
சீடை, தேன்குழல் போன்றவற்றில் வெந்நீர் ஊற்றிப் பிசைந்தால் அந்த பட்சணங்கள் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமலிருக்கும்.
கடலைப்பருப்புடன், வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து போளி செய்தால் அதன் ருசியே அலாதிதான்.
கீரை, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு போன்றவற்றில் உள்ள சத்து வீணாகாமல் இருக்கவேண்டுமென்றால், தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த பின்னரே அவற்றை வேகவைக்க வேண்டும்.
உருளைக்கிழங்கு காரக்கறி செய்யும்போது, அரைக்கரண்டி புளிப்பில்லாத கெட்டித்தயிர் ஊற்றி வதக்கினால் கறி மிகவும் ருசியாக இருக்கும்.
பாலுடன் கொஞ்சம் ஏலக்காய் கலந்து காய்ச்சினால், பால் நல்ல மணமாகவும், நீண்ட நேரம் புளிப்பு ஏறாமலும் இருக்கும்.
ஈரமான காய்கறிகளை ஒரு பேப்பரில் சுற்றி ஃ ப்ரிட்ஜில் வைத்தால், அவை சீக்கிரமாக அழுகிப்போகாது.
உளுந்து வடை தட்டும்போது கொஞ்சம் அரிசிமாவை லேசாகத்தொட்டுத் தட்டினால் மொறு மொறுப்பான வடை தயார்.
கொழுக்கட்டைக்கு மாவு கிளறும்போது, நீருடன் கொஞ்சம் பால் சேர்த்துப் பாருங்கள். கொழுக்கட்டை விரிந்து போகாமலிருக்கும்.
கொத்துமல்லித்தழையை ரசத்தில் போட்டு விட்டு, தண்டை வீணாக்காமல் காயவைத்து, ரசப்பொடியில் சேர்த்து அரைத்தால் வாசனையாக இருக்கும்.
வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு எலுமிச்சை ஜூஸ் தயார் செய்த பிறகு எலுமிச்சை தோல்களை வீணாக்க வேண்டாம். அவையை பயன்படுத்தி சுவையான எலுமிச்சை ஊறுகாய் தயார் செய்யலாம்.
சாம்பார் பொடி அரைக்கும்போது ஒரு ஸ்பூன் உப்பு போட்டு அரைத்தால் பூசணம் வராது.
விதம் விதமா உப்புமா செய்யலாம் வாங்க...
பச்சரிசியையும், துவரம் பருப்பையும் 6: 1 என்ற விகிதத்தில் உப்புமா ரவை போல் அரைத்து வைத்துக் கொண்டால் அரிசி உப்புமா சுலபமாக செய்யலாம். சுவையாக இருக்கும்.
சேமியா உப்புமா செய்யும்போது சிறிது ரவை சேர்த்துப் பாருங்கள். உப்புமா பொல பொலவென வரும்.
கேரட், பீட்ரூட், தக்காளி, பீன்ஸ், பச்சைப்பட்டாணி, வேர்க்கடலை போன்றவைகளை, உப்புமா செய்யும்போது ரவையில் சேர்த்தால் சத்து நிறைந்த வெஜிடபிள் உப்புமா ரெடி.
இட்லி உப்புமா செய்யும்போது, இரண்டு மணி நேரம் இட்லிகளை ஃ ப்ரிட்ஜில் வைத்து விட்டு எடுத்து, சிறிது நேரத்துக்கு பின் செய்தால் உப்புமா கட்டியில்லாமல் உதிர் உதிராக இருக்கும்.
உப்புமா செய்ய பயன்படுத்தும் ரவையை சிட்டிகை உப்புத்தூள் கலந்து வைத்தால், நீண்ட நாட்கள் புழு, பூச்சிகள் அண்டாது.
உப்புமா செய்யும்போது உப்பை நேரடியாகப் போடாமல், நீரில் கரைத்துப்போட, எல்லா இடங்களிலும் உப்பு ஒரே மாதிரி கலந்து உப்புமா சுவையாக இருக்கும்.
ரவா உப்புமா மீந்துவிட்டால், அதனுடன் சிறிது அரிசிமாவு கலந்து சுவையான வடை செய்யலாம்.