
சிலரது வீடுகளில் பார்த்தால் அழகழகான படைப்புகள் நம் கண்களையும் மனதையும் கவரும். அதன் விலை மிகவும் அதிகமாக இருக்கும் என்று நினைத்தால், அது அவர்கள் வீட்டில் வைத்திருக்கும் பொருட்களைக் கொண்டு அவர்களால் செய்யப்பட்டது என்று கேட்டு ஆச்சரியமடைவோம். கழிவுப்பொருட்களில், அதாவது வேஸ்டான பொருட்களில் வீட்டு அலங்காரப் பொருட்களை உருவாக்குவது என்பது ஒரு தனிக் கலை.
இதற்கு பொறுமையும், முயற்சியும், ஆர்வமும், கற்பனைத் திறனும் இருந்தால் நிச்சயம் நம்மாலும் இதுபோன்ற வேஸ்டான பொருட்களை மதிப்பு மிக்கதாக ஆக்கலாம். கீழே போடும் பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளைக் கொண்டு உருவாக்கப்படும் லாந்தர் விளக்கு பற்றிய செய்முறையை இந்தப் பதிவில் காண்போம்.
கழிவுக் காகித கோப்பைகளிலிருந்து DIY தொங்கும் விளக்கை உருவாக்குவது தனித்துவமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வெளிச்சத்தை உருவாக்குகிறது. அது மட்டுமின்றி, தூக்கி எறியும் கோப்பைகளை அலங்கார விளக்காக மாற்றுவதால் பணமும் மீதமாகும்.
மேலும், இதுபோன்ற அழகுப் பொருட்கள் வீட்டு அலங்காரம் அல்லது பண்டிகை நிகழ்வுகளுக்கு ஏற்றதாகவும் இருக்கும். பொருட்களை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம், கழிவுகளைக் குறைப்பது மட்டுமல்லாமல், நமது நேரமும் மதிப்பு மிக்கதாகிறது.
தேவையான பொருட்கள்: கழிவு கப்கள் (பிளாஸ்டிக் அல்லது காகிதம்), சரம் அல்லது வலுவான கயிறு, கத்தரிக்கோல், ஒட்டும் பசை அல்லது நாடா (டேப்), LED tea light அல்லது சிறிய LED விளக்கு, அலங்காரப் பொருட்கள் (விரும்பினால்), மினுமினுக்கும் ஜிகினா, ஸ்டிக்கர்கள், பெயிண்ட் அல்லது ரிப்பன்கள்.
வழிமுறைகள்:
1. லாந்தரின் பேனல்களை உருவாக்க கழிவு கோப்பைகளின் அடிப்பகுதிகளை வெட்டுங்கள். விளிம்பு வளைவை உருவாக்க வெட்டப்பட்ட பகுதிகளை வெளிப்புறமாக மடிக்கவும். விளிம்புகளை ஒட்டுவதன் மூலமோ அல்லது டேப்பிங் செய்வதன் மூலமோ கோப்பைகளை ஒன்றாக இணைக்கவும். கோப்பைகளை எவ்வாறு இணைப்பது என்பதை உங்கள் கற்பனைக்கேற்ப மாற்றுவதன் மூலம் வெவ்வேறு வடிவங்களை உருவாக்கலாம்.
2. உங்கள் விருப்பப்படி ஒரு வடிவம் அல்லது வடிவமைப்பில் கப் பேனல்களை ஒழுங்கமைக்கவும். தனித்துவமான விளைவுகளை உருவாக்க விளிம்பிற்கு வெவ்வேறு வெட்டு வடிவங்களைத் தாருங்கள். விரும்பினால், கோப்பைகளுக்கு வண்ணம் தீட்டவும் அல்லது பிற அலங்காரங்களைச் சேர்க்கவும்.
3. லாந்தரின் உருளை அல்லது கோள வடிவத்தை உருவாக்கும் கப் பேனல்களை ஒன்றாக ஒட்டவும். லாந்தரின் மேற்புறத்தில் ஒரு பிளாஸ்டிக் சரம் அல்லது டிவைன் போன்ற பலமான கயிற்றைக் கட்டி ஒரு ஹேங்கரை உருவாக்கவும்.
4. லாந்தரின் உள்ளே வண்ண ஒளி மற்றும் ஜொலிக்கும் நிலை பெற பேட்டரி மூலம் இயக்கப்படும் ஒரு LED tea light (டீலைட் என்பது ஒரு மெல்லிய உலோகம் அல்லது பிளாஸ்டிக் கோப்பையில் உள்ள மெழுகுவர்த்தியாகும்) அல்லது சிறிய LED விளக்கை வைக்கவும்.
5. விளக்கு ஒளியே அழகைத் தரும் என்றாலும் உங்கள் லாந்தருக்கு மேலும் பொலிவான அலங்காரம் தர மினுமினுக்கும் ஜிகினா, ஸ்டிக்கர்கள், பெயிண்ட் அல்லது ரிப்பன்களால் அழகு செய்யவும். லாந்தரின் வடிவமைப்பை மேம்படுத்த கைப்பிடி போன்றவை உங்கள் சாய்ஸ்.
6. இப்போது அழகான உங்கள் DIY தொங்கும் லாந்தரை ஒரு ஜன்னல், வீட்டின் தாழ்வாரம் அல்லது வெளிப்புற இடத்தில் தொங்கவிட்டு மனதுக்கு இதமான விளக்கு ஒளியை அனுபவிக்கலாம்.
இதே முறையில் பழைய சிடிக்கள் அல்லது அட்டை குழாய்கள் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி மறுசுழற்சி மூலம் நிலையான லாந்தரை உருவாக்கி சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றலாம்.
இந்த DIY திட்டம் தேவையற்ற கழிவுப்பொருட்களை மறுசுழற்சி செய்வதற்கும் வீடு அல்லது வெளிப்புற இடத்திற்கு அழகான, சுற்றுச்சூழலுக்கு உகந்த அலங்காரத்தை உருவாக்குவதற்கும் ஒரு சிறந்த வழியாகும். நமது கற்பனை படைப்பாற்றலுடன் நமது கையால் நம்மால் ஈடுபாடுடன் செய்யப்படும் தொங்கும் விளக்கு நிச்சயம் அனைவரின் பாராட்டையும் பெறும்.
குறிப்பு: இணையதளத்தில் இருக்கும் இது குறித்த செய்முறை வீடியோக்கள் பார்த்தும் இதை செய்யலாம்.