'சைவ உணவு' vs 'நனிசைவ உணவு' எது சிறந்தது!

அக்டோபர் 1: உலக சைவ உணவு நாள்!
World Vegetarian Day
World Vegetarian Day
Published on

உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 1 ஆம் நாளில், உலக சைவ உணவாளர்கள் நாள் அல்லது உலக சைவ உணவு நாள் (World Vegetarian Day) கடைப்பிடிக்கப்படுகிறது. 1977 ஆம் ஆண்டில் வட அமெரிக்கச் சைவ உணவு சமூகத்தால் முன்மொழியப்பட்டு, 1978 ஆம் ஆண்டில் பன்னாட்டு சைவ உணவாளர் ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாள் கொண்டாட்டமாக இந்நாள் அமைந்திருக்கிறது. கருணை மற்றும் சைவ உணவு வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

சைவ உணவு முறை என்பது முற்றிலுமாக தாரவங்களிலிருந்து பெறப்பட்ட உணவாகும். இந்த உணவு முறையினை தாவர உணவு முறை அல்லது மரக்கறி உணவு முறை என்றும் சொல்கின்றனர். காய்கறிகள் சார்ந்த உணவு முறை என்பது உணவில் மீன், விலங்குகளின் இறைச்சி வகைகளைத் தவிர்ப்பதாகும். நனி சைவம் எனப்படும் சில தனி தாவர உணவுக்காரர்கள் பால், தயிர், தேன் போன்ற விலங்குகளிடம் இருந்து பெறப்படும் உணவுகளையும் தவிர்க்கின்றனர். சமணம் மற்றும் பிராமணம் உள்ளிட்ட சமய நம்பிக்கை சார்ந்த சைவ உணவு முறைகளைக் கடைப்பிடிப்பவர்கள் பூண்டு, வெங்காயம் போன்ற வேர்த் தாவரங்களையும் தவிர்க்கின்றனர். பொருளாதாரம், உடல்நலம், சமயம், பண்பாடு, அறவியல் எனப் பல காரணங்களுக்காகத் தாவர உணவு முறையைப் பலர் பின்பற்றுகின்றார்கள்.

நனிசைவம் (Veganism) விலங்குப் பொருட்களிலிருந்து, குறிப்பாக உணவு முறைகளில், விலகியிருக்கும் செயற்பாடாகும். தொடர்புள்ள மெய்யியலாக இது விலங்குகளை வணிகப் பொருட்களாக கருதுவதை மறுக்கிறது. இந்த உணவு முறையையோ அல்லது மெய்யியலையோ பின்பற்றுபவர்கள் நனிசைவர் (vegan) எனப்படுகின்றனர். சில நேரங்களில் நனி சைவத்தின் பல வகைப்பாடுகளுக்கிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. உணவுமுறை நனிசைவர்கள் அல்லது கடுமையான தாவர உணவு முறைகளைப் பின்பற்றுபவர்கள் விலங்குப் பொருட்களை விலக்கும் போது இறைச்சியை மட்டுமன்றி முட்டையுணவுகள், பால் பொருட்கள் மற்றும் பிற விலங்குகளிலிருந்து பெறப்படும் பொருட்களையும் தவிர்க்கின்றனர்.

நனிசைவ உணவுமுறையைப் பின்பற்றுவதோடன்றி நனிசைவத்தின் மெய்யியலை வாழ்வின் பிற கூறுகளிலும் விரிவாக்கி விலங்குப் பொருட்களை உடை போன்ற மற்ற வாழ்முறைகளிலும் தவிர்ப்பவர்கள் நன்னடத்தை நனிசைவர்கள் எனப்படுகின்றனர். தொழில்முறை விலங்குப் பண்ணைகள் சுற்றுச்சூழலின் பேண்தகுநிலையை பாதிக்கிறது என்ற காரணத்தால் விலங்குப் பொருட்களை தவிர்ப்பவர்களை சுற்றுச்சூழல் நனிசைவர் எனக் குறிப்பிடுகின்றனர்.

நனிசைவர்கள் விலங்குகளிலிருந்து பெறப்படும் இறைச்சி, முட்டை, பண்ணைப் பொருட்களான பால், பாலாடைக்கட்டி, தயிர் ஆகியவற்றைத் தவிர்க்கின்றனர். சில நனிசைவர்கள் தேனும் உண்பதில்லை. இவர்கள் தோல் சரக்கு நுட்பியல், கம்பளி, இறகுகள், எலும்பு, அல்லது முத்து இவற்றைக் கொண்ட பொருட்களையும் பயன்படுத்துவதில்லை. விலங்குகளின் மீது சோதிக்கப்பட்டவற்றையும் தவிர்க்கின்றனர். இவர்கள், விலங்குகளின் உரிமைகளில் ஈடுபாடு உடையவர்களாகவும் அதற்காகப் போராடுபவர்களாகவும் உள்ளனர்.

நனிசைவர்கள் பழங்கள், காய்கனிகள், அவரைகள், தானியங்கள், கொட்டைகள், விதைகள் ஆகியவற்றையும், அவற்றிலிருந்து உருவாக்கப்பட்ட நனிசைவ இனிப்புகள், நனிசைவ பாலடைக்கட்டி, நனிசைவ அணிச்சல்களை உணவாகக் கொள்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
காபி கண்டுபிடிக்கப்பட்ட கதை மற்றும் காபி நாள் கொண்டாட்டங்கள்!
World Vegetarian Day

நன்கு திட்டமிடப்பட்ட நனிசைவ உணவுமுறைகள் இதய நோய்கள் உள்ளிட்ட சில வகையான நாட்பட்ட நோய்களுக்குத் தீர்வாகிறது. அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவுமுறையாகப் பரிந்துரைக்கப்படுகின்றது. குழந்தைப் பருவத்திலும், கருவுற்ற காலங்களிகளிலும் இதனை அமெரிக்க ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் அகாதமி, கனடிய உணவு முறையாளர்கள், பிரித்தானிய உணவு முறையாளச் சங்கம் போன்ற பல அமைப்புகள் பரிந்துரைக்கின்றன. ஆனால், ஜெர்மானிய ஊட்டச்சத்து சமூகம், நனிசைவ உணவுமுறைகளை குழந்தைகளுக்கும் வளர்சிதை மாற்றக்கால சிறாருக்கும் கருவுற்ற பெண்களுக்கும் தாய்ப்பாலூட்டுவோருக்கும் ஏற்கவில்லை.

நனிசைவ உணவு முறையில் நார்ச்சத்து, மக்னீசியம், இலைக்காடி, உயிர்ச்சத்து சி, உயிர்ச்சத்து ஈ, இரும்பு, ஃபைட்டோவேதிகள் கூடுதலாக உள்ளன; உணவிலிருந்து பெறப்படும் ஆற்றல், நிறைவுற்ற கொழுப்பு, கொலஸ்டிரால், நீள்-சங்கிலி ஒமேகா-3 கொழுப்பமிலங்கள், உயிர்ச்சத்து டி, கால்சியம், துத்தநாகம், உயிர்சத்து B12 ஆகியன மிகக்குறைவாகவே உள்ளன. சம விகிதமில்லா நனிசைவ உணவு முறை ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு வழிவகுக்கும். இதனால் மிகக் கடுமையான உடல்நலக் கேடுகள் வரலாம் என்று எச்சரிக்கின்றது. இத்தகைய சில ஊட்டச்சத்துக் குறைகளை சரிக்கட்ட செறிவூட்டிய உணவுகளோ அல்லது வழமையாக உணவுக் குறை நிரப்பிகளை எடுப்பதோ கட்டாயமாகும். குறிப்பாக உயிர்ச்சத்து B12 குறைதல் குருதிக் குறைபாடுகளுக்கும் தொடர்ந்த மீட்கவியலா நரம்புமண்டல சேதத்திற்கும் காரணமாவதால் மாத்திரையாக B12 நிரவல் மிக முக்கியமானது.

இதையும் படியுங்கள்:
அமைதியான மனநிலை மேம்பாட்டிற்கு உதவுமா சைவ உணவுகள்?
World Vegetarian Day

டோனால்டு வாட்சன் 1944 ஆம் ஆண்டில் வீகன் என்ற சொற்றொடரை உருவாக்கி இங்கிலாந்தில் வீகன் சமூகத்தை நிறுவினார். முதலில், பால் பொருட்களில்லா தாவர உணவுமுறை என்ற பெயரைப் பயன்படுத்தினார். 1951 முதல் வீகன் சமூகம் 'விலங்குகளை தன்னலப்படுத்தாது மனிதன் வாழவேண்டும் என்ற சித்தாந்தமாக' இதனை வரையறுத்தது. 2010 ஆம் ஆண்டுகளில் நனிசைவத்தில், குறிப்பாக பிந்தைய ஆண்டுகளில் ஆர்வம் மேலோங்கியது. கூடிய நனிசைவ கடைகள் திறக்கப்பட்டன. பல நாடுகளிலும் பல்பொருளங்காடிகளிலும் உணவகங்களிலும் நனிசைவ விருப்பத்தேர்வுகள் கிடைக்கலாயின.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com