

சில வீடுகளில் வயதில் மூத்த பெரியவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கே 80 அல்லது 90 வயது ஆகி இருக்கும். ஆனாலும், கூட்டுக்குடும்பம் என்ற பெயரில் அவர்களுக்கு உண்டான சொத்துக்களையோ அல்லது பொருட்களையோ தங்கள் பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுக்கும் மனமின்றி தங்கள் மறைவிற்குப் பிறகுதான் என்று உறுதியாகச் சொல்வார்கள். இதனால் பல குடும்பங்களில் பிரச்னைகள் ஏற்பட்டு உறவு முறைகள் சீரழிவதுடன், சில சமயங்களில் சொத்துக்காக மரணங்களைக் கூட ஏற்படுத்தும் ஆபத்தைக் காண்கிறோம்.
வாழ்க்கை என்பது நிரந்தரமல்ல என்று புரிந்து கொண்டவர்கள், தாங்கள் சேமித்த சொத்துக்கள் தாங்கள் இருக்கும்போதே பிரச்னை வராமல் தங்களாலேயே சமன் செய்து விட வேண்டும் என்று விரும்பி அதற்குண்டான தான தர்மங்கள் மற்றும் உறவுகளுக்குப் பிரித்துக் கொடுப்பது போன்ற விஷயங்களில் தெளிவாக இருப்பார்கள். ஆனால், இந்தக் காலத்தில் எவரையும் நம்ப முடியாது என்ற நோக்கில் பெற்ற பிள்ளைகளிடம் இருந்து கூட கை நீட்டி காசு வாங்கக் கூடாது எனும் கௌரவம் சார்ந்த பிரச்னையாக இது பார்க்கப்படுவதால் சொத்துக்கள் தங்கள் மறைவிற்குப் பின்தான் என்பதில் பல பெற்றோர்கள் உறுதியாக இருக்கின்றனர்.
இதேபோல்தான். வீட்டில் உள்ள பொருட்களையும் சிலர் எப்போதும் சேர்த்த வண்ணம் இருப்பார்கள். அது அவர்களுக்குப் பயன்படுகிறதா இல்லையா என்பதையெல்லாம் தாண்டி, அது என்னுடையது. அது இங்கேதான் இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார்கள். இதனால் வீட்டில் உள்ளவர்களுக்கு அதைப் பாதுகாப்பது மற்றும் பராமரிப்பது போன்ற பல பிரச்னைகள் எழுவதுண்டு. பிரயோஜனமின்றி அது இருந்தாலும் அவற்றைத் தேவைப்படுபவருக்குத் தரலாம் என்ற எண்ணம் இல்லாமல் இருப்பார்கள் சில வயது முதிர்ந்தவர்கள். இந்த இடத்தில்தான் வருகிறது ‘டெத் கிளீனிங்’ எனும் வாழ்க்கை முறை.
‘என்னது, டெத் கிளீனிங்கா? நான் இன்னும் வாழ வேண்டும் என நினைக்கிறேன். அதற்குள்ளாகவா?’ என நினைப்பவர்களும் இதை அறிந்துகொள்வது இறுதிக் காலத்தில் நிம்மதியான வாழ்வுக்கு நல்லது. ‘டெத் க்ளீனிங்’ (Death Cleaning) என்பது சுவீடிஷ் மொழியில் இருந்து வந்த வார்த்தை. ‘Döstädning’ (உச்சரிப்பு: டூ-ஸ்டேட்னிங்) என்பதே இதன் அசலாகிறது. இது ஒரு வாழ்க்கை முறை மற்றும் மன அமைதிக்கான பழக்கமும் ஆகும். குறிப்பாக, ஒருவர் மறைவுக்கு முன் வாழ்க்கையை ஒழுங்கு செய்து எளிமைப்படுத்துவதற்கான செயல்.
அதாவது, நமது மரணத்திற்குப் பிறகு குடும்பத்தினரும் நண்பர்களும் சிரமப்படாமல் இருக்க, நாம் உயிரோடு இருக்கும்போதே தேவையற்ற பொருட்களை அகற்றுவது, ஒழுங்குபடுத்துவது மற்றும் முக்கியமானவற்றை மட்டும் வைத்துக்கொள்வது என்பதாகும்.
‘நான் இருக்கறப்பவே எனது சொத்தையெல்லாம் ஒழுங்குபடுத்துவேன்’ என்று சிலர் சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால், வெகு சிலரே இப்படி சிந்திக்கின்றனர். ஆனால், உலகளவில் இந்தக் கருத்தை முதன்முதலில் பிரபலப்படுத்தியவர் மார்கரெட்டா மாக்னூசன் (Margareta Magnusson) என்பவர். அவர் எழுதிய புத்தகமான, ‘The Gentle Art of Swedish Death Cleaning’ (2017) எனும் நூல் இந்த முறை பற்றிய விபரங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.
சரி, இதன் முக்கியமான நோக்கங்கள் என்ன என்று கேட்பவர்களுக்கு இதோ சிறு விளக்கம். ஏகப்பட்ட பொருட்களை சேர்ப்பதால் அசந்தர்ப்பமான சமயத்தில் அவற்றை என்ன செய்வது என்ற மனக்குழப்பம் வரும். இதை விடுத்து உயிரோடு இருக்கும்போதே எளிமையான வாழ்க்கையை நடத்துதல் சிறந்தது. மேலும், நம்முடைய மரணத்திற்குப் பிறகு நாம் சேர்த்த பொருட்களை பிறர் சுமையாக உணர்வது நிச்சயம். அதைத் தவிர்க்க இந்த முறை உதவும். சொத்துக்கள் இருந்தால். ‘இவை இவை உங்களுக்கு’ என உங்களின் விருப்பப்படி பிரித்து எழுதி வைப்பதும் பின்னாளில் மன அமைதியைத் தருவதாக அமையும்.
தேவையற்ற பொருட்கள் குறைவதால் சுத்தமான சுற்றுப்புறமும் வேலை டென்ஷனும் நீங்கும். ஆனால், உங்களுக்கு எந்தப் பொருட்கள் முக்கியம், எவை அல்ல என்பதில் தெளிவாக இருங்கள்.
சரி, டெத் கிளீனிங் செய்யத் தயார். அதை எப்படித் துவங்குவது? முதலில் பொருட்களில் துவங்குவோம். சிறிது நேரம் கிடைத்தாலும் வீட்டிலுள்ள ஒவ்வொரு அறையிலும் தேவையற்ற பொருட்களை சோதனை செய்து குறித்துக் கொள்ளுங்கள். உங்கள் நினைவுகளுடன் பிணைந்த பொருட்களை மதித்துப் பார்த்து, உண்மையில் தேவைப்பட்டவற்றை மட்டும் தனியே வைத்துக்கொள்ளுங்கள். இப்போது தேவை இல்லை என நினைக்கும் பொருட்களை அன்பானவர்களுக்குத் தாருங்கள்.
உதாரணமாக, உடற்பயிற்சி செய்ய ட்ரெட்மில் வாங்கி இருப்பீர்கள். வயதான காரணத்தினால் அதை உபயோகிக்க முடியாமல் மூலையில் கிடக்கும். அதை தேவைப்படும் பேரனுக்கு அல்லது ஒரு இளைஞருக்குத் தந்து விடுங்கள். இதுதான் உயிரோடு இருக்கும்போதே பகிர்ந்துகொள்வது.
அடுத்து, முக்கியமான விஷயம். ஆவணங்களை ஒழுங்குபடுத்தல். விலைமதிப்புள்ள தகவல்கள், சொத்து ஆவணங்கள் போன்றவற்றை தெளிவாக வைத்தல். உங்கள் பீரோவில் உங்களுக்கு மட்டுமே தெரிந்த சொத்து, வங்கி விபரங்கள் போன்ற சான்றுகளை நம்பிக்கைக்குரியவரிடம் ஒப்படைத்து (உங்கள் பாதுகாப்பை உறுதி செய்து) விடுங்கள். இதனால் வீட்டு உறுப்பினர்களுக்கும் உங்களிடம் அன்பு கூடும்.
சரி, இப்படியெல்லாம் செய்தால் என்ன நன்மை கிடைக்கும் என்பவர்களுக்கான பதில், மன அழுத்தம் குறைகிறது, வாழ்க்கை எளிமையாகிறது, குடும்பத்தினருக்கு சுமை குறைகிறது, பழைய நினைவுகளைப் புதுப்பிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. குறிப்பாக, டெத் க்ளீனிங் என்பது மரணத்திற்காக அல்ல, வாழ்க்கைக்காக செய்யப்படும் சுத்தம் மற்றும் பொருட்களை ஒழுங்குபடுத்தி, தேவையற்றவற்றை அகற்றி, வாழ்க்கையை எளிமையாக்கும் மனப்பாங்கு என்பதை நினைவில் வைத்து மகிழ்வுடன் மீதமுள்ள வாழ்வை ரசிப்போம்.