
தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சியை, பச்சை மிளகாயுடன் சிறிது எண்ணையில் வதக்கி, உப்புடன் மிக்ஸியில் அரைத்து, தாளித்த சாதத்துடன் கலந்துவிட்டால் சுவையான இஞ்சி சாதம் ரெடி.
தோசைக்கு மாவு அரைக்கும்போது, தோல் நீக்கிய மூன்று உருளைக் கிழங்குகளை துண்டுகளாக்கி, மாவுடன் சேர்த்து தோசை வாருங்கள். தோசையின் ருசியே அலாதிதான்.
இன்ஸ்டன்ட் பருப்பு வடை, மற்றும் மசால் வடை செய்ய வேண்டுமா? ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து தேவையான பருப்புகளைப் போட்டு ஐந்து நிமிடங்கள் அப்படியே வேகவைத்து, அடுப்பை அணைத்து விடுங்கள். அரை வேக்காடாக இருக்கும் பருப்புகளுடன், மற்ற பொருட்களையும் சேர்த்து அரைத்து விரும்பிய வடைகளை உடனே பொரித்து எடுக்கலாம்.
பயத்தம் பருப்பு சேர்த்து கீரைக்கூட்டு செய்கிறீர்களா? அடுப்பிலிருந்து இறக்கி வைத்ததும் காய்ச்சிய பால் கால் டம்ளர் சேர்த்தால் கூட்டு கூடுதல் சுவையுடன் இருக்கும்.
போளி செய்யும்போது துருவிய கேரட்டுடன் வெல்லம், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து பூரணமாக்கி போளி செய்தால் வித்தியாசமான சுவையில் வெஜிடபிள் போளி தயார்.
அவசரமாக பிரட் டோஸ்ட் செய்யும்போது ஃப்ரிட்ஜிலிருக்கும் கட்டி வெண்ணைய் கை கொடுக்காது. கேரட் துருவியால் வெண்ணையைத் துருவினால் வேலை சுலபமாக முடிந்துவிடும்.
உப்புமா, வெண்பொங்கல் போன்றவை சமைத்த கொஞ்ச நேரத்திலேயே கெட்டியாகிவிடும். அரைக்கரண்டி சூடான பாலை அதில் ஊற்றிக்கிளறிவிட்டால் நன்கு இளகிவிடும். சுவையும் மாறாது.
புளிப்பில்லாத மாங்காய்களை தோல் நீக்கி வேகவைத்து சர்க்கரைப் பாகுடன் அடுப்பில் வைத்துக்கிளறி பிரட், சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள சுவையான மாங்காய் ஜாம் தயாரிக்கலாம்.
ஊறுகாய் தயாரித்த கடாயில் மிச்சமிருக்கும் விழுதை வேஸ்ட் செய்யவேண்டாம். இரண்டு ஸ்பூன் துருவிய தேங்காய், அரைக்கப் சாதம், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை அந்தக் கடாயில் போட்டு கிளறி எடுத்தால் சுவையான ஊறுகாய் சாதம் தயார்.
கத்தரிக்காயை சுட்டு பச்சடி, கொத்சு, துவையல் போன்றவை செய்யும்போது, கத்திரிக்காயின் மீது நல்லெண்ணெய் தடவி ஒரு தட்டில் வைத்து குக்கரில் சாதம் வைக்கும்போது வைத்துவிடுங்கள். இதனால் கத்திரிக்காயின் தோலை சுலபமாக நீக்கலாம். காய் பாகத்தை கையால் பிசைந்தால் கூழாகிவிடும். விரும்பிய பதார்த்தத்தை விரைவில் தயாரிக்கலாம்.
இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சாம்பார் செய்யும்போது, வெறும் கடாயில் வெந்தயம், மற்றும் சீரகத்தை வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள். சாம்பார் கொதித்து இறக்கும் தருவாயில் இந்தப் பொடியை சேர்த்தால் சாம்பாரின் சுவை பிரமாதமாக இருக்கும்.
இட்லிமாவில் சிறிது சோளமாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கரைக்கவும். காலிஃ ப்ளவர் துண்டுகளை கரைத்த மாவில் முக்கியெடுத்து பொரித்தால் சுவையான கோபி மஞ்சூரியன் ரெடி.