
‘சீன வாஸ்து’ என்கிற ஃபெங்சுயியின் தனிச் சிறப்பே அது மக்களின் வாழ்க்கையோடு தொடர்புடையது என்பதுதான். நாம் கட்டியிருக்கும் வீட்டில் ஏதாவது வாஸ்து குறை இருந்தால் அதை தடுப்பதற்கு சில பரிகாரங்களைக் கூறுவதுதான் ஃபெங்சுயி என்பது. ஒரே மாதிரியான நோக்கத்துடன் வெவ்வேறு வழிமுறைகளில் செயல்படுவதுதான் ஃபெங்சுயியும், வாஸ்துவும். ஹோமியோபதி, அலோபதி இரண்டும் வெவ்வேறு வழிமுறைகளைக் கொண்ட மருத்துவப் பிரிவுகள் என்பதை நாம் அறிவோம். ஆனால், அடிப்படையில் நோயை குணப்படுத்துவதுதானே இரண்டின் நோக்கமும். சில மருத்துவர்கள் இரண்டு மருத்துவ முறைகளை வைத்துக்கொண்டு சிகிச்சை அளிப்பதையும் பார்த்திருக்கிறோம். ஒன்றில் தவறும்போது இன்னொன்றில் வெற்றி கிடைத்து விடுகிறது.
கொரோனா காலத்தில் நிலவேம்பு நீரை அருந்தச் சொல்லி அனைவரும் கூறியதை நினைவில் கொள்ளலாம். அது மாதிரிதான் ஃபெங்சுயியும், வாஸ்துவும் இணைக்கப்பட்டுள்ளது. நல்லதை எடுத்துக் கொள்வதில் தயக்கம் காட்டாதவர்கள்தான் நாம். ஆதலால், ஃபெங்சுயியில் இருக்கும் நன்மைகளை நாம் வீட்டில் பின்பற்றி மகிழ்ச்சியாக வாழலாம். அதற்கான வழிமுறைகள் சிலவற்றை குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
விமர்சனங்களை புறக்கணிக்காதீர்கள்: குறிப்பாக, நாம் வீட்டில் அழகுபடுத்தி இருக்கும் பொருட்களைப் பார்த்து யாராவது நல்லவிதமாகப் புகழ்ந்தால் விரும்புவோம். விமர்சனங்களை எதிர்கொள்ள விருப்பப்பட மாட்டோம். ஆனால் ஃபெங்சுயி, ‘தேவையான இடத்தில் விமர்சனம் கேளுங்கள். அதன்படி நடந்து கொள்ளுங்கள்’ என்று கூறுகிறது. உங்களை விட உள்ளுணர்வு சக்தி மிக்கவர்கள் உங்களது நண்பர் வட்டத்திலோ உறவினர் வட்டத்திலோ இருக்கலாம்.
அவர்கள் உங்களுடைய வீடு அல்லது அலுவலகம் பற்றி ஏதேனும் கருத்து தெரிவித்தால் அலட்சியப்படுத்தி விடாமல் கவனமாகக் கேட்க வேண்டும். செல்வ வளம் பெருக வேண்டும் என்பதற்காக ஒரு சிலை அல்லது ஸ்படிகத்தால் ஆன பிரமிடு ஒன்றை புதிதாக வைத்துள்ளீர்கள். உள்ளே நுழைகிறவர் கண்ணில் அது உடனடியாகப் படும் எனில், அது சரியான இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது என்று நீங்கள் நம்பலாம்.
உங்கள் வீட்டிற்கு வருகிறவர் நீங்கள் வைத்திருக்கும் இயந்திரப் பொறியை பாராட்டினால் உங்கள் தேர்வு சரியானது என்றும், அது உரிய இடத்தில்தான் வைக்கப்பட்டிருக்கிறது என்றும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். ‘இந்தச் சிலை அற்புதமாக இருக்கிறது. ஆனால், இங்கே வைத்திருக்கக் கூடாது’ என்று பார்க்கிறவர் கருத்து தெரிவித்தால் தயங்காமல் இடமாற்றம் செய்து விடலாம். சிலையோ வேறு எதுவோ பரிகாரமாக நீங்கள் பயன்படுத்திய பொருள் எவராலும் கண்டுகொள்ளப்படவில்லை என்றால் உங்கள் தேர்வு தவறானது என்று அறிந்து கொள்ளலாம்.
வீடு, சுவற்றில் பூசிய வண்ணம், பர்னிச்சர், ஓவியம், தோட்டம் என்று எது பற்றிய விமர்சனத்தையும் உதாசீனப்படுத்தி விடாமல் மற்றவர்கள் சொல்வதையும் காது கொடுத்துக் கேட்க வேண்டும். அதில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் வீடு சிறந்து விளங்கும் என்று சீன வாஸ்து கூறுகிறது. ஃபெங்சுயியில் நிறங்கள் முக்கியம். குறைபாடுகளை அதிகரிப்பதிலோ அகற்றுவதிலோ அவை பெரும்பங்கு வகிப்பதாக உள்ளது.
உடைகளைத் தேர்வு செய்யும்போது நீங்கள் விரும்புகிற நிறத்தில் தேர்ந்தெடுங்கள். அடுத்தவருக்காக தெரிவு செய்யாதீர்கள். அவர்களுக்கு விருப்பமானதை அவர்கள் தெரிவு செய்து கொள்ளட்டும். நிறம் உள்ளுணர்வின் பிறதிபலிப்பு. அது மனிதர்களை அடையாளம் காட்டும். ஆதலால், இந்த விஷயத்தில் உங்களுக்கு உரிய நிறத்தை கண்டறிவதில் உங்கள் விருப்பத்தையே பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்கிறது.
சிவப்பு ரோஜாக்களை திருமணத்தில் உபயோகப்படுத்த, உறவுகள் மேம்படும். வட்ட இலைகள் கொண்ட செடிகளை வீட்டின் தென்கிழக்கு பகுதியில் வைப்பதன் மூலம் குடும்ப உறவுகளை அபிவிருத்தி செய்து கொள்ளலாம். வீட்டில் சிறிய அளவிலான அக்வேரியம் தென்கிழக்கில் வைப்பதன் மூலம் குடும்ப உறுப்பினர்கள் இடையே ஒரு இணக்கத்தை வளர்க்கலாம். உங்கள் தொழில் அல்லது உத்தியோக மேம்பாட்டுக்கு ஒரு கண்ணாடித் தொட்டியில் தங்க மீன் வளர்க்கலாம்.
உங்கள் குழந்தைகள் படிப்பில் சூட்டிகையாகத் திகழ வீட்டின் மேற்கு பகுதியில் காற்றிலாடும் மணித் தொடர் ஒன்றை வைக்கலாம். உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வேலை அல்லது தொழில் துறை வாய்ப்பு கிடைக்க மணித் தொடர் ஒன்றை வீட்டின் வடமேற்கு பகுதியில் வைக்கலாம். அதே பகுதியில் புதிதாய் பதித்த மலர்களையும் அலங்காரமாக வைக்கலாம். பெண்ணுக்கும் பிள்ளைக்கும் திருமணம் தள்ளிப் போனால் ஸ்படிகங்களை தென்மேற்கு அல்லது வடகிழக்கில் வைப்பது பலனளிக்கும். நீங்கள் பிரபலம் அடையவும், வெற்றிகளை குவிக்கவும் உங்கள் வீட்டின் தென்பகுதியில் ஒரு பிரகாசமான விளக்கை பொருத்துங்கள்.
இப்படி, நம் வாழ்வியலோடு சம்பந்தப்படுத்தி, நாம் என்றும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இதை இப்படி செய்தால் நிவர்த்தி பெறலாம் என்று ஃபெங்சுயி கூறியிருப்பதை பின்பற்றி மகிழ்வோம்!