

1. முதல் மாதம் மளிகைச் சாமான்கள் வாங்கிய லிஸ்டையும் பில்லையும் பத்திரப்படுத்தி வையுங்கள். அடுத்த மாதம் மளிகை லிஸ்ட் தயாரிப்பதற்கும், விலையை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கும் பெரிதும் உதவும்.
2. காந்தத்தையோ, காந்தம் உள்ள பொருட்களையோ டிவிக்கு அருகில் வைக்காதீர்கள். இதனால் டிவி பழுதடையக்கூடும்.
3. சாலையோரக் கடைகளில் இருந்து வாங்கிய துணிகளை கட்டாயமாக டெட்டால் கலந்த நீரில் ஊறப்போட்டு அலசிய பிறகே அணியவும். இதனால் சரும வியாதிகள் ஏற்படாமல் இருக்கும்.
4. வெளியூருக்கு இரவில் பஸ்ஸில் பயணம் செல்லும்போது காலணிகளை தனியாக ஒரு கவரில் போட்டு வைத்தால் இறங்கும்போது காலணிகளைத் தேடும் வேலை இருக்காது.
5. வீட்டில் இருக்கும் ஃப்ரிட்ஜை அடிக்கடி திறந்து மூடாமல் இருந்தால் ஃப்ரிட்ஜ் சீக்கிரமாகப் பழுதாகாது. கணிசமாக மின்சாரச் செலவும் மிச்சப்படும்.
6. கியாஸ் லைட்டரை மர ஸ்டாண்டில் வைத்துப் பயன்படுத்தினால் நீண்ட நாட்கள் உழைக்கும்.
7. பட்டுப் புடைவைக்கு நடுவே நாஃப்தலின் உருண்டைகள் வைக்கும்போது ஒரு மெல்லிய துணியில் கட்டி வைக்க வேண்டும். நேரடியாக வைப்பதைத் தவிர்க்கவும்.
8. புது செருப்பு காலைக் கடிக்கிறதா? செருப்பை கால் மணி நேரம் தண்ணீரில் போட்டு வைக்கவும். பின்பு காயவைத்து போட்டுப் பார்த்தால் செருப்பு கடிக்காது.
9. மிக்ஸி, கிரைண்டர், அயர்ன் பாக்ஸ், டேபிள் ஃபேன் போன்ற மின்சார உபகரணங்களின் பிளக்கை சுவிட்ச் போர்டில் இருந்து கழற்றியே வையுங்கள். இச்செய்கையால் குட்டிக் குழந்தைகள் இருக்கும் வீட்டில் மின்சார விபத்து ஏற்படாமல் தவிர்க்கலாம்.
10. சமையல் அறையில் கடிகாரம் இருப்பது மிகவும் அவசியம். காலை நேர அவசரத்தில் சரியான நேரம் தெரிந்தால்தான் குழந்தைகளுக்கும், கணவருக்குமான டிபன், சாப்பாடு ஆகியவற்றை உரிய நேரத்தில் சமைக்க முடியும்.
11. பிரஷர் குக்கர் காஸ்கட்டைக் கழுவி ஃப்ரீசரில் வைத்துப் பயன்படுத்தினால் காஸ்கட் நீண்ட நாட்களுக்கு உழைக்கும்.
12. குளியல் சோப்பு சிறியதாகி விட்டால் அதை வீசி விட வேண்டாம். கலர் ஜாக்கெட்டுக்களை துவைக்கப் பயன்படுத்தலாம். குளியல் சோப்பு மென்மையாக இருப்பதால் ஜாக்கெட்டின் நிறம் போகாது. புதுசு போல் மின்னும்.