
தோசைமாவு நீர்த்திருந்தால் பாலில் இரண்டு ஸ்பூன் ரவை மற்றும் அரிசி மாவு சேர்த்து அதனுடன் கலந்துவிட்டால் போதும். மேலும் நீர்த்துப்போகாது. புளிப்பும் தெரியாது.
சாம்பார் நீர்த்துவிட்டதா? சிறிது நேரம் அப்படியே வைத்திருந்தால் மேலே தெளிவாக தண்ணீர் தேங்கும். அதை கவனமாக இறுத்து விட்டால் சாம்பார் கெட்டியாகிவிடும்.
பருப்புப் பாயசமோ, ஜவ்வரிசி பாயசமோ நீர்த்துப்போனால் அதில் இரண்டு ஸ்பூன் சோளமாவு அல்லது பால் பவுடர் போட்டுக்கலந்து, இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிட்டால், பாயசம் கெட்டியாகிவிடும்.
குருமா நீர்த்துவிட்டால், அத்துடன் ஒரு கைப்பிடி நூடுல்ஸை போட்டுக்கொதிக்க வைத்தால் குருமா கெட்டியாகிவிடும் என்று மட்டுமல்லாமல் சுவையும் அதிகரிக்கும்.
பொங்கல் நீர்த்துவிட்டால் சிறிது அளவு ரவையை வறுத்துப் பொங்கலோடு சேர்த்துக்கிளறினால் பொங்கல் கெட்டியாகிவிடும். ருசிகூடுமே தவிர குறையாது.
அடைமாவு நீர்த்துவிட்டால், சிறிதளவு கார்ன்ஃப்ளேக்ஸ் தூள் கலந்துகொண்டு வார்த்தால் சுவையான, மிருதுவான அடை ரெடி.
கூட்டு, குழம்பு சற்றே நீர்த்துவிட்டால், பொட்டுக்கடலை மாவைக்கரைத்து விடலாம். கூட்டு, குழம்பு கெட்டியும் ஆகும். சுவையும் கூடும்.
வெஜிடபிள் சாலட் நீர்த்துப்போய்விட்டால் நான்கைந்து பிரட் துண்டுகளை வறுத்துப் போடவும். சாலட் சரியாகி விடுவதுடன் மேலும் சுவையாக இருக்கும்.
முறுக்குமாவு, தேன்குழல்மாவு நீர்த்துவிட்டால் டிஷ்யூ பேப்பரில் மாவை வைத்து சற்று புரட்டி எடுத்தால் ஈரம் உறிஞ்சப்பட்டு மாவு பக்குவமாகிவிடும்.
கோதுமை அல்வா, மைதா அல்வா செய்யும்போது பதம் தவறி நீர்த்துவிட்டால் சிறிதளவு சோளமாவைக் கரைத்துச் சேர்த்துப்பாருங்கள். அல்வா கெட்டிப்படுவதுடன் சுவையும் அதிகரிக்கும்.
பட்டாணி சூப் நீர்த்துப்போய்விட்டால் ஒரு தேக்கரண்டி அவலை வறுத்துப்பொடி செய்து, அதில் சேர்த்துக் கொதிக்க வைத்தால் சூப் கெட்டியாகிவிடும்.
பாயசம் நீர்த்துவிட்டால் அதனுடன் வாழைப்பழத்தை மசித்துச் சேர்த்தால் கெட்டியாகிவிடும்.
சாம்பார், வத்தக்குழம்பு என வைக்கும்போது, சில சமயங்களில் அதில் காரம் அதிகமாகிவிடும். அதில் நல்லெண்ணெயை ஊற்றிக்கொஞ்சம் கொதிக்க விடுங்கள். காரம் குறைந்து விடும் என்று மட்டுமல்லாமல் குழம்பின் வாசனையும் நன்றாக இருக்கும்.
சட்னியில் உப்பு அதிகமாகி விட்டால் உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி அதில் போட்டால்போதும். உப்பை அது உறிஞ்சி எடுத்துவிடும்.
சாம்பாரிலோ, அல்லது காரக்குழம்பிலோ புளிப்புச்சுவை அதிகமாகிவிட்டால், ஒரு துண்டு வெல்லம், மற்றும் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கொதிக்கவிடவும். புளிப்புச்சுவை மட்டுப்படும்.
பொடி வகைகளில் உப்பு அதிகமாகிவிட்டால் அதிலுள்ள பருப்பு எதுவோ, அதைக் கொஞ்சம் வாணலியில் வறுத்து, தனியாக பொடி செய்து, நன்கு கலந்துவிட்டால் உப்பு குறைந்துவிடும்.
வெங்காயத்தை ஒரு ஸ்பூன் எண்ணெயில் வதக்கி, மிக்ஸியில் அரைத்துச் சேர்த்தால், குழம்பு, சாம்பார் வகைகளில் புளிப்பு மட்டுப்படும்.