

அதிக வேலைப்பளு மற்றும் அலைச்சல் காரணமாக ஒரு பெண்ணின் உடல் சோர்வடையும்போது, தொடர்ந்து இரண்டு நாட்கள் ஓய்வெடுத்துக்கொண்டால், சோர்வு நீங்கி மீண்டும் புத்துணர்வு பெற்றுவிடுவாள். அதுவே அவளின் ஆன்மா சோர்வடைந்திருக்கையில் வெளிப்படும் 10 வகையான உணர்வுகள் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
1. அவளிடம் தங்கியிருக்கும் சிறிதளவு சக்தியை சேமித்துப் பாதுகாத்துக்கொள்ள அவளின் உடலும் மனதும் ஒருங்கிணைந்து போராடும். பாதி படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைப்பது, ஆர்வமுடன் செய்துகொண்டிருந்த ப்ராஜெக்ட் ஒர்க் அரை குறையாக முடங்கிப்போவது போன்றவை மனச்சோர்வின் வெளிப்பாடுகளாக இருக்கும்.
2. சமூக நிகழ்வுகளில் பலருடன் இணைந்திருக்கும்போது பாதியிலேயே ‘பை’ சொல்லி நழுவி விடுதல் மற்றும் சில அழைப்புகளைக் கண்டும் காணாமல் ஒதுக்கி விடுதல். முறையாக அலங்கரித்துக் கொள்ளவும், முழுமையாக உரையாடலில் பங்கேற்கவும் தேவைப்படும் மனோபலம் இல்லாமல் போவதே இதற்கான காரணமாகும்.
3. அவளின் பார்ட்னரோ அல்லது பிற நண்பர்களோ ஒரு விஷயத்தை ஒரு முறைக்கு மூன்று முறை கூறிய பின்பே அவளின் மூளைக்குள் அது பதிவாதல். இதற்கான காரணம், மூளையானது கொஞ்ச நஞ்சம் மீதமிருக்கும் சக்தியை, முன்னுரிமை தர வேண்டிய விஷயங்களுக்காக சேமித்து வைத்துக்கொள்ள எண்ணுவதேயாகும்.
4. சரும பராமரிப்பு போன்ற, உடலின் தோற்றத்தை மேம்படுத்திக் காட்டுவதற்கு வழக்கமாகச் செய்யும் அழகியல் சம்பந்தமான செயல்களிலும் ஈடுபாடில்லாமல் இருப்பது. இதை அலட்சியம் அல்லது புறக்கணிப்பு என்று கூற முடியாது. முன்னுரிமை அளிக்காமல் தள்ளிப்போடும் மனநிலை எனலாம்.
5. காரில் எங்காவது செல்லும்போது செல்ல வேண்டிய இடத்தை அடைந்த பின்னும், மியூசிக் எதுவும் கேட்காமல், போனையும் ஆன் பண்ணாமல், கார் சீட்லேயே பத்து நிமிடம் செயலற்று அமர்ந்திருப்பது. இதுவும் அவள் மனநிலை மறு மலர்ச்சியடைய எடுத்துக்கொள்ளும் இடைவெளியாகும்.
6. ஒரு நாளில் பத்து மணி நேரம் தூங்கி எழுந்தபின்னும் சக்தியின் அளவு வறண்ட நிலையில் உள்ளது போலவே உணர்தல். இதன் காரணம் உடல் சோர்வின்றி இருந்தாலும், ஆன்மா அமைதியற்று, முடங்கிய நிலைக்கு சென்றிருக்கும்போது எவ்வளவு நேரம் தூங்கினாலும் உடல் சமநிலை பெறாது.
7. விரும்பிச் செய்யும் செயல்கள் மீது ஆர்வம் குன்றிப்போவது, யோகா மேட் பிரிக்கப்படாமல் கிடக்கும், புத்தகம் திறக்கப்படாமல் தூசி படிந்து இருக்கும். இவையெல்லாம் மன அழுத்தத்திற்கு உண்டானவர்களின் செய்கை போல் தோன்றினாலும், அது அல்ல இது. ஆன்மா சோர்வடைந்து இருக்கும் நிலையில், மன மகிழ்ச்சி தரும் செயல்களை செய்யக் கூட சக்தியில்லாமல் போய் விடுவதுதான் உண்மை.
8. சாதாரணமாக உணரப்படும் உணர்வுகள் கூட கொடூரமானதாக உணரப்பட்டு எரிச்சலுண்டாக்கும். சிறிய சத்தம் பெரிதாகக் கேட்கும். கூட்டத்தில் நடந்து செல்வது மூச்சுத் திணறலை உண்டு பண்ணுவதுபோல் இருக்கும். இவையெல்லாம் அவளின் நரம்பு மண்டலத்தின் தூண்டுதல் சக்தியில் குறை ஏற்படுவதன் விளைவேயாகும்.
9. அலுவலக மற்றும் தனிப்பட்ட விவகாரங்களில் உடனடியாக முடிவெடுக்க முடியாமல் தாமதமாவது, எந்தப் புடைவை கட்டுவது, இரவு டின்னருக்கு என்ன சமைப்பது போன்ற சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் யோசித்துக்கொண்டே இருப்பது போன்ற செயல்கள் மனதளவில் அவள் பாதிப்புக்குள்ளாகி இருப்பாளோ என்று நினைக்கத் தோன்றும். முடிவெடுக்கும் திறனுக்காக சேமித்து வைத்திருந்த சக்தியெல்லாம் ஏற்கெனவே தீர்ந்து விட்டதால் உண்டாகும் இயலாமைதான் இது.
10. உடலளவில் ஓரிடத்தில் இருந்தாலும் அவள் மனது வேறெங்காவது அலைபாய்ந்து கொண்டிருக்கும். உடன் இருப்பவர்கள் கேட்கும் கேள்விக்குப் பதிலளிப்பாள். தன் கடமைகளை சரிவர நிறைவேற்றிக் கொண்டிருப்பாள். ஆனால், உள்ளுக்குள் அமைதியாக ஒரு மூலையில் அமர்ந்து கொண்டிருப்பாள். இதை அவள் அறிந்து செய்வதில்லை என்பதுதான் உண்மை.