

அந்தக் காலத்தில் ஆண்கள் வெளியே சென்று பொருள் ஈட்டியும், பெண்கள் வீட்டு வேலைகள் மட்டுமே பார்த்தும் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை முழுமையாக ஏற்றார்கள். அதன் பிறகு பெண்களும் கல்வி கற்பதில் முன்னுரிமை தரப்பட்டு வீட்டை விட்டு வெளியே வந்தார்கள். கல்வி கற்ற பெண்கள் கற்ற கல்வி பயன் பெற உள்ளூரில் கிடைத்த பணிகளுக்குச் சென்றார்கள். தற்போது கல்வியும் அதன் மூலம் கிடைக்கும் பணியும் பெண்களுக்கு பாதுகாப்பு தருகிறது எனலாம்.
திருமணமாகாத வரை சரி, திருமணமாகி குழந்தை பிறந்தவுடன் துவங்குகிறது பெற்றோர்களுக்கான சவால். ஆம், இருவரும் வேலைக்குச் சென்றால்தான் பொருளாதார சிரமமின்றி வாழ முடியும் என்ற சூழலில் குழந்தையை வளர்ப்பதில் பல சங்கடங்களை சந்திக்க நேர்கிறது. குறிப்பாக, பணிக்குச் செல்லும் பெற்றோருக்கும், குழந்தைகளை வளர்ப்பதற்கும் இடையே சமநிலை காண்பதில்தான் பலருக்கும் பெரிய சவால் காத்திருக்கும். இதைக் குறித்து ஆய்வு செய்ததில் கண்டறிந்த விஷயங்களை இப்பதிவில் காண்போம்.
பெற்றோரின் பார்வையில் ஏற்படும் சவால்கள்: பணியின் நேரம் காரணமாக குழந்தைகளுடன் செலவிடும் நேரம் குறையும். பணி அழுத்தத்துடன் குடும்ப பொறுப்பும் சேர்ந்து மன அழுத்தத்தை அதிகரிக்கலாம். குழந்தைக்கு போதுமான நேரம் கொடுக்க முடியவில்லை என்ற குற்ற உணர்வு மனதில் எழலாம். இதைத் தவிர்க்க பாட்டி, தாத்தாவை உதவி கேட்டு தங்களுடன் வைத்துக்கொள்வது, குழந்தையைப் பார்த்துகொள்ள பிளேஸ் கூல் (Play school), Day care போன்ற நம்பகமான அமைப்புகள் தேவையாகும்.
பெற்றோர் பணிக்குச் செல்வதால் கிடைக்கும் நன்மைகள்: குடும்பத்திற்கான பாதுகாப்பு, கல்வி மற்றும் சுய தேவைகள் அனைத்திற்கும் நல்ல ஆதரவாக இருக்கும். தங்கள் வேலையில் வளர்ச்சி அடைவதால் மன நிறைவு கிடைக்கும். இதனைப் பார்க்கும் குழந்தைகளும் உழைப்பின் மதிப்பு, பொறுப்பு, சுயநிறைவு போன்றவற்றைக் கற்றுக்கொள்ளும்.
குழந்தைகளின் வளர்ச்சி பார்வை: பெற்றோர் அதிகமாக நேரம் அளிக்காதபோது எதிர்மறையான தாக்கங்கள் குழந்தைக்கு ஏற்படும். பெற்றோருடனான உணர்வுபூர்வமான நெருக்கம் (emotional bonding) குறையும். பெற்றோரின் கவனம் இல்லையென்றால், குழந்தைகள் பாதுகாப்பு உணர்வில் மாற்றம் வரலாம். அத்துடன் குடும்ப மதிப்புகள், ஒழுக்கம் ஆகியவற்றைக் கற்றுக்கொள்ளும் நேரம் குறையலாம்.
குழந்தைகள் யாரையும் எதிர்பாராமல் சுயமாக செயல்பட கற்றுக்கொள்வார்கள். பெற்றோர் நேரத்தை தரமாக, மதிப்பு மிக்கதாக செலவிட்டால் உறவு மேலும் வலுவாகும். பெற்றோரின் உழைப்பைப் பார்க்கும் குழந்தைக்கு முன்மாதிரியாக உழைப்பு குறித்து அறியும் வாய்ப்பு கிடைக்கும். சரி இந்த இரண்டு கோணங்களையும் மனதில் கொண்டு சமநிலையை உருவாக்க வேண்டும். எப்படி?
நேரத்தின் அளவு மற்றும் தரம் (Quality Time, Quantity Time): எவ்வளவு நேரம் என்பது முக்கியமல்ல, அரை மணி நேரம் இருந்தாலும் முழுமையாக குழந்தையை மட்டுமே கவனத்தில் இருத்தல்.
தினசரி பழக்கங்கள் (Rituals): இரவு உணவை ஒன்றாக அமர்ந்து உண்டு பின் தூங்குவதற்கு முன் குறைந்தது 10 நிமிடம் பேசுதல். வேலை பிசி என்றாலும் காலை சிறு உரையாடலை மேற்கொள்வது.
வார இறுதியில் பிணைப்பு (Weekend bonding): வார இறுதியில் மொபைல், அலுவலகப் பணிகள் போன்றவற்றை எல்லாம் புறக்கணித்து குழந்தை - பெற்றோர் நேரமாக மாற்றுவது.
உணர்வுபூர்வ தொடர்பு (Emotional Communication): தினமும் பணியிலிருந்து திரும்பியதும் ‘இன்று உன் நாள் எப்படி?, இது ஏன் நடந்தது?, பள்ளியில் என்ன நிகழ்ந்தது?’ போன்ற கேள்விகளைக் கேட்டு பதில் பெறுவது.
குடும்ப ஆதரவு & பகல் நேர பராமரிப்பு (Family support & Daycare Careful Choice): குழந்தையை பார்த்துக்கொள்ள தாத்தா பாட்டி போன்ற நம்பகமான உறவுகள், நபர்கள் அல்லது தகுதியான டே கேரை தேர்வு செய்வது முக்கியம். முக்கியமாக, பணிக்குச் செல்லும் பெற்றோர் குழந்தை வளர்ப்பில் குறைவானவர்கள் அல்ல என்பதை உணர்ந்து குற்ற உணர்வுக்கு ஆளாகாமல் சரியான திட்டமிடல், தரமான நேரம், உணர்வான அன்புப் பிணைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் குழந்தையும் பெற்றோரும் சமநிலையுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ முடியும்.