
பிள்ளைகளின் மன வளர்ச்சிக்கும், மூளை விருத்திக்கும் முக்கியமாக செயல்பட வேண்டியவர்கள் பெற்றோர்கள். அதற்கு இன்றியமையாதது என்னென்ன? அதை செயல்படுத்தும் முறைகள் எப்படி என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
பெற்றோர் ஒற்றுமையாக ஒருங்கே மகிழ்ச்சியாக இருத்தல்: பெற்றோர் மகிழ்ச்சியாக இருக்கும்பொழுது குழந்தைகள் அன்பான பிள்ளையாக, ஆனந்தத்தை வழங்கும் பிள்ளையாக, இன்முகத்துடன் பழகும் பிள்ளையாக, ஈகை உள்ள பிள்ளையாக, உதவும் கரங்கள் உடைய பிள்ளையாக, ஊக்கமுடைய பிள்ளையாக, எக்காலமும் நீதியுடன் வாழும் பிள்ளையாக, ஏக்கம் இன்றி எதிர்காலத்தை நோக்கும் பிள்ளையாக, ஐயமிட்டு உண்ணும் பிள்ளையாக, ஒற்றுமையாக வாழும் பிள்ளையாக, ஓயாத முயற்சி உள்ள பிள்ளையாக வளர்வர்.
பிள்ளைகளின் தேவைக்கு முன்னுரிமை: படிப்பு, விளையாட்டு, இசை, நடனம், பாட்டு என்று எந்தக் கலையில் அவர்கள் சிறந்து விளங்க விரும்புகிறார்களோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கால மாற்றங்களை, உலக மாற்றங்களை, அறிவியல் மாற்றங்களை ஏற்று வாழப் பழக்க வேண்டும். பெற்றோர் வீட்டில் இல்லாத நேரங்களில் பிள்ளைகளை பராமரிக்க குழந்தை பராமரிப்பு நிலையங்களை கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும். பெற்றோர் இல்லாத வேளைகளில் பிள்ளை மகிழ்ச்சியாகவும், பயமற்றும், பாதுகாப்பாகவும் இருப்பதை பிள்ளைகள் உணர வேண்டும். தங்கள் வீட்டிற்கு வெளியில் இருக்கும்போதும் வீட்டில் இருக்கும்போதும் வாழ்வின் மகத்துவத்தை அவர்கள் உணர வேண்டும்.
வளர்ச்சி சூழலை உருவாக்கிக் கொடுத்தல்: பெற்றோர்களுக்குத் தேவையானது பிள்ளைகளின் சுதந்திர எண்ணம்தான். தங்களுக்காக தாங்களே சுதந்திரமாக யோசிக்கிறார்கள் என்பதே அதன் வெளிப்பாடாகிறது. பிள்ளையின் சொந்த சிந்தனை வளர்ச்சி என்பது நீங்கள் கூறும் எந்த செய்திக்கும், ‘ஏன்? எதற்கு?’ என்று எதிர்த்து கேள்வி கேட்க ஆரம்பிக்கும்போதுதான். பெற்றோர் எதிர்பார்க்க வேண்டியது பிள்ளையின் சிந்தனை வளர்ச்சியைத்தான்.
சமவிகித ஆரோக்கியமான உணவு: குழந்தையின் விருப்பம் அறிந்து காய்கறி, பழத்துடன் சேர்த்து முழு தானிய உணவுகளையும் உண்ண பழக்கப்படுத்த வேண்டும். அவர்கள் விரல்களாலேயே சாப்பிட வேண்டும். சாதம் சிந்தினால் அதைத் துடைப்பதற்கு அலுப்புப்படாமல் அவர்களை பழக்கப்படுத்த வேண்டும். உணவைத் தரும்பொழுது அதில் உள்ள சத்துக்களைக் கூறி உண்ண வைக்க வேண்டும்.
ஒரு குழந்தை சமூகப் பழக்கத்தையும், சமூகத்துடன் உறவாடுவதையும் தனது வீட்டில்தான் முதலில் ஆரம்பிக்கிறது. அங்குதான் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து வாழப் பழகுகிறது. அங்குதான் ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட் டி, கூட்டு வாழ்க்கை முறையை பிள்ளை பார்த்து உள்வாங்கிக் கொள்கிறது.
நிதி மற்றும் நேர பட்ஜெட்: கணவனும் மனைவியும் தங்கள் வீட்டு வேலைகள், பிள்ளை பராமரிப்பில் ஒருமித்த கருத்துடன் ஈடுபட வேண்டும். தங்கள் பொறுப்புகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து செய்ய வேண்டும். ஒருவரை ஒருவர் பாராட்டத் தவறக் கூடாது. வீட்டு நிதி பட்ஜெட்டை இருவருமாக தயாரிக்க வேண்டும்.
ஒளிவு மறைவு இருக்கக் கூடாது: லட்சியத்தை அடைவதில் தங்கள் கூட்டு முயற்சி முக்கியம் என்ற உணர்வில் இருந்து விடுபடக் கூடாது. நேரத்தை செலவு செய்வதற்கு நேர பட்ஜெட் மிகவும் முக்கியம். தனிப்பட்ட விஷயங்களுக்கும் குடும்பத்துக்கான வேலை திட்டங்களை நிறைவேற்றுவதற்கும், குடும்பத்துடன் சேர்ந்து நேரம் செலவழித்தலுக்கும், பிள்ளையுடன் நேரம் செலவு செய்வதற்கும், கணவன், மனைவி தங்கள் பொழுது போக்குக்கும் நேர ஒதுக்கீடு செய்தல் மிகவும் முக்கியம்.
இப்படி வளர்த்து வந்தால் குழந்தைகள் அடைய விரும்பும் லட்சியத்தை எட்டிப் பிடிக்க ஏதுவாக இருக்கும். பெற்றோர்களும் டென்ஷன் இன்றி எந்தச் செயலிலும் சந்தோஷமாக ஈடுபடலாம்.