திருமண மண்டபங்களில் வாழை இலை விரிக்கப்பட்டு, பந்தி பரிமாறப்படும் அந்த அழகே தனி. இலையில் பரிமாறப்படும் ஒவ்வொரு உணவிற்கும் ஒரு தனிப்பட்ட சுவை இருக்கும். அதில் பலராலும் பெரிதும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு வகைதான் கல்யாண வீட்டு கோஸ் பட்டாணி பொரியல். பொதுவாக வீடுகளில் முட்டைக்கோஸ் கொண்டு பொரியல் செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் அதனை சாப்பிடத் தயங்குவதுண்டு.
ஆனால், கல்யாண வீடுகளில் மட்டும் அந்தப் பொரியல் எப்படி அவ்வளவு சுவையாக இருக்கிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா? அந்தச் சுவைக்குப் பின்னால் சமையல் கலைஞர்கள் பயன்படுத்தும் ஒரு சில நுணுக்கமான ரகசியங்கள் உள்ளன. அந்தச் சிறிய ரகசியங்களைக் கொண்டு, அதே சுவையில் எப்படி பொரியல் செய்வது என்பதைப் பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ் - 2 கப்
பச்சை பட்டாணி - 1/2 கப்
பாசிப்பருப்பு - 2 ஸ்பூன்
துருவிய தேங்காய் - 3 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 1 சிறிய துண்டு
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்துகள்
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை!
சுவையான கோஸ் பட்டாணி பொரியல் செய்வதற்கு, காய்கறிகளை நறுக்கும் விதத்தில்தான் முதல் ரகசியமே அடங்கியுள்ளது. முட்டைக்கோஸை மிக மெல்லியதாகவும், ஒரே அளவாகவும் நறுக்கிக் கொள்ள வேண்டும். முதலில், பாசிப்பருப்பைச் சிறிதளவு தண்ணீரில் அரை வேக்காடு பதத்திற்கு வேகவைத்துத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். கல்யாண வீட்டுப் பொரியலில் அந்த மெதுமெதுப்பான தன்மையும், லேசான இனிப்புச் சுவையும் வருவதற்கு இந்தப் பாசிப்பருப்புதான் முக்கியக் காரணமாகும்.
பின்னர், அடுப்பில் ஒரு அகலமான கடாயை வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றவும். சாதாரண சமையல் எண்ணெயை விட தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும் போது பொரியலின் சுவையும் மணமும் பன்மடங்கு அதிகரிக்கும்.
எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்க வேண்டும். இஞ்சி லேசாக வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள முட்டைக்கோஸ் மற்றும் பச்சை பட்டாணியைச் சேர்த்து மிதமான தீயில் வதக்கத் தொடங்கவும்.
முட்டைக்கோஸ் வதங்கும் போது அதிலிருந்தே நீர் வெளிவரும் என்பதால், தனியாகத் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை. தண்ணீர் ஊற்றினால் காய்கறி குழைந்துவிடும். காய்கறிகள் முக்கால் பதம் வெந்தவுடன், முன்கூட்டியே வேகவைத்துள்ள பாசிப்பருப்பு மற்றும் தேவையான அளவு கல் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறிவிட வேண்டும்.
பொரியலில் உள்ள ஈரப்பதம் முழுவதும் வற்றியவுடன், புதிதாகத் துருவிய தேங்காயைச் சேர்த்து லேசாகப் பிரட்டிவிட்டு உடனடியாக அடுப்பை அணைத்துவிட வேண்டும். தேங்காய் சேர்த்த பிறகு பொரியலை அதிக நேரம் அடுப்பில் வைக்கக் கூடாது. அப்படியென்றால் தான் அதன் சுவை மாறாமல் இருக்கும். இப்போது சுடச்சுட, கல்யாண மண்டபங்களில் பரிமாறப்படுவது போன்றே அருமையான கோஸ் பட்டாணி பொரியல் பரிமாறத் தயார்.