
வெஜிடபிள் இட்லி
தேவை:
பாசிப் பருப்பு - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1 கப்
ரவை - 1 கப்
இஞ்சி - சிறிய துண்டு (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 5
பெருங்காயத்தூள் - 2 ஸ்பூன்
நெய் - 1 ஸ்பூன்
கேரட் - 1 (துருவியது)
பச்சை பட்டாணி - 50 கிராம் (வேக வைத்தது)
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். ஊறியவுடன், தண்ணீரை வடித்து விட்டு, பருப்புடன் பச்சைமிளகாய், இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு கேரட்டை பொடியாக துருவிக் கொள்ளவும், ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவுடன் ரவை, துருவிய கேரட், மஞ்சள் தூள், வேகவைத்த பச்சை பட்டாணி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, தேவையான அளவு உப்பையும் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
பின்பு இட்லி தட்டில் சிறிது நெய்யைத் தடவி, அதில் இந்த மாவை ஊற்றி வேக வைத்து எடுத்தால், சத்தான வெஜிடபிள் இட்லி தயார்.
இலை இனிப்பு அடை
தேவை:
பச்சரிசி 2 கப்
வெல்லம் - 1 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
ஏலக்காய் பொடி - சிறிது
கெட்டி அவல் - 1 டேபிள்ஸ்பூன்
வாழை இலை - 3,4
செய்முறை:
பச்சரிசியை ஒரு மணிநேரம் ஊறவைத்து, நைசாக அரைக்கவும். வெல்லத்தைப் பொடித்து, தேங்காய் துருவல், ஏலக்காய் பொடியை கலந்து, பூரணமாகக் கிளறவும். அவலை நீரில் களைந்து, வடித்து பூரணத்தில் சேர்க்கவும். வாழை இலைகளை சுத்தம் செய்து, துடைத்து, அதில் ஒரு கரண்டி மாவை விட்டு, பரப்பி வைத்து, நடுவில் பூரணத்தை உருட்டி வைத்து, இலையை மடித்து, இட்லி தட்டில் அப்படியே வேகவைக்கவும். இந்த இனிப்பு அடை, உடல் நலத்திற்கும் ஆரோக்கியமானது.
ஜோரான சமையல் டிப்ஸ் சில...
தக்காளி சூப் நீர்த்துப் போய்விட்டால், வேகவைத்த உருளைக்கிழங்கு ஒன்றை மசித்து சேர்த்தால், சூப் பதம் ஆகி, சுவையும் கூடும், சத்தும் கிடைக்கும்.
குருமா செய்யும்போது, தேங்காயின் அளவை குறைத்து, பாதாம் பருப்பை சேர்த்து அரைத்தால், சத்து நிறைய கிடைக்கும். மூளை வளர்ச்சிக்கும் நல்லது.
நீர் மோர் செய்யும்போது, கறிவேப்பிலையை அப்படியே போடாமல், அரைத்து, மோரில் கலந்து, சிறிது உப்பு போட்டால், கோடைக்கேற்ற சுவையான, சத்தான பானம் தயார்.
இட்லி மிளகாய் பொடி செய்யும்போது, வறுத்த தேங்காய் துருவல் அல்லது கொப்பரை துருவல் சேர்த்து அரைத்தால், சுவை கூடும். கர்நாடகாவில் இதற்கு சட்னி பொடி என்று பெயர்.
வெயில் காலத்தில் குளிர்ந்த பாலில் உறை ஊற்றினால் தான் தயிர் கெட்டி ஆக இருக்கும்.
மாங்காய் சீசன் வருவதால், துவையல்களில் புளிக்கு பதிலாக மாங்காய் சேர்க்கலாம்.
கேசரி, அல்வா போன்ற இனிப்புகள் செய்யும்போது, கேரட் சாறு கலந்தால் நல்ல நிறம் கிடைக்கும் உடலுக்கும் நல்லது.
சாம்பார், வற்றல் குழம்பு, புளியோதரைக்கு நல்லெண்ணையிலும், ரசத்திற்கு நெய்யிலும், மோர் குழம்புக்கு தேங்காய் எண்ணெயிலும் தாளித்தால் சுவையும், மணமும் கூடிவிடும்.
கேசரி, பர்பி, பால்கோவா போன்ற இனிப்புகள் செய்யும்போது, நான் ஸ்டிக் தவாவில் கிளறினால், அடி பிடிக்காது. கிளறுவதும் எளிது.
பொறியல்களில் தேங்காய் துருவலுக்கு பதிலாக, கேரட், துருவலை தூவலாம். நிறமும் அழகாக இருக்கும். கூடுதல் சத்தும் கிடைக்கும்.
பஜ்ஜி மாவில் கற்பூரவள்ளி இலைகளை அரைத்து சேர்த்தால், பஜ்ஜி மணக்கும். வயிற்று கோளாறுகளும் வராது.
பிழிந்த தேங்காய்ப்பாலை ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தால், மேலே வெண்ணைபோல் திரண்டு வரும். அதை எடுத்துவிட்டால், கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்களும் தைரியமாக இந்தத் தேங்காய் பாலை உட்கொள்ளலாம்.