
அட்சய திருதியை ஏப்ரல் 30ஆம் தேதி அன்று புதன்கிழமை வருகிறது. அக்ஷயம் என்றால் வளருதல் என்று அர்த்தம். அன்று நாம் செய்யும் எந்த புண்ணிய காரியங்களும் நம்முடன் வளர்ந்து கொண்டே வரும். தான தர்மங்கள் செய்வது பல கோடி புண்ணியங்களை அள்ளித்தரும். அன்று மகாலட்சுமி வாசம் செய்யும் உப்பை வாங்கி காலையில் பொழுதை துவக்கினால் இல்லத்தில் வளம் செழித்து செல்வம் கொழிக்கும். பாற்கடலில் தோன்றியவள் மகாலட்சுமி. அதே பாற்கடலில் தோன்றியதுதான் உப்பு. அந்த உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அட்சய திருதியை அன்று பாற்கடல் வாசனின் பத்தினியின் பார்வை பட்டாலே போதும் பரம தரிசனம் பரிபூரண செல்வம் பெறுவான் என்கின்றன புராணங்கள். ஆனால் அலைமகளின் பார்வையோ ஓர் இடத்திலும் நிலையாக இல்லாமல் அலைபாயும் தன்மை உடையது. அவள் நிலையாக இருக்கும் ஒரே இடம் மிக மிக உயர்வானதும் நிச்சயம் பலனளிப்பதாகவும் கூறப்படுவது ஸ்ரீ ஸ்துதி என்னும் சுலோகம்.
ஒரு சமயம் தென்திருப்பதிகளை தரிசிக்கப் புறப்பட்டபோது திருவஹீந்திரம் கோவிலில் வந்து தங்கினார் வேதாந்த தேசிகர். அங்கு அவருக்கு கருடாழ்வார் தரிசனம் கிடைக்கப் பெற்றார். பக்தியிலும் ஞானத்திலும் செல்வந்தராகவும் திகழ்ந்த தேசிகர் தனக்கென பொருள் ஏதும் வைத்துக் கொள்ளவில்லை. சாப்பாடு கூட எப்போது கிடைக்கிறதோ அப்போது சாப்பிடுவார். இல்லாவிட்டால் பேசாமல் இருந்து விடுவார். அப்படிப்பட்டவரை பரிகாசம் செய்வதையே அவ்வூரில் வசித்த சிலர் வழக்கமாகக் கொண்டிருந்தனர். அப்படி ஒரு நாள் அந்த ஊர்க்காரர்களிடம் யாசகம் கேட்டு வந்த ஒருவரிடம் இங்கிருந்து இரண்டு தெரு தள்ளிப்போ அங்கே தேசிகன் என்று ஒருவர் இருப்பார், அவரிடம் போய் கேளு நீ வேண்டியவை எல்லாம் அள்ளி அள்ளிக் கொடுப்பார்; அவ்வளவு பெரிய செல்வந்தர் எனச் சொல்லி அனுப்பி வைத்தனர் அந்த ஊரில் உள்ள சிலர். யாசகம் பெற வந்தவரும் அதை உண்மை என நம்பி தேசிகரிடம்சென்று தனக்கு பொருள் வேண்டும் என்று கேட்டார்.
நேரில்சென்று நிலையை பார்த்த பிறகும் ஆர்வம் மிகுதியின் காரணமாக அவரது நிலையில் கவனிக்காமல் பொருள் வேண்டும் என கேட்டார். ஆனால் அதற்கு மறுத்து ஏதும் சொல்லாமல் நேரடியாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். தாயார் சன்னதிக்கு சென்ற தேசிகர் மனம் உருகி ஸ்ரீ ஸ்துதியை பாடினார். அதாவது ஸ்ரீ ஆன மகாலட்சுமியை போற்றி பாடினார். மகாலட்சுமி தேவி தங்கத்தை மழையாக பொழிந்தார்.
அதில் தர்ம நெறிகளின் படி தனக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை வேண்டாம் என மறுத்துவிட்டார் யாசகம் பெற வந்தவர். அப்போதும் பிரகலாதனை போல் எனக்கு எதுவும் வேண்டாம் என நினைத்தார். இதை பார்த்து அந்த ஊர் மக்கள் ஆச்சரியப்பட்டனர். இந்த ஸ்ரீ ஸ்துதி இப்போதும் திருமலையில் ஒலிக்கிறது. வேதாந்த தேசிகருக்கு பூஜையும் நடக்கிறது. ஸ்ரீ ஸ்துதியானது இருபத்தைந்து ஸ்தோத்திரங்களைக் கொண்டது. இவற்றில் முதல் இருபத்தி நான்கு ஸ்தோத்திரங்கள் மந்தா கிராந்தா விருத்தம் என்ற முறையிலும் இருபத்தைந்தாவது ஸ்தோத்திரம்மாலினி விருத்தம் என்ற முறையிலும் பாடப்பட்டுள்ளது. ஸ்தோத்திரம் என்பது இருப்பதை அப்படியே சொல்வது. தர்மம் அதர்மம் காமம் மோட்சம் பற்றியும் வேதாந்த தேசிகர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஸ்ரீ ஸ்துதியின் மகிமையாலேயே திருமலை திருப்பதி உண்டியலில் காணி க்கை கோடிக்கணக்கில் குவிந்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் மகாலட்சுமி மற்றும் பெருமாளின் மனதை உருக செய்யவும் வற்றாத செல்வ வளம் பெருகவும் ஸ்ரீ ஸ்துதியை அட்சய திருதியை அன்று ஒவ்வொரு இல்லங்களிலும் பாராயணம் செய்து நாமும் குபேரன் அளவு செல்வங்கள் பெற்று மஹாலக்ஷ்மியை மனதார ஆராதித்து மகாலட்சுமியின் பேரருளை பெறுவோம்.