

கொழுக்கட்டை ரெசிபிகள்:
எள் வேர்க்கடலை மோதகம்.
தேவையானவை:
பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு_3கப்,எள்-1/2கப்,வறுத்த வேர்க்கடலை -1/2கப், பனங்கற்கண்டு -1/2கப், வெல்லத்துருவல்-1/4கப், ஏலக்காய்த்தூள் -2டீஸ்பூன், தேங்காய் துருவல், வறுத்தது-1/4கப்.
செய்முறை:
அரிசி மாவில் உப்பு, ந.எண்ணைய் ஒரு டீஸ்பூன் விட்டு அதில் கொதிக்கும் தண்ணீரை விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். ஐந்து நிமிடம் ஈரத்துணி போட்டு மூடி வைக்கவும். எள்ளை வறுத்து வறுத்த வேர்க்கடலை சேர்த்து பொடிக்கவும். இதில் பனங்கற்கண்டு, ஏலக்காய்த்தூள், வறுத்த தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதை பூரணமாக வைத்துக் கொள்ளலாம்.
மாவை நன்கு பிசைந்துகொண்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, அச்சிலோ அல்லது கையாலோ மோதகம் செய்து அதில் பூரணத்தை வைத்து நன்கு மூடிவைக்கவும்.
மாவில் எல்லா மோதகங்களை செய்து கொண்டு இட்லி பானையில் தண்ணீர் விட்டு சூடானதும் இட்லி தட்டில் செய்த மோதகங்களை அடுக்கி மூடி போட்டு 5-6நிமிடம் வேகவிடவும். ஐந்து நிமிடம் கழித்து திறந்து பார்த்து மாவு வெந்து மோதகம் பளபளப்பாக இருக்கும்போது எடுத்துவிடவும். சுவையான எள், வேர்க்கடலை மோதகத்தை பாத்திரத்தில் வைத்து விநாயகருக்கு படைக்கவும்.
தினை பைனாப்பிள் கொழுக்கட்டை
தேவையானவை: கிளறிய கொழுக்கட்டைமாவு -3கப்,தினை அரிசி மாவு-1கப், பொடியாக அரிந்து பைனாப்பிள்-1/4 கப்,குங்குமப்பூ-2சிட்டிகை, தேங்காய்ப் பால் -3கப், பொடித்த சர்க்கரை -1/4கப், மஞ்சள் ஃபுட் கலர்-1சிட்டிகை.
செய்முறை:
தேங்காய் பால், தண்ணீர் சேர்த்து கொதித்ததும் வறுத்த தினை மாவு சேர்த்து பாதி வெந்ததும் அரிந்த பைனாப்பிள் சேர்க்கவும். இவை நன்கு வெந்ததும் இலேசாக மசித்து கொண்டு இதனுடன் குங்குமப்பூ, சர்க்கரை சேர்த்து கலந்து ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்துகெட்டியானதும் இறக்கி ஆறவிடவும்.
கொழுக்கட்டை மாவில் உப்பு,ஃபுட்கலர் சேர்த்து சூடான நீரை விட்டு பதமாக பிசைந்து கொள்ளவும். மாவில் சின்ன சின்ன உருண்டைகளாக எடுத்து குழிவான செப்பு செய்து அதில் பூரணத்தை வைத்து விரும்பிய வடிவில் கொழுக்கட்டைகள் செய்யவும்.
இதை இட்லி பானையில் வைத்து ஆவியில் வேகவிட்டு பதமாக வெந்ததும் இறக்கவும். சுவையான தினை, பைனாப்பிள் கொழுக்கட்டை தயார்.
உளுந்து பொடி மணிக்கொழுக்கட்டை
தேவையானவை: இடியாப்ப மாவு, சிகப்பு மிளகாய் -3, உளுத்தம்பருப்பு-1டேபிள் ஸ்பூன், கடலைப் பருப்பு -1டேபிள் ஸ்பூன் கொப்பரைத் துருவல்-சிறிதளவு, தாளிக்க-எண்ணைய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு
செய்முறை:
இடியாப்ப மாவில் சுடுதண்ணீர் விட்டு உப்பு சேர்த்து நன்கு கலந்து மாவாக பிசைந்து கொள்ளவும். இதை சின்ன சின்ன மணிக் கொழுக்கட்டைகளாக செய்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, சீரகம் கறிவேப்பிலை தாளித்து பொரிந்ததும் வெந்த மணிக் கொழுக்கட்டைகள், சிகப்பு மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கொப்பரைத் துருவல் சேர்த்து நன்கு வறுத்து பொடித்து வைத்துக்கொண்டு அதை இதோடு சேர்க்கவும். சிறிது உப்பு, தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு கிளறி கருவேப்பிலை இஞ்சி சேர்த்து இறக்க சுவையான உளுந்து பொடி மணிக்கொழுக்கட்டை நிவேதிக்க தயார்.
பாலக், ஸ்வீட் கார்ன் கொழுக்கட்டை.
செய்முறை:
கொழுக்கட்டை மாவு-1கப், தக்காளி ஜுஸ்-1/2கப், வேகவைத்த ஸ்வீட் கார்ன் -1/4கப், பாலக் கீரை -1/2கட்டு, தேங்காய் துருவல் -1/2கப்,உப்பு, மிளகாய்த்தூள் -1/2டீஸ்பூன்.
தாளிக்க: -கடுகு, சீரகம், பெருங்காயம் கறிவேப்பிலை
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் கறிவேப்பிலை உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு வரமிளகாய் தாளித்து பொரிந்ததும் ஸ்வீட் கார்ன், மிகப் பொடியாக நறுக்கிய கீரை சேர்க்கவும். வதங்கியதும் உப்பு, தக்காளி ஜுஸ், தேங்காய் துருவல் சேர்த்து கொதி வரும்போது அரிசி மாவை தூவி கட்டி வராமல் கிளறவும். நன்கு வெந்ததும் இறக்கி ஆறவைத்து அதிலிருந்து சின்ன சின்ன பிடி கொழுக்கட்டைகளாக செய்து கொள்ளவும்.
இட்லி பானையில் தண்ணீர்விட்டு சூடானதும் அதில் இந்த பிடி கொழுக்கட்டைகளை அடுக்கி பின் மூடி போட்டு பத்து நிமிடம் வேகவிடவும். நன்கு வெந்து பளபளப்பானதும் இறக்கி பாத்திரத்துக்கு மாற்றி விநாயகருக்கு படைத்து பின் ருசிக்க சுவையான பாலக், ஸ்வீட் கார்ன் பிடி கொழுக்கட்டை தயார்.