
சாணக்கியரின் அறிவும், ராஜ தந்திரமும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் இன்றளவும் போற்றப்படுகின்றன. இத்தாலி நாட்டின் அறிஞரான நிக்கோலோ மச்சியாவெல்லி, கிரேக்க அறிஞர்களான பிளேட்டோ, அரிஸ்டாடில் ஆகியோருக்கு இணையான அறிஞர் சாணக்கியர் என்று பலநாட்டு அறிஞர்களும் கூறுகின்றனர். அர்த்த சாஸ்திரம் மற்றும் சாணக்கிய நீதி என்னும் இரு நூல்களிலும் சாணக்கியர் மிகுந்த கண்டிப்பான விதிகளையே கூறியுள்ளார். அதில் வெற்றிக்குத் தடையாக இருக்கும் 7 பழக்க வழக்கங்கள் குறித்து சாணக்கியர் கூறுவதை இந்தப் பதிவில் காண்போம்.
1. சோம்பல்: இது இலக்குகளை அடைவதைத் தாமதப்படுத்துவதால் பெரிய இலக்குகளை சிறிதாகப்பிரித்துக் கொள்ள வேண்டும். பின்பு உந்துதலுடன் தொடர்ந்து தீவிர முயற்சியும் உடற்பயிற்சியும் செய்ய வேண்டியது அவசியம்.
2. பாதுகாப்பின்மை: பாதுகாப்பின்மையை எப்போது நாம் உணர்கிறோமோ அப்போதே புதிய வாய்ப்புகளை ஏற்றுக் கொள்வதை மனம் தடுக்கிறது. அதோடு, நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்படி காயப்படுத்துகிறது.
3. பேராசை: தவறான பாதைக்கு செல்வதற்கு பேராசையும் ஒரு காரணமாக அமைகிறது. செல்வத்தை மட்டும் ஒரு இலக்காகக் கருதாமல் அதை வழிமுறையாகக் கருதி திருப்தியுடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.
4. கோபம்: கோபம் முடிவெடுப்பதை பாதிப்பதோடு, உறவுகளில் கசப்பையும் உருவாக்குகிறது. ஆழமாக சுவாசித்து, தியானம் செய்து அமைதியான செயல்களில் கவனம் செலுத்துவதன் மூலம் கோபத்தை குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.
5. ஆணவம்: மற்றவர்களிடம் கேட்பதையும் கற்றுக் கொள்வதையும் தடுப்பதில் ஆணவத்திற்கு தனிப் பங்கு உண்டு. ஆதலால், அடக்கமாக இருந்து மற்றவர்களின் கருத்துக்கு மரியாதை கொடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
6. பொறுமையும் தன்னம்பிக்கையும்: ஒவ்வொரு சிறு சவால்களைக் கூட மிகுந்த தன்னம்பிக்கையுடனும் அளவற்ற பொறுமையுடனும் எதிர்கொள்ள வேண்டும். மேலும், மற்றவர்களுக்கு உதவி புரிபவர்களுக்கு சரியான நேரத்தில் உதவி தானாகவே கிடைக்கும்.
7. எதிர்மறை எண்ணங்கள்: முடியாது, கூடாது, இல்லை போன்ற எதிர்மறை எண்ணங்களை நினைப்பதைக் கூட அறவே தவிர்த்தால் வெற்றிக்கான பாதை மிக தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கும்.
சாணக்கிய நியதிப்படி மேற்கூறிய 7 பழக்கங்களை கையாண்டாலே நாம் மேற்கொள்ளும் சிறு முயற்சிகள் கூட வெற்றி அடையும்.