

ஒரு சில வீடுகளில் சென்றால், வீடு முழுவதும் அழகாக சுத்தமாக இருந்தாலும் பாத்ரூம் அருகே சென்றவுடன் ஒருவிதமான ஈர நாற்றம் முகத்தில் மோதும். பலர் அதற்குக் காரணம் கழிவுநீர் குழாய் அல்லது ஈரமான தரை என்று நினைப்பார்கள். ஆனால் உண்மையில், தினமும் பயன்படுத்தப்படும் பாத்ரூம் டவல்களே அந்த துர்நாற்றத்திற்குக் காரணமாக இருக்கும்.
குளித்த பிறகு உடலைத் துடைக்க பயன்படுத்தப்படும் டவல்கள், சரியாக சுத்தம் செய்யப்படாமல் நீண்ட நாட்கள் பயன்படுத்தப்பட்டால் கிருமி, பூஞ்சை மற்றும் ஈர நாற்றம் தேங்கத் தொடங்கும். இதனால் பாத்ரூமின் சுத்தமும் பாதிக்கப்படும்.
வாஷ் பேசின் டவல்களும் முக்கியம்
பல வீடுகளில் வாஷ் பேசின் அருகே கைகளைத் துடைக்க சிறிய டவல்கள் தொங்கவிடப்பட்டிருக்கும். குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே டவலை பயன்படுத்துவதால் அதில் மிக வேகமாக கிருமிகள் சேரும். சாப்பிடுவதற்கு முன், வெளியிலிருந்து வந்த பிறகு அல்லது சமையலறை வேலைக்குப் பிறகு கைகளைத் துடைக்கும் இந்த டவல்கள் சுத்தமாக இல்லாவிட்டால் அது வீட்டின் சுகாதாரத்தையே பாதிக்கக்கூடும். சில நேரங்களில் பாத்ரூமில் வரும் துர்நாற்றத்திற்குக் காரணமே இந்த ஈரமான வாஷ் பேசின் டவல்களாக இருக்கும்.
ஏன் டவல்கள் விரைவில் துர்நாற்றம் வீசுகின்றன?
பாத்ரூம் என்பது இயல்பாகவே ஈரப்பதம் நிறைந்த இடம். குளித்த பிறகு ஈரமான டவலை மடித்து கதவின் பின்னால் அல்லது கம்பியில் போட்டுவிட்டால் அது முழுமையாக உலர வாய்ப்பு கிடைக்காது. இந்த ஈரப்பதம் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் வளர சிறந்த சூழலாக மாறுகிறது. சில நாட்களில் டவலிலிருந்து ஒரு விதமான புளிப்பு நாற்றம் வரத்தொடங்கும். அதை மீண்டும் பயன்படுத்தும்போது உடலுக்கும் சுகாதார பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
எத்தனை நாளுக்கு ஒருமுறை சலவை செய்யவேண்டும்?
பல வீடுகளில் ஒரே டவலை ஒரு வாரம் அல்லது அதற்கும் மேலாக பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. ஆனால் நிபுணர்கள் கூறுவதன்படி, குளியல் டவல்களை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை சலவை செய்வது அவசியம். வாஷ் பேசின் டவல்களை முடிந்தவரை தினமும் மாற்றுவது நல்லது. குறிப்பாக கோடைக்காலம் மற்றும் மழைக்காலங்களில் வியர்வை மற்றும் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் அடிக்கடி துவைக்கவேண்டும்.
வெயிலில் உலர்த்துவது ஏன் முக்கியம்?
டவலை சலவை செய்த பிறகு வீட்டுக்குள் உலர்த்துவது மட்டும் போதாது. நல்ல வெயிலில் காயவைத்தால் சூரிய ஒளி இயற்கையாக கிருமிகளை அழிக்க உதவும். முழுமையாக உலராத டவல்களில் மீண்டும் ஈர நாற்றம் உருவாகும். எனவே, டவலை விரித்து காற்றோட்டமான இடத்தில் உலர்த்த வேண்டும். முடிந்தவரை பாத்ரூமுக்குள் டவலை நீண்ட நேரம் தொங்கவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வாஷ் பேசின் டவலை சுத்தம் செய்வது எப்படி?
வாஷ் பேசின் டவல்களை சாதாரண துணிகளுடன் சேர்த்து துவைப்பதை தவிர்க்கவேண்டும். வெந்நீரில் லிக்விட் டிடர்ஜென்ட் அல்லது மென்மையான சோப்பு தூள் சேர்த்து துவைத்தால் கிருமிகள் நன்றாக நீங்கும். வாரத்திற்கு ஒருமுறை சிறிதளவு வெள்ளை வினிகர் அல்லது பேக்கிங் சோடா சேர்த்து ஊறவைத்து துவைத்தால் டவலில் இருக்கும் துர்நாற்றம் முழுமையாக நீங்கும். துவைத்த பிறகு டவலை நன்றாக பிழிந்து வெயிலில் காயவைக்க வேண்டும். ஈரமாக இருக்கும் டவலை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.
அன்றாட சிறிய பழக்கம்,பெரிய புத்துணர்ச்சி
வீட்டில் நல்ல வாசனையும் சுத்தமான சூழலும் இருக்க வேண்டுமெனில், பாத்ரூம் டவல்களின் பராமரிப்பும் மிகவும் முக்கியம். அடிக்கடி சலவை செய்தல், வெயிலில் நன்றாக உலர்த்துதல் மற்றும் பழைய டவல்களை மாற்றுதல் போன்ற சிறிய பழக்கங்கள் கூட பாத்ரூமின் துர்நாற்றத்தை முற்றிலும் குறைக்க உதவும். சுத்தமான டவல் என்பது வெறும் அழகுக்காக அல்ல; அது குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கும் அவசியமான ஒன்று.