
ஓய்வு என்று சொன்னாலே பலரும் தூங்குவதைத்தான் சொல்வதாக தவறாக புரிந்து கொள்கிறார்கள். தூக்கம் மட்டுமே உடலுக்கும், உள்ளத்துக்கும் ஓய்வு கொடுத்துவிடும் என்று எண்ணக்கூடாது. ஓய்வு, உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்டது. ஓய்வு என்பது, தொடர்ச்சியான செயலில் இருந்து சிறிது நேரம் அல்லது சிலகாலம் விடுபடுவது. மாற்றுச் செயலில் ஈடுபடுவதும் ஓய்வுதான்.
ஓய்வு புத்துணர்ச்சி அளிக்கிறது. மேலும் ஒய்விற்குப்பின் செய்யும் செயல்கள் அதிக பலனை அளிக்கிறது. அனுதினமும் புதிய புதிய நிகழ்வுகளால், மனம் ஓய்வின்றி செயல்படுகிறது. ஒருவருடைய ஓய்வுமுறை மற்றொருவருக்கு பொறுந்தாது. அந்த வகையில் இந்த 4 வகையான ஓய்வுகள் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானதாகும். அவற்றைப்பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
மனதுக்கு தேவையான ஓய்வு:
உடலுக்கு மட்டும் ஓய்வு கொடுத்தால் போதாது; மனத்துக்கும் கண்டிப்பாக ஓய்வு கொடுக்க வேண்டும். அப்படி மனத்திற்கு ஓய்வு கொடுக்காவிட்டால் மறதி, எரிச்சல், கவனமின்மை, ஆர்வமின்மை, வெறுமை, கோபம் போன்ற பிரச்சினைகள் தலைதூக்கும். எந்த ஒரு வேலை மீதும் ஈடுபாடோடு செய்ய முடியாமல் அதன் மீது கவனம் செலுத்துவதும் கடினமாகிவிடும். வேலையை சரியாக முடிக்க முடியாத கவலையில், ஓய்வெடுப்பது சிரமமாகிவிடும். இந்த பிரச்சனைகயால் இரவு தூக்கமும் கெடும்.
இந்த பிரச்சனைகள் எல்லாம் வராமல் தவிர்க்க விரும்பினால் மனதுக்கும் போதிய ஓய்வு கொடுக்க வேண்டும். செய்யும் வேலைக்கு இடையே சிறிது நேரம் இடைவெளி எடுத்து மனதை இலகுவாக்குங்கள். அதாவது ஒரு வேலை செய்து கொண்டிருக்கும் போது களைப்பாக தோன்றினால் கண்களை மூடி சிறிது நேரம் அமைதியாக அமர்திருங்கள். அந்த நேரத்தில் மனதில் வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல் மனம் அமைதியாக ஓய்வெடுத்துக்கொண்டிருக்க வேண்டும். மனதிற்கான ஓய்வு இசை, தியானம், விரும்பியதை செய்தல், மற்றும் மனதிற்கு இதமான சூழலில் கிடைக்கும். இவ்வாறு செய்வதால் கண்களுக்கும், மனத்திற்கு ஓய்வு கிடைக்கும். பிறகு அந்த வேலையை விரைவாகவும், எந்த தடங்களும் இல்லாமல் செய்ய முடியும்.
உணர்வுக்கு தேவையான ஓய்வு:
ஒரு சிலர் எந்நேரமும் ஆன்லைனில் மூழ்கி இருப்பார்கள்; ஒரு சிலர் எப்போது போனில் அல்லது யாருடனாவது சத்தமாக அதிக நேரம் பேசிக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் தங்களை எப்போது ஆக்டிவாக இருப்பதாக நினைத்து கொள்வார்கள். ஆனால் உடலுக்கோ, உள்ளத்துக்கோ ஓய்வே கொடுக்காமல் ஏதேனும் ஒரு செயலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தால் அது நம் உணர்வை பாதிப்புக்குள்ளாக்கும். தொடர்ந்து அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் 1 மணிநேரத்திற்கு ஒருமுறை 5 நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வெடுக்க வேண்டும். அதேபோல் எந்த நேரமும் ஆன்லைனில் மூழ்கி கிடப்பது, ஆன்லையில் விளையாடுவது, போனில் அதிக நேரம் அரட்டை அடிப்பது போன்ற விஷயங்களை அறவே தவிர்ப்பது உணர்வுக்கு ஓய்வு கொடுக்க உதவும். இதனால் உங்கள் மனம் எப்போது அமைதியாகவும், மூளை சுறுசுறுப்பாகவும் வேலை செய்யும்.
உடலுக்கு தேவையான ஓய்வு:
இந்த ஓய்வை செயலுடன் கூடிய ஓய்வு, செயலற்ற ஓய்வு என இருவகையாக பிரிக்கலாம். உடலுக்கு எந்த வகையான பயிற்சியையும் கொடுக்காமல் மேற்கொள்ளும் தூக்கத்தை செயலற்ற ஓய்வாக குறிப்பிடலாம். இந்த வகையானவர்கள் உட்கார்ந்த இடத்திலிருந்து அதிக நேரம் வேலை செய்பவர்களை குறிக்கும். இவர்களிடம் உடல் உழைப்பு இருக்காது. யோகா, தியானம், உடற்பயிற்சி, முத்திரை, மசாஜ், சூடான நீரில் குளியல் போன்றவற்றை செயலுடன் கூடிய ஓய்வாகும். இந்த ஓய்வு உடலுக்கு ஆரோக்கியத்தையும், நெகிழ்வுத்தன்மையை கொடுக்கும், உடலை புதுப்பிக்கவும் வழிவகை செய்யும்.
ஆக்கப்பூர்வமான ஓய்வு:
தோட்டம் அல்லது பூங்காவிற்கு சென்று அமர்ந்து கொண்டு தோட்டத்தில் உள்ள செடி, கொடிகளிடம் பேசுவது, இயற்கையை ரசிப்பது அல்லது இயற்கையை ரசித்தபடி காலாற நடப்பது போன்ற விஷயங்களில் நேரத்தை செலவிடுவது ஆக்கப்பூர்வமான ஓய்வின் ஒரு அங்கமாகும். இவ்வாறு செய்வதால் மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கும். காலையில் இதமான வெயிலில் நடைப்பயிற்சி செய்யும் போது மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். உங்களுக்கு பிடித்தமான செயல்பாடுகளில் ஈடுபடுவதும் ஆக்கப்பூர்வமானதாக அமையும். இதனால் மனத்திற்கு புது உத்வேகம் பிறக்கும். எந்த பிரச்சனையையும் பொறுமையாக சமாளிக்க முடியும் என்று மன தைரியம் வரும்.