
எந்த மொழி ஆகட்டும் அதில் வரும் எந்தப் பத்திரிகை ஆகட்டும், அது கொண்டிருக்கும் ஒரு முக்கியமான அம்சம் – குறுக்கெழுத்துப் போட்டி.
வேலை வெட்டி இல்லாமல் இதை ஏன் குடைந்து கொண்டிருக்கிறாய் என்று குறுக்கெழுத்துப் போட்டியுடன் போராடிக் கொண்டிருப்பவர்களை கிண்டல் செய்பவர்களை அன்றாடம் நாம் பார்க்கிறோம்.
ஆனால் அது மூளைக்கு வேலை கொடுத்து புத்திகூர்மையை வளர்க்கும் ஒரு போட்டி என்பதை அறிந்தவர்கள் சொல்வார்கள்.
குறுக்கெழுத்துப் போட்டி முதன் முதலாக 21-12-1913 அன்று நியூயார்க் வோர்ல்ட் என்ற செய்தித்தாளில் பிரசுரிக்கப்பட்டது.
இதை உருவாக்கியவர் ஆர்தர் வைன் (Arthur Wynne) என்னும் ஒரு பத்திரிகையாளர் தான்.
இதை வோர்ட் க்ராஸ் (word cross) என்று முதலில் கூறி வந்தனர். பின்னர் க்ராஸ் வோர்ட் பஸில் (crossword puzzle) என்று பெயர் மாறியது.
இது அடைந்த வரவேற்பைப் பார்த்த இதர பத்திரிகைகளும் இதை தங்கள் பத்திரிகைகளில் பிரசுரிக்க ஆரம்பித்தன.
இப்போதுள்ள கட்டங்கள் போல் அல்லாமல் முதலில் இது டயமண்ட் வடிவத்தில் பிரசுரிக்கப்பட்டது. பின்னர் இதன் வடிவம் இப்போது உள்ளது போல மாறியது. 1942ல் நியூயார்க் டைம்ஸ் இதை முதன் முதலாக பிரசுரிக்க ஆரம்பித்தது. அவ்வளவு தான், இதன் புகழ் பெரிதும் பரவி விட்டது.
யார் சிறந்த புதிர்களை அமைத்துத் தருகிறார்களோ அவர்களுக்கு நியூ யார்க் டைம்ஸ் வியக்க வைக்கும் ஊதியத்தைத் தந்தது. ஞாயிற்றுக்கிழமை புதிர் என்றால் 1500 டாலர். இதர நாட்களில் வரும் புதிர் என்றால் 500 டாலர்.
நியூயார்க் டைம்ஸ் குறுக்கெழுத்துப் போட்டியை 2 நிமிடம் 14 வினாடிகளில் பூர்த்தி செய்து சாதனை படைத்தவர் ஸ்டான்லி நியூமேன் என்பவர். 1996ல் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.
1926ம் ஆண்டு புடாபெஸ்ட் நகரில் இந்த புதிரைத் தீர்க்க முடியாத ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கான காரணத்தை அவர் இந்த புதிரை விடுவிப்பவர்களுக்கு அது தெரியும் என்று எழுதி இருந்தார். ஆனால் அந்த புதிர் விடுபடவே இல்லை.
இந்தப் புதிர்களில் ஆறு வகைகள் இருந்தன.
புதிர்கள் வர வர அதற்கான புத்தகங்களும் வரலாயின. இன்று உலகில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உருவாகி விட்டன. முதல் புத்தகம் 1924இல் வெளியானது.
இந்தப் புதிரில் வந்த மிகப் பெரிய வார்த்தை 56 (ஆங்கில) எழுத்துக்களைக் கொண்டிருந்தது.
இதைப் பார்த்து ஆயிர்த்தி தொள்ளாயிரத்து முப்பதுகளில் உருவானது தான் நாம் பார்க்கும் ஸ்க்ராபிள் என்னும் புதிர்.
இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்தவுடன் இது பாரிஸ் நகரில் தடை செய்யப்பட்டது. காரணம் இதில் ரகசிய சங்கேத செய்திகளை அனுப்பி நாசவேலைகளில் ஈடுபடுவார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டதால் தான்!
இங்கிலாந்தில் ரூபஸ் என்று செல்லமாக அழைக்கப்பட்ட ரோஜர் ஸ்குயிரெஸ் (Roger Squires ) 75000 குறுக்கெழுத்துப் போட்டிகளை உருவாக்கினார். இவற்றை விடுவிப்பதற்கான மொத்தம் 20 லட்சம் துப்புகள் (Clues) தரப்பட்டன. இவை 33 நாடுகளில் இந்தப் போட்டியின் ஆர்வலர்களால் விளையாடப்பட்டன.
7”x7” கட்டத்தில் 91000 சதுரக் கட்டங்களில் 28000 துப்புகள் தரப்பட்டிருந்த குறுக்கெழுத்துப் புதிரை கின்னஸ் புக் ஆஃப் ரிகார்ட்ஸ் மிகப் பெரிய குறுக்கெழுத்துப் புதிர் என்று பதிவு செய்திருக்கிறது.
சாமானியன் முதல் அரசர் மற்றும் அரசிகளாலும் இது வரவேற்கப்பட்டது என்பது ஒரு சுவையான செய்தி.
மிகப் பெரிய குறுக்கெழுத்துப் போட்டியில் 244971 கட்டங்கள் இருந்தன. இதை விடுவிக்க 66,666 துப்புகள் தரப்பட்டன. இதை ஜப்பானைச் சேர்ந்த நிகோலி கம்பெனி தயாரித்திருந்தது.
குறுக்கெழுத்துப் போட்டி ஆர்வலர்களுக்கு 'cruciverbalists' என்று ஒரு விசேஷ பெயரும் உண்டு
ஏராளமான உயிர் எழுத்துக்கள் இருப்பதால் இத்தாலிய மொழியில் குறுக்கெழுத்துப் போட்டியை அமைப்பது என்பது ஒரு கஷ்டமான காரியம் என்று சொல்லப்படுகிறது,
பயன்கள் என்ன?
குறுக்கெழுத்துப் போட்டியை சரியாக பூர்த்தி செய்வதால் என்ன பயன்கள் என்று கேட்பவர்களுக்கு ஒரு பெரும் பட்டியலே தரப்படுகிறது.
மனதிற்கான பயிற்சி இது.
மனோவேகம் அதிகரிப்பதோடு பிரச்சனைகளைத் தீர்க்கும் சக்தி உருவாகிறது.
நினவாற்றல் கூடுகிறது. வயதானவர்களுக்கு ஏற்படும் மறதி நோய் தடுக்கப்படுகிறது.
மூளையின் மோட்டார் திறமைகள் (நரம்பு இயக்கு தசை) அதிகமாகின்றன.
மன அழுத்தம் குறைகிறது. மூளையில் டோபமைன் அதிகரிக்கிறது. இதனால் மனோநிலையும் மூளை திறமையும் கூடுகிறது.
இடது மற்றும் வலது பக்க மூளை ஆற்றல் செயல்படுவதால் முழு மூளை ஆற்றலை இது ஊக்குவிக்கிறது.
குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் இந்த புதிரை விடுவிக்க ஆரம்பிக்கும் போது குடும்பத்தில் ஒரு குதூகலம் ஏற்படுத்துகிறது.
குழந்தையிலிருந்து அதிக வயதானவர்கள் வரை, ஆண், பெண் பாகுபாடின்றி, தேசம், இனம், மொழி, நாடு என்ற எல்லைகளைக் கடந்து அனைவரும் புதிர் விளையாட்டில் ஈடுபடலாம்.
மொத்தத்தில் உடன்மறை சிந்தனை ஆற்றல் கூடுகிறது.
ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணுவதில் பல வித அணுகுமுறையைக் கையாள நேர்வதால் பிரச்சனைகளைத் தீர்க்கும் சக்தி அதிகரிக்கிறது.
மூளைக்கு உற்சாகம் தருவதோடு இவை அதிகம் டிவி பார்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது, சமூக ஊடகங்களில் தேவையற்று நேரத்தைக் கழிப்பது போன்றவற்றைத் தடுத்து அதனால் ஏற்படும் தீமைகளைத் தடுக்கிறது.
என்ன, குறுக்கெழுத்துப் போட்டி வெளியாகியுள்ள பக்கத்தை எடுப்பதற்கு கிளம்பிவிட்டீர்களா? வெற்றி பெற வாழ்த்துக்கள்!