
குடும்பத்தில் தொண்டு தொற்று நடந்து வரும் ஒரு பழக்கம் என்னவென்றால் வீட்டில் இருக்கும் ஆண் மக்கள் அவசரத்திற்கு பணம் இல்லாது தவிக்கும் பொழுது, பெண்மணிகள் அவர்களின் சிறுவாட்டில் இருந்து தக்க சமயத்தில் எடுத்துக் கொடுத்து உதவுவார்கள். அவர்கள் அதை எப்படி சேமிக்கிறார்கள்? எதில் மிச்சம் பிடிக்கிறார்கள் என்பதெல்லாம் வெளியில் தெரியாது. ஆனால் அஞ்சறைப்பெட்டியிலோ, அரிசி பானையிலோ, சுருக்கு பையிலோ ஒரு சிறுவாட்டு பணம் எல்லோர் வீட்டிலும் இருப்பில் இருப்பது அத்தியாவசியமான ஒன்றாக அப்பொழுது கருதப்பட்டது. அப்படி சிறுக சிறுக சேமித்து அதை தங்க நகையாக மாற்ற முடிந்த ஒரு சம்பவத்தை இப்பதிவில் காண்போம்.
என் தோழியின் கணவர் வியாபாரம் நிமித்தமாக வெளியூர், வெளிமாநில பயணங்களுக்கு சென்று விட்டால், என் தோழி வீட்டில் இருக்கும் தயிரையாவது கடைந்து மற்றவர்களுக்கு விற்று அதில் ஒரு சிறுவாட்டு பணம் சேர்த்து விடுவார். அதை சேமித்து வைத்துக் கொள்வார்.
அதேபோல் வீட்டைச் சுற்றிலும் உள்ள காய்கறி, மரம், செடி, கொடிகளில் உள்ள தேங்காயில் இருந்து மாங்காய் என்று சீசனுக்கு தகுந்தாற்போல விளையும் தானிய, காய்கறி, கீரை, பழ வகைகளான பொருட்களை பறித்து அதை திண்ணையில் வைத்து விற்று அதில் வரும் பணத்தை சேமிப்பில் வைப்பார்.
இந்தப் பணத்தை சேமித்து அன்றைய காலகட்டத்தில் எவ்வளவு சேமிக்க முடிந்ததோ அதற்கு தகுந்தார் போல் ஒரு கிராம் தங்கத்தையாவது தங்க காசாக வாங்கி வைத்து விடுவார். இதேபோல தீபாவளி, பொங்கல், பிறந்தநாள் திருமண நாள் என்று காசு சேர்த்து அப்பொழுதும் தங்க காசு தான் 1 கிராமாவது வாங்குவார்.
நாளடைவில் 25 வருடங்களுக்கு முன்பு அட்சய திருதியை அன்று பெரும்பாலான மக்கள் தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்ததும் ஒரு கிராம் தங்கத்துக்கு பதிலாக இரண்டு மூன்று கிராம் ஆவது பணம் சேர்த்து வாங்கி விடுவதை குறியாக வைத்திருந்தார்.
ஒரு காலகட்டத்தில் அவரின் கணவரின் வியாபாரம் சற்று நொடிக்கத் தொடங்கியது. அப்பொழுது வளர்ந்த பெண்ணுக்கு திருமணம் செய்ய நல்ல மாப்பிள்ளைகள் வந்தபோது அவர் கணவர் கையில் காசு இல்லாமல் திண்டாடினார். நகைகள் எதையும் பெண்ணிற்கு தான் செய்து வைக்கவில்லையே என்ற குற்ற உணர்வில் பரிதவித்தார்.
அப்பொழுது என்ன செய்வது என்று அறியாது திகைத்த நேரத்தில் இந்த தங்க காசுகள் தான் அவர்களுக்கு பெரும் உதவியாக இருந்தன. அப்பொழுது ஒரு கிராம் என்று எல்லாவற்றையும் இளக்காரமாக பேசியவர், அதன் பயன்பாட்டை அப்பொழுதுதான் உணர ஆரம்பித்தார். அவற்றை எடுத்துச் சென்று தேவையான அளவு அதற்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் நகையாக மாற்றி, மற்ற செலவுகளுக்கும் கொஞ்சம் அதில் பணம் வைத்துக்கொண்டு, திருமணத்தை அளவுக்கு அதிகமான ஆடம்பரம் இல்லாவிட்டாலும், அழகாகவும் எந்த உணவுப் பொருளும் வீணாகாத மாதிரியும் சிறப்பாக செய்து முடித்தார்கள்.
இந்த என் தோழி மிகவும் தீவிரமாக ஒரு கிராம் தங்க காசுகளை சேகரித்த பொழுது ஒரு கிராம் தங்கத்தின் விலை வெறும் 400 ரூபாய் மட்டுமே. அப்பொழுதிலிருந்தே அவள் அதிகம் விலை கொடுத்து துணிமணிகள், பாத்திரம், பண்டங்கள் சேகரிக்க மாட்டார். அதற்குப் பதிலாக தங்க காசுகளை தான் சேர்த்து எண்ணி வைப்பார். அது தேவையான பொழுது பல மடங்காக பெருகி சிறு துளி பெருவெள்ளம் போல் பெருகியிருந்தது.
எப்பொழுதும் அட்சய திருதியை என்று அந்த தோழியின் நினைவு தான் எங்களுக்கு வரும். அப்பொழுது அவரிடம் இந்த தங்க நகை விபரத்தை பரிமாறிக் கொள்வோம். கட்டாயமாக தங்கம் வாங்குவது கூட தக்க சமயத்தில் உதவிகரமாக இருக்கும். ஆதலால் விலை அதிகம் என்று பயந்து கொண்டு வாங்காமல் இருப்பதை விட இருக்கும் காசுக்கு துணிமணியே வாங்கி அடுக்காமல் ஒரு கிராம் தங்கமாவது வாங்கி வைத்துக் கொண்டால், காலம் வரும் பொழுது நமக்கு கை கொடுக்கும் என்பதை தோழியின் அனுபவம் வாயிலாக தெரிந்து கொண்டோம்.
வருடா வருடம் அட்சய திருதியையில் ஒரு கிராம் தங்கமாவது வாங்கி சேமிப்பதில் இப்படி ஒரு நன்மை இருக்கத்தான் செய்கிறது. ஆகவே தோழிகளே! உங்களிடமும் சிறுவாட்டு பணம் இருந்தால் தங்கத்தில் சேமிக்கலாம்.