
நம் உடலின் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவுகளை சமநிலைப்படுத்தி இதய ஆரோக்கியம் காக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமானம் சிறக்கவும் உதவக்கூடியது பூண்டு. நம் அனைவரது வீடுகளிலும் பூண்டு எப்பொழுதும் சேமிப்பில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பூண்டு கெட்டுவிடாமல் நீண்ட நாட்கள் பயன்பட எப்படியெல்லாம் அதைப் பாதுகாக்கலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. முழு பூண்டு உருண்டைகளை ஈரமில்லாத, சூரிய வெளிச்சம் உட்புகாத, காற்றோட்டமுள்ள சமையலறை மேடை அல்லது கபோர்ட் போன்ற இடங்களில் பரத்தி வைக்கலாம்.
2. முழு பூண்டுகளை ஃபிரிட்ஜில் வைப்பது ஆரோக்கியமானதல்ல. அறையின் வெப்பநிலையில் வைத்துப் பாதுகாப்பதே நலம். ஃபிரிட்ஜில் வைக்கும்போது பூண்டு முளை விட்டு வளர ஆரம்பிக்கும். அதன் மூலம் பூண்டின் சுவை குன்றிவிடும்.
3. முழு பூண்டுகளை கண்ணிப் பை (Mesh Bag)களில் போட்டு வைப்பது, டெர்ரகோட்டா பூண்டு சேமிப்பான்களில் சேமித்தல் அல்லது மூங்கில் கூடைகளில் பிரவுன் பேப்பரை விரித்து அதன் மீது காற்றோட்டம் படுமாறு பரத்தி வைத்தல் போன்ற வழிகளைப் பின்பற்றுவது பாதுகாப்பானது. இதனால் பூண்டின் மீது பூஞ்சை படர்வதை தடுத்து நிறுத்தலாம்.
4. பூண்டை உபயோகத்திற்குத் தேவைப்படும்போது மட்டும், பூண்டு உருண்டைகளிலிருந்து மடல்களை பிரித்தெடுக்கவும். தேவையில்லாமல் பிரித்துப் போட்டு வைப்பது பூண்டின் சுவையை குன்றச் செய்து விடும்.
5. தோலுரித்த பூண்டுப் பற்கள் அல்லது நறுக்கிய துண்டுகளை காற்றுப் புகாத டப்பாக்களில் போட்டு ஃபிரிட்ஜில் வைக்கலாம் அல்லது ஐஸ் க்யூப் ட்ரேயில் போட்டு உறையச் செய்து நீண்ட நாள் உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
6. தோலுரித்த பூண்டுப் பற்களை ஒரு ஜாடியில் போட்டு அதன் மீது, மூழ்கும் அளவு ஆலிவ் ஆயில் ஊற்றி, மூடி ஃபிரிட்ஜில் வைத்தும் பாதுகாக்கலாம். ஆனால், இவ்வாறு வைக்கப்படும் பூண்டுகளை ஒரு வார காலத்திற்குள் உபயோகித்துவிடுவது நலம். இல்லையெனில், அவற்றின் மீது நச்சுக்களை உற்பத்தி பண்ணும் பாக்டீரியாக்கள் வளர ஆரம்பித்து போட்யூலிசம் (botulism) என்ற நோய்வரக் காரணமாகிவிடும்.
7. தோலுரித்து, நறுக்கி ஈரத் தன்மையின்றி காய வைத்தெடுத்த பூண்டுப் பற்களை காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்து வைத்து, பின்னாளில் அவற்றை சூப் மற்றும் ஸ்டூ ஆகியவற்றின் தயாரிப்பில் சேர்த்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
8. பூண்டுப் பற்களை வெறும் வாணலியில் நன்கு வறுத்தெடுத்து ஜாடியில் போட்டு மூடி ஃபிரிட்ஜில் வைத்தும் பிறகு உபயோகப்படுத்திக்கொள்ளலாம். இதனால் உணவுக்கு ஒரு மென்மையான, சிறிதளவு இனிப்பான சுவை சேரக்கூடும்.
9. ஜிப் லாக் போன்ற பிளாஸ்டிக் பைகளில் வைத்து சேமிக்கப்படும் பூண்டின் மீது சிறிய அளவில் ஈரப்பதம் படர்ந்து பூஞ்சை உண்டாகும் வாய்ப்புள்ளதால், அவற்றைத் தவிர்த்து, காற்றுப் புகக்கூடிய பைகளை உபயோகிப்பதே நன்மை தரும்.
மேலே கூறிய 9 வழிமுறைகளைப் பின்பற்றி பூண்டிலிருந்து கிடைக்கும் முழு பலனையும் பெற்று உடல் ஆரோக்கியம் காப்போம்.