

மனிதர்கள், தினசரி தாம் சந்திக்கும் சிலரால் மன உளைச்சலுக்கு ஆளாக நேரலாம். அது அவர்களது நிம்மதியையும் ஆரோக்கியத்தையும் பாதித்து அன்றாட நடவடிக்கைகளில் கூட மாற்றங்களை ஏற்படுத்தலாம். மன உளைச்சல் தரும் மனிதர்களை சமாளிப்பது எப்படி என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. அடையாளம் காணுதல்: நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களில் யார் மன உளைச்சல் தரும் நபர்கள் என்பதை முதலில் சரியாக அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். அவர்கள் எந்தெந்த விதங்களில் நமக்கு மன உளைச்சல் தருகிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். அவர்கள் தம்மை ஒருபோதும் மாற்றிக்கொள்ள மாட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தான் சொல்வதும், செய்வதும்தான் சரி என்று எப்போதும் வாதாடுவார்கள். அவர்கள் பேசுவது தவறு என்று பதிலுக்கு வாதாடி உங்களது நேரத்தையும் சக்தியையும் வீணடித்துக்கொள்ள வேண்டாம். அதனால் ஒரு பயனும் இல்லை. அது உங்களது அமைதியைப் பாழடிக்கும் செயலாகத்தான் இருக்கும். ‘இந்த நபர்கள் இப்படித்தான்’ என்று நினைத்துக் கொண்டு அவர்களை அடையாளம் கண்டு கொண்டால் போதும். அவர்களது இயல்பை மாற்றும் வீண் முயற்சியில் இறங்க வேண்டாம்.
2. சந்தர்ப்பவாதிகளைப் புரிந்துகொள்தல்: மன உளைச்சலைத் தரும் ஆசாமிகள் சந்தர்ப்பவாதிகளாக இருப்பார்கள். தங்களுக்குத் தேவை என வரும்போது உங்களை அளவுக்கு அதிகமாகப் புகழ்வார்கள். தேவையில்லாத தருணங்களில் உங்களை கடுமையாக விமர்சித்து அவமானப்படுத்துவார்கள் அல்லது தூக்கியெறிவார்கள். அவர்களின் பாராட்டு அல்லது அவமானங்கள் இரண்டையும் ஒதுக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால், இரண்டுமே உங்களைப் பற்றிய உண்மையான மதிப்பீடுகள் அல்ல. அவர்களது பார்வையிலும் உங்களைக் காயப்படுத்த வேண்டும் என்பதற்காகவே வலிந்து இப்படிப் பேசுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அமைதியாக இருக்க வேண்டும்.
3. எல்லை அமைத்தல்: உங்களைச் சுற்றி ஒரு வலுவான எல்லைக்கோட்டை அமைக்க வேண்டும். ‘என்னிடம் இப்படிப் பேசாதே, என் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடாதே, என்னால் உன் இஷ்டப்படி நடக்க முடியாது’ என்பது போன்ற உறுதியான விளக்கங்களை அவர்களுக்குத் தர வேண்டும். இதனால் உங்களது அமைதியும் சுயமரியாதையும் பாதுகாக்கப்படும். அவர்கள் உங்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் நினைக்கலாம். ஆனால், உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
4. தன்னை நம்புதல்: தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்வதற்காக அவர்கள் தேன் தடவிய வார்த்தைகளால் பேசுவார்கள். ‘என்னால் காயம் பட்டு விட்டீர்கள். அதற்காக மன்னிப்புக் கேட்கிறேன்’ என்று கூட சொல்வார்கள். ஆனால், அவர்களின் வார்த்தைகளை மட்டும் நம்பாமல் அவர்கள் செயல்கள், நடத்தை அப்படி இருக்கிறதா என்று பார்ப்பது மிகவும் அவசியம். அதில் எந்த மாற்றமும் இல்லை என்றால் நீங்கள் எதற்காகவும் அவர்களுக்கு வாக்குறுதி தரவே கூடாது. அவர்களை நம்பாமல் உங்கள் மீது தீவிர நம்பிக்கை வைத்து அதன்படி நடந்து கொண்டால்தான் உங்களது வார்த்தைகளுக்கு மரியாதை இருக்கும்.
5. எதிர்பார்ப்பு வேண்டாம்: மன உளைச்சலைத் தரும் ஆசாமிகளுக்கு பிறர் மீது பச்சாதாபம் இருக்காது. பிறரது மன வலியையும், கண்ணீரையும் கண்டுகொள்ள மாட்டார்கள். எனவே, அவற்றை அவர்களிடம் எதிர்பார்ப்பது பயனற்ற செயல். எதிர்பார்ப்பை தள்ளி வைத்து, அவர்களை ஒதுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஐந்து வழிமுறைகளையும் கடைபிடித்து, மன உளைச்சல் தரும் ஆசாமிகளை சமாளிக்கலாம்.