குளிர்காலத்தில் தயிர் ஏன் உறைய மாட்டிங்குது? இந்த 5 தப்பை பண்ணாதீங்க!

பாலில் உள்ள அறிவியல் ரகசியம் என்ன? குளிரில் தயிர் உறைவதில் ஏற்படும் தவறுகளைத் தவிர்க்க வழிகள்.
தயிர்
தயிர்Gemini image
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on: 

பெரும்பாலானவர்களுக்கு உணவில் தயிர் இல்லாவிட்டால் சாப்பிட்ட மாதிரியே இல்லை என்பார்கள். சமைக்கத் தெரியாத பேச்சிலர்கள், சமைக்க முடியாத வயதானவர்கள் மற்றும் அவசர நேரங்களில் என அனைவருக்கும் அனைத்து நேரத்திலும் ஆபத்பாந்தவனாக இருப்பது தயிர் எனும் அமுதம் தான்.

தயிர் என்பது வெறும் உணவு மட்டுமல்ல; உடலுக்குத் தேவையான புரதம், கால்சியம் மற்றும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களைக் கொண்ட சத்தான உணவாகும். தினமும் சரியான அளவில் தயிர் சாப்பிடுவது செரிமானம் முதல் எலும்புகளின் ஆரோக்கியம் வரை பல நன்மைகளைத் தரலாம். குறிப்பாக தயிரில் உள்ள சில நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் குடலில் ஆரோக்கியமான சூழலைப் பராமரித்து குடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதால் தயிர் நமது அன்றாட உணவில் அவசியமாகிறது.

பாலைத் தயிராக மாற்றுவது ஒரு சிறிய அறிவியல் அதிசயமாக பார்க்கப்படுகிறது. பாலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள், பாலில் இருக்கும் சர்க்கரையை மாற்றுவதன் மூலம் தயிரை உருவாக்குகின்றன. பாலில் லாக்டோஸ் (Lactose): பால் சர்க்கரை. கேசீன் (Casein): பால் புரதம். தண்ணீர், கொழுப்பு, தாதுக்கள் போன்ற சத்துக்கள் உள்ளன.

பால் தயிராக மாற உறை ஊற்றும்போது என்ன நடக்கிறது?

ஏற்கெனவே தயாரான தயிரையே உறையாக ஊற்றுவோம். லாக்டிக் அமில பாக்டீரியாக்கள் உள்ள இந்தத் தயிரை வெதுவெதுப்பான பாலில் சேர்க்கும்போது, பாக்டீரியாக்கள் பெருகத் தொடங்குகின்றன.

பாக்டீரியாக்கள் பாலில் உள்ள லாக்டோஸை லாக்டிக் அமிலமாக மாற்றுகின்றன. இதனால் பாலின் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. பாலில் உள்ள கேசீன் புரதம் ஒன்று சேர்ந்து வலையமைப்பை உருவாக்குகிறது. இந்த வலையமைப்பு பாலில் உள்ள தண்ணீரைப் பிடித்துக்கொள்வதால் பால் கெட்டியாகி தயிராக மாறுகிறது.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். தற்போது குளிர்காலம் என்பதால் எப்படி உறை ஊற்றினாலும் தயிர் ஆக மாட்டேன் என்று கவலைப்படுபவரா நீங்கள்? கவலையை விடுங்கள். இதோ இந்த 5 வழிமுறைகளை கடைபிடித்து கெட்டித்தயிரை சந்தோஷமாக சாப்பிடுங்கள்.

தயிர்
தயிர்Gemini image

குளிர்காலத்தில் தயிர் சரியாக உறையாததற்கு பால் நன்றாகக் காய்ச்சப்பட்டுள்ளதா, உறை ஊற்றும் முறை, வைக்கும் இடம், வெப்பநிலை போன்ற பல காரணங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வீட்டிலேயே கெட்டியான, சுவையான தயிர் தயாரிக்கும் வழிமுறைகள் இதோ.

1. பாலை நன்றாகக் காய்ச்சுவது மிகவும் முக்கியமானது. பாலை நன்றாகக் காய்ச்சுவதுடன் மிதமான தீயில் 5–10 நிமிடங்கள் வைத்துவிட்டு இறக்கவும். இதனால் தயிரின் பதம் மேம்பட உதவும். குறிப்பாக பாலை நேரடியாக உறை ஊற்றுவதைத் தவிர்த்து பால் வெதுவெதுப்பாக இருக்கும்போது உறை ஊற்றுவதுதான் சரி.

2. சரியான அளவில் உறை சேர்ப்பது மிக முக்கியம். ஒரு லிட்டர் பாலுக்கு 1–2 டீஸ்பூன் புதிய தயிரை உறையாகப் பயன்படுத்தலாம். பால் மிகவும் சூடாக இருந்தால் தயிரில் உள்ள பாக்டீரியாக்கள் பாதிக்கப்படலாம். அதேபோல் பால் மிகவும் குளிர்ச்சியாக இருந்தால் தயிர் உறைய அதிக நேரமாகும் என்பதால் பால் வெதுவெதுப்பாக இருக்கும் போதுதான் உறையைச் சேர்த்துக் கலக்க வேண்டும்.

3. உறை ஊற்றும் பாத்திரத்தை வெதுவெதுப்பாக வைத்திருப்பது முக்கியமான ஒன்று. குளிர்காலத்தில் பால் விரைவாகக் குளிர்ந்துவிடும். எனவே, தயிர் உறைய வைக்கும் பாத்திரத்தை சற்றே சூடான நீரால் கழுவி, பின்னர் பாலை அதில் ஊற்றலாம். மண் பானை அல்லது தடிமனான பாத்திரம் வெப்பத்தை ஓரளவு தக்கவைக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

4. தயிர் உறைவதற்கு ஏற்ற சரியான வெப்பநிலை தேவை. வெப்பநிலை பொதுவாக 30–40°C ஆகும். குளிர்காலத்தில் இந்த வெப்பநிலை பெற பின்வரும் முறைகளை முயற்சி செய்யலாம்: பாத்திரத்தை மூடி, தடிமனான துணியால் சுற்றி வைக்கவும்.

அணைக்கப்பட்ட மைக்ரோவேவ் ஓவன், ஹாட் பாக்ஸ் அல்லது ஓவன் போன்ற பாதுகாப்பான, வெப்பம் தங்கும் இடத்தில் வைக்கலாம். வெதுவெதுப்பான நீர் உள்ள பெரிய பாத்திரத்துக்குள் தயிர் பாத்திரத்தை வைக்கலாம்; நீர் தயிருக்குள் செல்லாமல் பார்த்துக்கொள்ளுவது முக்கியம்.

நேரடியாக அடுப்பின் மீது வைப்பது தவறு. அதிக வெப்பம் தயிர் உறைவதைப் பாதிக்கலாம்.

5. பால் தயிராக மாற போதுமான நேரம் கொடுப்பது அவசியம். கோடைக்காலத்தில் தயிர் 6–8 மணி நேரத்தில் உறையலாம். ஆனால் குளிர்காலத்தில் 8–12 மணி நேரம் அல்லது அதற்கும் அதிகமாகலாம்.

தயிர் உறையும் வரை பாத்திரத்தை அடிக்கடி திறக்க வேண்டாம். தயிர் உறைந்ததும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். அதே சமயம் அதிக நேரம் அறை வெப்பநிலையில் வைத்திருந்தால் தயிர் அதிகப் புளிப்பாக மாறும் வாய்ப்பு உள்ளது.

இதையும் படியுங்கள்:
சர்க்கரைப் பாகு பதம் தவறா? இந்த 3 வழிமுறைகளில் சரிசெய்யலாம்!
தயிர்

தயிர் உறையாமல் போவதற்கு 4 முக்கியக் காரணங்கள் இவைகள்.

1. பால் மிகவும் சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ இருப்பது.

2. பழைய தயிர் அல்லது வீரியம் குறைந்த தயிரை உறையாகப் பயன்படுத்துவது.

3. தயிர் வைக்கும் இடம் மிகவும் குளிர்ச்சியாக இருப்பது.

4. உறையின் அளவு மிகக் குறைவாக இருப்பது. இந்த 4 லிம் கவனம் வைத்தால் போதும்.

கெட்டியான தயிருக்கு சின்ன டிப்ஸ்

பாலை நன்றாகக் காய்ச்சி, ஆறியதும் மிதமான சூட்டில் உறை ஊற்றி, பாத்திரத்தை மூடி வெப்பம் தங்கும் இடத்தில் வையுங்கள். தயிர் உறைந்ததும் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது அதன் கெட்டப் பதத்தையும், சுவையையும் அதிகரிக்க உதவும். தயிர் இன்னும் கெட்டியாக வர கெட்டியான தயிருக்கு பால் அளவை அதிகரித்து நீரின் அளவைக் குறையுங்கள்.

இதையும் படியுங்கள்:
எண்ணெய் இல்லாமல் சமைக்கிற ஏர் பிரையர் நிஜமாவே உடம்புக்கு நல்லதா?
தயிர்

இவைகளுடன் தயிர் தயாரிக்க சுத்தமான பாத்திரங்களையும் புதிய தயிர் உறையையும் பயன்படுத்துங்கள். வழக்கத்திற்கு மாறான நிறம், பூஞ்சை அல்லது அழுகிய வாசனை இருந்தால் அதைச் சாப்பிட வேண்டாம். கடைகளில் வாங்கும் தயிர் உறை ஊற்றுவதை தவிர்க்கவும். அவசியமெனில் சற்றே அதிகமாக உறை ஊற்ற வேண்டும்.

சிலர் உறை இல்லாமல் பால் தயிராக மாறும் என்கிறார்களே?

இல்லை. இது தவறான தகவல். சில சூழல்களில் பாலில் இயற்கையாக இருக்கும் நுண்ணுயிர்களால் புளிப்பு ஏற்படலாம். ஆனால் அது பாதுகாப்பான, தரமான தயிராக மாறும் என்று உறுதியாகக் கூற முடியாது.

எனவே, புதிய தயிரை உறையாகப் பயன்படுத்துவதே பாதுகாப்பான மற்றும் நலம் காக்கும் நம்பகமான வழி.

வெப்பநிலை மற்றும் பாக்டீரியாக்களின் அறிவியல் செயல்பாட்டைப் புரிந்து கொண்டு, ஒவ்வொரு முறையும் தயிர் perfectly-ஆக (சரியாக) உறைய வைப்பது எப்படி என்பதைப் புரிந்துகொள்ளுதல்.

logo
Kalki Online
kalkionline.com