Real food
Real foodhttps://www.iberdrola.com

உண்மையான உணவைத்தான் நாம் உண்கிறோமோ?

ஜூன் 19, உண்மையான உணவு நாள்

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பளபளப்பான பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை உண்பது அதிகரித்து வருகிறது. இதனால் உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இந்தப் பதிவில் உண்மையான உணவை உண்பதன் அவசியத்தைப் பற்றி பார்ப்போம்.

உண்மையான உணவு நாள்: உண்மையான உணவு நாள் என்பது ஜூன் மாதம் 19ம் தேதி அன்று அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளை கொண்டாடுவதன் முக்கியத்துவத்தை பற்றியும் ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும் வலியுறுத்துவதாக அமைகிறது. இது அமெரிக்காவில் தொடங்கப்பட்டாலும் உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் மிகவும் பயனுள்ள ஒரு நாளாகும்.

போலியான உணவு என்றால் என்ன?: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பளபளப்பான சாக்லேட்டுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை அவற்றின் சுவைக்காக மட்டுமே உண்ணும் கலாசாரம் தற்போது அதிகரித்து வருகிறது. இவை போலி உணவுகள் ஆகும். உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு சிறிதும் பயன் தராத இந்த குப்பை உணவுகளைத்தான் மக்கள் அதிகமாக தேடித்தேடி உண்கின்றனர் என்பது கசப்பான உண்மை. மக்களின் ரசனைற்கு ஏற்ப உணவுக் கலாசாரத்தின் தன்மை மாறி துரித உணவுகள் மற்றும் சத்தற்ற குப்பை உணவுகளை விநியோகிக்கும் உணவகங்கள் தெருக்கள்தோறும் அதிகரித்து வருகின்றன. அவற்றின் முன்னால் நின்றிருக்கும் பெரும் கூட்டமே அவற்றின் வளர்ச்சிக்குக் காரணம்.

போலியான உணவுகளை உண்பதால் உண்டாகும் தீமைகள்: 20 வருடங்களுக்கு முன்பு வரை கூட வெளியே உணவகங்களில் உண்ணுவது சற்றே அரிதான விஷயமாகத்தான் இருந்தது. தற்போது வீடுகளில் சமைப்பது குறைந்து கொண்டே வந்து உணவகங்களில் ஆர்டர் செய்து அந்த உணவுகளை உண்ண மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளில் அதிக அளவு சர்க்கரை, உப்பு, பதப்படுத்தப்படுவதற்காக சேர்க்கும் செயற்கை நிறமூட்டிகள் போன்றவை அனைத்து விதமான நோய்களுக்கும் சிவப்புக் கம்பளம் விரிப்பதாக இருக்கிறது. அதனால் உடல் பருமன், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், கொழுப்பு அதிகரித்ததால் இதய நோய்கள், புற்றுநோய் உட்பட நோய்கள் பல்கிப் பெருகி மனித உயிர்களுக்கு ஆபத்தாக முடிகின்றது.

இதையும் படியுங்கள்:
மணிக்கூண்டிற்குள் ஒர் இசைக்கருவியா?
Real food

உண்மையான உணவுகள்: உண்மையான உணவுகள் என்பது நமது உடலுக்குத் தேவையான சத்துக்களை அளித்து நம்மை ஆரோக்கியமாக வைப்பதாகும். தினமும் வீட்டில் கீரை உள்ளிட்ட காய்கறிகளை சமைத்து உண்பதே ஆரோக்கியமானது. குழந்தைகளுக்கும் இந்த உணவை பழக்கப்படுத்தி அவர்களை இந்த உணவு உண்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். நல்ல உணவுகள் சமைக்கும்போது குழந்தைகளையும் உதவி செய்ய அழைத்தால் அவர்களுக்கு நல்ல உணவுகளின் நன்மைகள் பற்றி தெரிய வரும்.

பழங்கள், காய்கறிகள், தானியங்கள், நார்ச்சத்துள்ள உணவுகளை உண்பதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் ஆரோக்கியத்தை மீட்க முடியும். உழவர் சந்தைகள், காய்கறி மார்க்கெட்டுகள், உள்ளூர் மளிகைக் கடையில் ஷாப்பிங் செய்யவும். இது உள்ளூர் விவசாயத்தை ஆதரிக்கிறது.

இந்த நாளில் சமூக வலைதளங்களில், ‘நாங்கள் உண்மையான உணவை ஆதரிக்கிறோம்’ என்ற ஹேஷ்டேக் உடன் பதிவிட்டு மக்களிடையே உண்மையான உணவு பற்றிய சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும்.

logo
Kalki Online
kalkionline.com