
1. பூஜைக்கு வாங்கிய வெற்றிலையை ஒரு பித்தளை டம்ளரில் வைத்துக் கவிழ்த்து மூடி வையுங்கள். வெற்றிலை வைத்தபடி வாடாமல் இருக்கும்.
2. தண்ணீரைக் கொதிக்க வைத்து வாளியில் ஊற்றிச் சிறிது வாஷிங் பவுடரைப் போட்டு, சமையலறையில் பயன்படுத்தும் கைப்பிடித் துணிகளை அதில் முக்கி ஒரு மணி நேரம் கழித்து கசக்கி அலசினால் எண்ணெய் பிசுக்கு அறவே நீங்கி விடும்.
3. பவுடர் டப்பாவில் அதிக துளைபோட்டுவிட்டால், மெழுகுவர்த்தியைக் கொளுத்தி அதில் வரும் திரவம் கொண்டு ஓட்டை மீது விடுங்கள். ஒரு நொடியில் துவாரம் அடைபட்டு விடும்.
4. பிரட் டோஸ்டரில் மிகவும் சிறிய கரப்பான் பூச்சி புகுந்து விட்டால், தலை உலர்த்தும் ஹேர் டிரையரைமெதுவாக சுழலவிட்டு டோஸ்டர் அருகே காட்டுங்கள். காற்று, மிதமான உஷ்ணம் தாங்க முடியாமல் கரப்பான் பூச்சி வெளியே வந்து விழும்.
5. மாலையில் வாங்கும் மல்லிகைப் பூ மறு தினத்திற்கும் வாடாமல் இருக்க, ஒரு பாத்திரத்தை நீரில் முக்கி எடுத்து, அதில் பூக்களை வைத்து மூடி வைக்கவும். மறுநாள் வரை பூக்கள் வாடாமல் புதியதாக மணமுடன் இருக்கும்.
6. பண்டிகையன்று வாசலில் கோலம் போட காவி இல்லையென்றால், கொஞ்சம் மஞ்சள் தூளுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்துக் குழையுங்கள். வாசலில் இடுவதற்கு காவி ரெடி.
7. புடைவைக்கு கஞ்சி போடும்பொழுது, கொடியில் உலரப் போடுவதை விட தரையில் காய வைப்பது சிறந்தது. ஏனெனில் நாமே அயர்ன் செய்வதாக இருந்தால் கூட சுலபமாக இருக்கும்.
8. ஜாதகங்களுக்கு மஞ்சள் தடவுவதற்கு முன் ஜெராக்ஸ் எடுத்து விட்டு காப்பிகளிலும் மஞ்சள் தடவுங்கள்.
9. விருந்துகளில் தலைவாழை இலையை எப்படி போடுவது என்று பல பேருக்குத் தெரியாது. தலைவாழை இலையின் வெட்டப்பட்ட பகுதி வலது பக்கம் இருக்குமாறு இலையைப் போட வேண்டும்.
10. விருந்து, பார்ட்டி போன்று பலர் கூடும் அறையினுள் ஒருசில மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்தால், காற்று சுத்தமாக இருப்பதுடன், சுவாசிப்பதும் எளிதாக இருக்கும்.
11. எக்காரணம் கொண்டும் தேன், இட்லி மாவு, ஜென்சன் வயலட் போன்றவற்றை தீக்காயத்தின் மீது பூசக் கூடாது.
12. டிஷ்யூ பேப்பரைக் கொண்டு வீட்டில் உள்ள கண்ணாடிக் கதவுகளைத் துடைத்தால் பளிச்சென்று ஆகிவிடும்.