கணவன் - மனைவி உறவில் எதிர்பார்க்கப்படும் 4 விஷயங்கள்... காதலுக்குப் பஞ்சம் என்பதேது?

couple
couple
Published on

கணவன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும் எதிர்பார்க்கும் நான்கு விஷயங்கள்... இந்த நாலையும் செஞ்சிட்டிங்கன்ன.. உங்க மணவாழ்க்கை சக்ஸஸ் தான்..

உலகத்திலேயே மிகவும் சிக்கலான ஒரு உறவு கணவன் – மனைவி உறவு தான். காரணம் இது அன்கண்டிஷனல் காதல் கிடையாது. கண்டிஷன்களோடு வரும் காதல். நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால் சிக்கல் தான். இந்தச் சிக்கல்களை அவிழ்த்து சுமூகமாக வாழத் தெரிந்து கொண்டால், வாழ்க்கை கற்கண்டு தானே..

ஒரு மனைவி கணவனிடத்தில் காதல் வளர்க்க, அவள் எதிர்பார்க்கும் அடிப்படையான நான்கு விஷயங்களையும், ஒரு கணவன் மனைவியை விரும்ப எதிர்பார்க்கும் நான்கு விஷயங்களையும் தான் இந்தக் கட்டுரை பட்டியலிடப் போகிறது. இந்த நான்கு மட்டும் இருந்துவிட்டால் இல்லாத மற்றவைகளையெல்லாம் இந்த நான்குமே சரிகட்டிவிடும்.. பார்க்கலாமா..

கணவனைக் காதலிக்க மனைவி எதிர்பார்க்கும் நான்கு:

4. ஆர்வம்:

தன் கணவன் தன் மேல் ஆர்வம் காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காத மனைவி இருப்பாளா? பணிக்கிடையில் அவ்வப்போதைய விசாரிப்புகள், பாராட்டு வார்த்தைகள், குட்டிக்குட்டிப் பரிசுகள் என்று செய்து “I am interested in you!” என்று கணவன் காட்டிக்கொண்டே இருந்துவிட்டால் அவன் மேல் கன்னாபின்னாவென்று காதல் கொள்வாள் மனைவி.

3. மென்மை:

தன்னவன் தன்னிடம் மென்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்றுதான் மனைவி எதிர்பார்ப்பாள். நெற்றி முத்தங்களும் இதமான தழுவல்களும் அன்புநிறைந்த பார்வைகளும் மிருதுவான வார்த்தைகளும் அன்பான செய்கைகளும் கணவன் மீது அவளின் காதலை பன்மடங்காக்கவல்லவை.

2. காதுகள்:

தன் எண்ணங்களுக்கு, வார்த்தைகளுக்குக் கணவன் செவிகொடுக்க வேண்டும் என்பது ஒவ்வொரு மனைவியும் எதிர்பார்க்கும் விஷயம். கருத்துடன் உடன்படவேண்டும் என்று கூட அவள் எதிர்பார்ப்பதில்லை. சொல்ல வருவதைக் கேட்டாலே அவளுக்குப் போதும்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: 'வெள்ளை'ச்சாமி!
couple

1. பாதுகாப்புணர்வு, ஆதரவு:

மனைவி கணவன் மீது ஆழமான காதல் வளர்க்கத் தேவையானவைகளின் பட்டியலில் முதலிடம் பெறுவது, கணவன் அவளுக்குத் தரும் ஆதரவும் பாதுகாப்புணர்வும் தான். தன்னவன் தனக்காக நிற்க வேண்டும் என்பதே அவளின் முதல் எதிர்பார்ப்பாக இருக்கும். தன்னை நீங்கிச் சென்றுவிடுவானோ என்ற பயம் இன்றி அவள் இருக்கும் போது தான் கணவனை அவளால் ஆழமாக நேசிக்க முடியும். அவளின் திடமான ஆதரவுத்தூணாக கணவன் நிற்கும் போது தான் அவன் மீது அவள் நம்பிக்கை வளர்ப்பாள். பேரன்பு வளர்ப்பாள்.

ஒரு மனைவியிடம் கணவன் எதிர்பார்க்கும் நான்கு:

4. விட்டுக்கொடுக்காமல் இருத்தல்

வீட்டுக்குள்ளேயும் வெளியேயும் இருபுறத்தின் உறவினர்களிடையேயும் தன் மனைவி தன்னை ஒருபோதும் விட்டுக் கொடுத்துவிடக்கூடாது என்பது ஒவ்வொரு கணவனின் முக்கியமான எதிர்பார்ப்பு. எங்கேயும் யாரோடும் ஒப்பிட்டுத் தன்னை தாழ்த்திப் பேசிடாத மனைவி கணவனின் மாறாத காதலைப் பெற்றவள் ஆகிறாள்.

3. பாராட்டு

‘நீ நல்ல கணவனாய் இருக்கிறாய். நம் குடும்ப நன்மைக்காக நீ நிறைய செய்கிறாய்’ என்பது போன்ற பாராட்டு வார்த்தைகளையும் அங்கீகாரத்தையும் மனைவியிடம் இருந்து கணவன் எதிர்பார்க்கிறான். எப்போதாவதேனும் இது போன்ற பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் அளிக்கும் மனைவியை கணவன் ஆழமாக நேசிக்கிறான்.

2. அழகு:

என் மனைவி எனக்காக முதலில் தன்னை அழகுபடுத்திக்கொள்ள வேண்டும் என்பது கணவனின் இரண்டாவது எதிர்பார்ப்பு. வெளியில் செல்லும்போது அழகுபடுத்திக் கொள்வதை விட வீட்டுக்குள் தனக்காகவென்று மட்டும் அழகுபடுத்திக் கொள்ளும் மனைவியைக் கணவன் ரசிப்பான்; நேசிப்பான்.

1. மரியாதை

ஒரு மனைவியை நேசிக்க கணவன் எதிர்பார்ப்பவைகளின் பட்டியலில் முதலில் நிற்பது மரியாதை தான். மரியாதை எல்லாருக்கும் தானே தேவை எனலாம். கணவன் மனைவியிடம் எதிர்பார்க்கும் மரியாதை ஒன்றே ஒன்றுதான். “நீயே என் தலைவன். நீயே நம் இல்லத்தின் முதல்வன். நீயே நம் குடும்பத்தின் பாதுகாவலன்” என்கிற மரியாதையைத்தான் ஒரு கணவன் தன் மனைவி தரவேண்டுமென்று எதிர்பார்ப்பான். அவனின் மூளைக்கு ஆளுமைக்கு வடிவமைப்புக்கு இயல்புக்கு இந்த மரியாதை இயற்கையாகவே அவனுக்குத் தேவைப்படுகிறது.

இந்த சிம்பிளான நான்கு எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து விட்டால், பிறகு காதலுக்குப் பஞ்சம் என்பதேது? முயன்று பாருங்களேன்!

இதையும் படியுங்கள்:
ஜெர்மன் பெயர்களில் சாதி உண்டா?
couple

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com