

ஒரு குடும்பத்தை பெருமைப்படுத்துவது என்பது கல்வி, நல்லொழுக்கம், தொழிலில் முன்னேற்றம் மற்றும் சமூகப் பொறுப்பு போன்றவற்றின் மூலம் அந்தக் குடும்பத்தின் நற்பெயரை காப்பதும், உயர்த்துவதற்கான சில வழிகளாகும். நேர்மையாக இருப்பது, கடினமாக உழைத்து முன்னேறுவது மற்றும் சமூகத்தில் பொறுப்புடன் நடந்து கொள்வது போன்றவையே குடும்பத்தின் நற்பெயரைக் காக்கும். குடும்பத்தின் பெருமையைக் காக்கும் சில விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு: நம் இலக்குகளை அடைவதற்காக கடினமாக உழைப்பதும், படிப்பில் சிறந்து விளங்குவதும், வேலையில் வெற்றிகரமாக திகழ்வது அல்லது சிறந்த தொழிலை அமைத்து பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைவது போன்றவை குடும்பத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயங்களாகும்.
2. உறவுகளைப் பேணுதல்: குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவை வளர்ப்பதும், பிணைப்பை வலுப்படுத்துவதும், ஒருவரையொருவர் ஆதரிப்பதும், அன்பைப் பகிர்ந்து கொள்வதும் என ஒற்றுமையாக வாழ்வது குடும்பத்திற்கு பலத்தையும், பெருமையையும் சேர்க்கும். குடும்பத்தின் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் மதிப்புகளை போற்றிப் பாதுகாப்பதும் அவற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதும் பெருமை சேர்க்கக்கூடிய விஷயங்களாகும்.
3. சமூகத்திற்கு பங்களிப்பு: குடும்பத்தைப் பெருமைப்படுத்தும் விஷயங்களில் சமூகத்திற்கான நம் பங்களிப்பும் முக்கியப் பங்கு வகிக்கும். நம் திறமைகளையும், நேரத்தையும் பயன்படுத்தி மற்றவர்களுக்கு உதவுவது, சமூகப் பணிகளில் ஈடுபடுவது, தன்னார்வத் தொண்டில் ஈடுபட்டு சமூக மேம்பாட்டிற்காக உழைப்பது ஆகியவை நம் குடும்பத்தின் மீதான மரியாதையை அதிகரிக்கச் செய்யும். சமூகத்தில் மரியாதையுடன் வாழ்ந்து நல்ல பெயரைப் பெறுவது அவசியம்.
4. தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் சுயமரியாதை: நம்மை நாமே மேம்படுத்திக் கொள்வது, புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்வது மற்றும் தன்னம்பிக்கையுடன் இருப்பது ஆகியவை நம் குடும்பம், நம் மீது பெருமைப்பட ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. நம் திறமைகளையும், தனிப்பட்ட வளர்ச்சிக்கும் முன்னுரிமை அளிப்பது, சவால்களை எதிர்கொள்ளும் மன வலிமையை வளர்த்துக்கொள்வது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் குடும்பத்தை பெருமைப்படுத்துவது என்பது நாம் செய்யும் செயல்கள், நம்முடைய நடத்தைகள் மற்றும் நாம் வாழும் வாழ்க்கை முறைகள் மூலம்தான் நம் குடும்பத்திற்கு நல்ல பெயரை பெற்றுத் தருவதுடன், மதிப்பையும் மரியாதையையும் பெற உதவும்.
5. பொறுப்புடன் நடந்து கொள்ளுதல்: குடும்பத்தை பெருமைப்படுத்தக்கூடிய விஷயங்களில் முக்கியமானது பொறுப்புணர்வு. பெரிய சாதனைகளை விட அன்றாட வாழ்வில் நாம் எப்படி பொறுப்பாக நடந்து கொள்கிறோம் என்பதே முக்கியமானது. நம் கடமைகளை சரியாகச் செய்வதும், நம்பகமானவராக இருப்பதும் மிகவும் முக்கியம். குடும்ப உறுப்பினர்களுடன் பேசுவதற்கு நேரத்தை ஒதுக்குவதும், அவர்களின் கருத்துக்களை கேட்பதும், அத்துடன் நம் உணர்வுகளை பகிர்ந்து கொள்வதும் என பொறுப்புடன் நடந்து கொள்வது நல்லது.
6. கலாசாரம் மற்றும் பாரம்பரியம்: நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய முறைகள், அவற்றின் மீதான மதிப்புகள், குடும்ப கட்டமைப்புகள், மரபுகள் மற்றும் விழாக்கள் ஆகியவை குடும்ப உறுப்பினர்கள் இடையே பிணைப்பை உருவாக்குவதுடன், எதிர்கால சந்ததியினருக்கு கலாசார அடையாளத்தை பாதுகாத்துக் கொடுப்பதும் குடும்பத்தை பெருமைப்படுத்தும். மூத்தோருக்கு மரியாதை அளிப்பது, குடும்ப முடிவுகளில் அவர்களின் ஆலோசனையை கேட்பது மற்றும் பாரம்பரிய விழாக்களை குடும்பத்துடன் இணைந்து கொண்டாடுவது போன்றவை குடும்பத்தின் பிணைப்பை வலுப்படுத்தும்.
ஒவ்வொரு குடும்பமும் வெவ்வேறு விஷயங்களை நினைத்து பெருமைப்படலாம்; அவற்றை மதிக்கலாம். ஆனால், பொதுவான அன்பும் மரியாதையும் எப்போதும் முக்கியம் என்பதையும் மறக்கக் கூடாது.