அடை செய்வதற்கு ஊற வைக்கும் பருப்புகளே ருசி தரும். சுண்டல் கலந்து செய்யும் பொழுது அந்த அடை மிகவும் ருசியாக இருக்கும். அதை எப்படி செய்யலாம் என்று பார்ப்போமா!
தேவையான பொருட்கள்:
பச்சரிசி குருணை -1கப்
புழுங்கல் அரிசி குருணை -ஒரு கப்
கருப்பு சுண்டல் -இரண்டு கைப்பிடி
பாசிப்பயறு- ஒரு கைப்பிடி
துவரம் பருப்பு ,கொள்ளு தலா -ஒரு கைப்பிடி
மஞ்சள் பொடி -சிறிதளவு
வர மிளகாய்- ஐந்து
சோம்பு, சீரகம் தலா -ஒரு ஸ்பூன்
பெருங்காயம் -சிறிதளவு
முருங்கைக்கீரை -ஒரு கைப்பிடி
உப்பு -தேவையான அளவு
சின்ன வெங்காயம் -10
எண்ணெய் -தேவையான அளவு.
செய்முறை:
பருப்புகளை ஒன்றாக சேர்த்து இரவே ஊறவைத்து விடவும். அரிசி இரண்டையும் ஒன்றாக ஊற வைத்துக் கொள்ளவும். அரிசியுடன் சேர்த்து மிளகாய், சோம்பு ,சீரகம் சேர்த்து அரைத்து வைக்கவும். பருப்புகளை ஒன்றாக சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். அரைத்த உடன் இரண்டையும் நன்றாக கலக்கவும்.
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கவும். அப்படியே கீரையையும் வதக்கவும். இது நன்றாக ஆறியவுடன் மாவில் கலக்கவும். பெருங்காயம், சிறிது மஞ்சள் பொடி ,உப்பு சேர்த்து மாவை நன்றாக பதமாக கரைத்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது அடை மாவு தயார்.
தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய் தேய்த்து விரும்பும் வண்ணம் மாவை ஊற்றி அடையாக வார்க்கவும். நடுவிலே ஒரு குழி பறித்து அதில் எண்ணெய் ஊற்றினால் எல்லா பக்கமும் சேர்ந்து விடும். பிறகு ஓரங்களில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி திருப்பிப் போட்டு நன்றாக வெந்தவுடன் எடுக்கவும். கம கம வாசனை உடன் அடை தயார்.
இஞ்சி சட்னி, அவியல், வெண்ணெய், கெட்டித் தயிர் பச்சடி, தேங்காய் சட்னி என்று எதுவுடனும் ஜோடி சேரும். பிடித்த சட்னியுடன் சேர்த்து சாப்பிடவும்.
குறிப்பு: முழு அரிசியை ஊற வைத்தால் மிக்ஸியில் அரைப்பதற்கு நேரம் ஆகும். அதனுடன் மிக்ஸியும் சூடாகிவிடும் என்பதால் குருணையை வைத்து செய்வது நல்லது.
அடை சாப்பிட்டால் செரிமானமாக நேரமாகும் என்று பெரியவர்கள் நினைத்தால், இந்த மாவினை நைசாக அரைத்து தோசைகளாக வார்த்துக் கொடுக்கலாம். சுவை அள்ளும். அரைக்கும் பொழுது சிறிதளவு இஞ்சியையும் சேர்த்துக் கொள்ளவும். நன்றாக செரிமானம் ஆகும். சுண்டல் சேர்த்து அரைப்பதால் அடை மிகவும் மிருதுவாக இருக்கும்.