உணவுகள்: வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்!
சௌசௌ சமையல்

பின்னர் தக்காளி சேர்த்துக் குழைய வதக்கவும். தக்காளி வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள சௌசௌ துண்டுகளை சேர்க்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், தனியா தூள், உப்பு சேர்த்து பிரட்டவும். காய் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். சௌசௌ நன்கு வெந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கொதிக்கவிடவும்.

பின்னர் உப்பு சரிப்பார்த்து, கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். சுவையான சௌசௌ கிரேவி தயார். இது சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். சப்பாத்திக்கும் பொருத்தமான சைட் டிஷ்.

தினமும் ஒரே மாதிரியான உணவுகளைச் செய்து அலுத்துப் போனவர்களுக்கு, இந்தச் சௌசௌ சமையல் செய்முறைகள் மூலம் உணவில் புதுமையையும் சிறந்த சுவையையும் கொண்டு வர முடியும்.

logo
Kalki Online
kalkionline.com