உடல் எடையை மளமளவென குறைக்கணுமா? 10 நிமிஷத்துல ரெடியாகும் 'வெஜிடபிள் மசாலா ஓட்ஸ்'!

Vegetable Masala Oats
Vegetable Masala Oats
கிரி கணபதி

வணக்கம், என் பெயர் கிரி கணபதி. என்னைப் பற்றி அறிய ஆர்வம் காட்டியமைக்கு நன்றி! கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக Content Creation துறையில் இருக்கிறேன். Writing, Video Content, Podcast போன்றவற்றில் அனுபவம் உண்டு. உள்ளடக்க ஆராய்ச்சி மற்றும் AI கருவிகளைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன். ஆரோக்கியம், மோட்டிவேஷன், டெக்னாலஜி, சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். டிஜிட்டல் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் நான், நிலையான வசீகரிக்கும் உள்ளடக்கங்கள் மூலமாக வாசகர்களையும், பார்வையாளர்களையும் கவர முடியும் என முழுமையாக நம்புகிறேன்.

Updated on

நமது உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தாலே முதலில் நம் கையில் எடுப்பது ஓட்ஸ்தான். குறிப்பாக, உடல் எடையை ஒரு 75 கிலோவிலிருந்து 68 அல்லது 70 கிலோவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்யும்போது, கலோரி குறைவான அதே சமயம் வயிறு நிரம்பக்கூடிய உணவுகள் மிகவும் அவசியம். 

ஆனால், தினமும் அந்த இனிப்பான ஓட்ஸ் கஞ்சியைக் குடித்து நாக்கு செத்துப்போயிருக்கும். அதற்கு ஒரு சூப்பரான மாற்றுதான் இந்த காரசாரமான "வெஜிடபிள் மசாலா ஓட்ஸ்". காய்கறிகளின் சத்துகளுடன், நம் ஊர் மசாலா சுவையும் சேரும்போது, டயட் உணவு என்ற ஃபீலே இருக்காது. வாங்க, அதை எப்படி ஈஸியா செய்றதுனு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்!

  • ரோல்டு ஓட்ஸ் - 1 கப்

  • பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் & பச்சை பட்டாணி - ½ கப்

  • பெரிய வெங்காயம் - 1 

  • தக்காளி - 1 

  • பச்சை மிளகாய் - 1 

  • இஞ்சி பூண்டு விழுது - ½ டீஸ்பூன்

  • மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்

  • மிளகாய்த்தூள் - ½ டீஸ்பூன்

  • கரம் மசாலா - ½ டீஸ்பூன்

  • எண்ணெய் அல்லது நெய் - 1 டீஸ்பூன்

  • கடுகு, சீரகம், கறிவேப்பிலை - தாளிக்க

  • உப்பு - தேவையான அளவு

  • கொத்தமல்லித் தழை - சிறிதளவு.

செய்முறை:

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் விட்டுச் சூடாக்குங்க. நெய் சேர்த்தால் வாசனை இன்னும் தூக்கலாக இருக்கும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். சீரகம் பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்குங்க.

இதையும் படியுங்கள்:
வீட்டிலேயே செய்யலாம் இந்த தித்திக்கும் பாரம்பரிய தேங்காய் திரட்டுப் பால்!
Vegetable Masala Oats

வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை ஒரு நிமிடம் வதக்கிக்கோங்க. இப்போது பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்கு குழைய வதக்கவேண்டும். தக்காளி மசிந்தவுடன், நாம் தயாராக நறுக்கி வைத்துள்ள கேரட், பீன்ஸ், பட்டாணி போன்ற காய்கறிகளை உள்ளே போட்டு ஒருமுறை பிரட்டிவிடுங்க. இதோடு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து காய்கறிகளோடு மசாலா கலக்கும்படி கிளறவும்.

காய்கறிகள் வேகுவதற்குச் சிறிதளவு தண்ணீர் தெளித்து, மூடி போட்டு ஒரு 3 நிமிடம் மிதமான தீயில் வேகவையுங்க. காய்கறிகள் அரை வேக்காடு வெந்ததும், ஒரு கப் ஓட்ஸுக்கு இரண்டரை கப் என்ற அளவில் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்க விடுங்க. தண்ணீர் தளதளவெனக் கொதிக்கும்போது, ஓட்ஸை மெதுவாகக் கொட்டி, கட்டிகள் விழாமல் கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.

இதையும் படியுங்கள்:
அடுப்பை உபயோகிக்காமல் தயாரிக்கக்கூடிய ஆறு வகை ஆரோக்கிய சட்னிகள்!
Vegetable Masala Oats

இப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயை மூடி ஒரு 5 நிமிடங்கள் வேகவிடுங்க. ஓட்ஸ் தண்ணீரை முழுவதுமாக உறிஞ்சி, காய்கறிகளுடன் சேர்ந்து ஒரு தளர்வான, கிரீமியான பதத்திற்கு வரும்.

மூடியைத் திறந்து மேலே கொத்தமல்லித் தழைகளைத் தூவி ஒருமுறை கிளறி இறக்கினால், கமகமக்கும் "வெஜிடபிள் மசாலா ஓட்ஸ்" ரெடி. இதைச் சூடாகச் சாப்பிடும்போது காய்கறிகளின் க்ரஞ்ச், மசாலாவின் காரம் என நாக்குக்கு அவ்வளவு ருசியாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com