

ஒவ்வொரு நாளும் உங்கள் குழந்தை பள்ளியிலிருந்து திரும்பியதும், ‘இன்னிக்கு ஸ்கூல் எப்படி இருந்தது?’ என்று கேட்பதைத் தவிருங்கள். அதற்கு உங்கள் குழந்தை ஒற்றை வரியில் ஒரு பதிலை கூறிவிட்டு அப்பால் சென்றுவிடும். அதற்கு பதில் இப்பதிவில் கூறப்பட்டிருக்கும் ஏழு விதமான கேள்விகளைக் கேட்டு உரையாடுவது குழந்தையின் மனதில் உணர்வுபூர்வமான விழிப்புணர்வு, பிரச்னைகளை தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவது, பிறரிடம் பச்சாதாபம் கொள்வது போன்ற விஷயங்களில் ஈடுபாட்டை உண்டுபண்ணி வாழ்க்கையில் முன்னேற உதவி புரியும்.
1. இன்றைய தினத்தின் மிக முக்கிய பகுதியாக இருந்த நேரம் எது? இந்தக் கேள்வியை குழந்தையிடம் கேட்கும்போது அதன் மூளை அன்றைய தினத்தின் மகிழ்ச்சியான நிகழ்வுகளை நினைவில் கொண்டு வர முயற்சிக்கும். பிறகு, ‘இன்று, இடைவேளையின்போது நாங்கள் கிக்பால் விளையாடினோம்’ என்று பதில் சொல்லும்.
2. பாடம் கற்றுக்கொள்ள உதவும்படியான தவறு ஏதாவது இன்று நடந்ததா? இந்தக் கேள்வி, தவறு செய்வது அனைவருக்கும் சகஜம்தான். அதைப் பற்றி வெட்கப்பட ஒன்றுமில்லை. அது நமக்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்கவும், வாழ்க்கையில் முன்னேறவும் உதவும் என்று மென்மையான குரலில் எடுத்துரைப்பது குழந்தையை எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட உதவி புரியும்.
3. இன்று பெருமைப்படச் செய்யும்படியான செயல் புரிந்த மாணவர் யாராவது உண்டா? இக்கேள்வியை கேட்கும்போது, அது பிறர் சம்பந்தப்பட்ட விஷயமாகையால், ஆர்வமுடன் பிறிதொரு மாணவரின் ஒரு தைரியமான செயல் அல்லது அந்த மாணவன் தனது ஸ்நாக்ஸை மற்றவருடன் பகிர்ந்துகொண்ட விஷயத்தை சிலாகித்து கூற முற்படும். இதன் மூலம் உங்கள் குழந்தை பிறருடனான உறவின் மீது எந்த அளவுக்கு மதிப்பு கொண்டுள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும்.
4. எந்த ஒரு விஷயம் இன்று நடந்திருந்தால் இன்றைய தினம் சிறப்பாக அமைந்திருக்கும்? இந்த கேள்வி குழந்தையின் வெறுப்பையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தி, ‘இன்று கொஞ்சம் கூடுதல் நேரம் கிடைத்திருந்தால், ப்ராஜெக்ட் ஒன்றை வகுப்பிலேயே முடித்து டீச்சரிடம் ஒப்படைத்திருப்பேன். வீட்டுக்குக் கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது’ என்று கூறலாம். இது அவனுக்கு திட்டமிடுதலின் அவசியத்தையும், பிரச்னைகளை தீர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் உணர்த்த உதவும்.
5. இன்று நீ யாருக்காவது ஏதாவது உதவி செய்தாயா? இந்தக் கேள்வியை தினமும் குழந்தையிடம் கேட்பது, பிறரிடம் அன்பு செலுத்தி, ஆதரவாய் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை சிறு வயதிலேயே உணர்ந்து கற்றுக்கொள்ள உதவும்.
6. பள்ளிப் பாடம் தவிர இன்று வகுப்பில் நீ தெரிந்து கொண்டதில் எந்த விஷயம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தது? இப்படி ஒரு கேள்வியைக் கேட்கையில், உங்கள் குழந்தை, ‘எங்க டீச்சருக்கு வயலின் வாசிக்கத் தெரியுமாம். இன்னிக்குத்தான் எனக்கு அது தெரிய வந்தது’ என்று கூறும்போது, நீங்களும் ஆர்வமுடன் உரையாடலைத் தொடர அது ஒரு வாய்ப்பாகும்.
7. புதுசா ஏதாவது ஒன்றை முயற்சிக்கணும்னு விரும்பினால் உன்னுடைய தேர்வு எதுவாக இருக்கும்? இந்தக் கேள்வி குழந்தை தனது வசதியான சூழலிலிருந்து வெளிவந்து தைரியமுடன் தனக்குப் பழக்கமில்லாத ஒரு வேலையை முயற்சித்துப் பார்க்க ஊக்குவிக்கும். பள்ளியில் குறிப்பிட்ட விளையாட்டு ஒன்றில் தனித்திறமை பெற பயிற்சியளிக்கும் அமைப்பில் சேர விரும்பினால், அதில் சேர்த்து விடவும், ‘உனக்கு இது பொருந்தி வரவில்லை என்றால் எந்த நேரமும் விலகிக்கொள்ளலாம்’ என்று கூறி குழந்தையின் பயத்தை நீக்குவதும் பெற்றோரின் கடமையாகும்.
மேற்கண்ட ஏழு வகையான கேள்விகளை ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளிடம் அவ்வப்போது கேட்பார்களாயின், அவர்களின் குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த குடிமக்களாக விளங்குவர் என்பதில் சந்தேகமில்லை.