

காலை அவசரத்தில் பாத்ரூமுக்குள் சென்றவுடன் கண்களில் முதலில் படுவது டைல்ஸில் படிந்த வெள்ளை கறைகள், சோப்பு படலம், மூலைகளில் கரும்பட்ட பூஞ்சை. எவ்வளவு சுத்தம் செய்தாலும் சில நாட்களில் மீண்டும் அதே நிலை! குறிப்பாக வெந்நீர் பயன்படுத்தும் வீடுகளில் டைல்ஸ் மங்கலாகி, பாத்ரூம் முழுவதும் பழைய தோற்றத்தை தருகிறது. பலர் மணிக்கணக்கில் தேய்த்தும் களைப்புடன் வெளியே வருகிறார்கள். ஆனால் உண்மையில், அதிகமாக தேய்க்காமல் கூட பாத்ரூமை பளபளப்பாக வைத்திருக்க சில எளிய வீட்டு முறைகள் போதுமானவை என சுத்தம் செய்வதில் நிபுணர்கள் கூறுகின்றனர்.
வெந்நீர் மற்றும் வெள்ளை வினிகர்
வீட்டில் எளிதாக கிடைக்கும் வெள்ளை வினிகர், டைல்ஸில் படியும் சோப்பு படலம் மற்றும் நீர்க்கறைகளை கரைக்க சிறந்த உதவியாளர். சம அளவு வெந்நீர் மற்றும் வினிகரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் கலந்து டைல்ஸின் மேல் தெளிக்கவேண்டும். அதை 10 முதல் 15 நிமிடங்கள் விட்டுவிட்டு மைக்ரோஃபைபர் துணியால் துடைத்தால் போதும். டைல்ஸ் புதிதுபோல் மின்னும்.
பேக்கிங் சோடா – வினிகர் கலவை
இந்த இரண்டும் சேர்ந்தால் ஏற்படும் நுரை அழுக்கை வேகமாக கரைக்கும். ஒரு கிண்ணத்தில் பேக்கிங் சோடாவும் வினிகரும் சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல தயாரிக்க வேண்டும். அதை டைல்ஸிலும் கிரவுட் பகுதிகளிலும் தடவி 15 நிமிடங்கள் கழித்து துடைத்தால் பிடிவாதமான கறைகளும் மறையும். டைல்ஸை சேதப்படுத்தாமல் சுத்தம் செய்வதில் இது மிகவும் பயனுள்ளதாகும்.
ஹைட்ரஜன் பெராக்சைடு பயன்படுத்தலாம்
பாத்ரூமில் பூஞ்சை மற்றும் கிருமி அதிகமாக இருந்தால் ஹைட்ரஜன் பெராக்சைடு நல்ல தீர்வு. இதை கருப்பு நிற ஸ்ப்ரே பாட்டிலில் வைத்து டைல்ஸில் தெளிக்க வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து கையுறை அணிந்து மெதுவாக துடைத்தால் கிருமி மற்றும் கறைகள் நீங்கும். இதைப் பயன்படுத்தும்போது பாத்ரூமில் காற்றோட்டம் இருக்க வேண்டும்.
பேக்கிங் சோடா மற்றும் வெந்நீர்
வினிகர் இல்லாத நேரங்களில் வெறும் பேக்கிங் சோடா மற்றும் வெந்நீரால் கூட சுத்தம் செய்யலாம். பேஸ்ட் தயாரித்து டைல்ஸில் பூசி சிறிது நேரம் காயவிட்டு பின்னர் ஈரத்துணியால் துடைக்கவேண்டும். இது சாதாரண அழுக்குகளை எளிதில் அகற்றும்.
நீராவி சுத்தம்
எந்த ரசாயனமும் இல்லாமல் சுத்தம் செய்ய விரும்புவோருக்கு இது சிறந்த முறை. ஷவரை வெந்நீரில் திறந்து பாத்ரூம் முழுவதும் நீராவி நிரம்பியதும் உலர்ந்த துணியால் டைல்ஸை துடைக்க வேண்டும். நீராவி அழுக்கை தளர்த்துவதால் அதிக உழைப்பு தேவையில்லை.
ப்ளீச் மற்றும் வெந்நீர்
மிகவும் கரும்பட்ட அல்லது பழைய கறைகள் இருந்தால் ப்ளீச் பயன்படுத்தலாம். சமஅளவு ப்ளீச் மற்றும் வெந்நீரை கலந்து தெளித்து 15 நிமிடங்கள் கழித்து கழுவவேண்டும். பின்னர் டைல்ஸை நன்றாக உலர்த்தவேண்டும். கையுறை அணிவதும், காற்றோட்டம் இருப்பதும் அவசியம்.
டைல்ஸ் நீண்ட நாட்கள் சுத்தமாக இருக்க என்ன செய்யலாம்?
ஒவ்வொரு குளியலுக்கும் பிறகு சுவர்களை ஒருமுறை சுத்தமாக தண்ணீரால் கழுவுவது அல்லது ஸ்க்வீஜி கொண்டு துடைப்பது நல்லது. இதனால் சோப்பு படலம் மற்றும் நீர்க்கறைகள் குறையும். மேலும், சிறிய சுத்தம் செய்யும் பிரஸ்ஸில் லிக்விட் கிளீனர் நனைத்து அவ்வப்போது விரைவாக தேய்த்து வந்தால் அதிகம் அழுக்கு சேராது.
கொஞ்சம் லிக்விட் கிளீனர் ஸ்பிரே பாட்டிலில் நிரப்பி பாத்ரூமிலேயே வைத்திருந்தால் அவ்வப்போது விரைவாக தேய்த்து சுத்தம் செய்ய முடியும்.
டவல்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
பலர் பாத்ரூம் டைல்ஸை அடிக்கடி சுத்தம் செய்தாலும், தினமும் பயன்படுத்தும் டவல்களை கவனிக்க மறந்துவிடுகிறார்கள். ஈரப்பதம் நீண்ட நேரம் இருக்கும் டவல்களில் கிருமி மற்றும் பூஞ்சை எளிதில் உருவாகும். இதுவே பாத்ரூமில் துர்நாற்றம் ஏற்படுவதற்கும் ஒரு முக்கிய காரணம். எனவே, டவல்களை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை சலவை செய்து, முழுமையாக வெயிலில் உலர்த்துவது அவசியம். மேலும், பழைய மற்றும் ஈர நாற்றம் வீசும் டவல்களை மாற்றி புதியவற்றைப் பயன்படுத்தினால் பாத்ரூம் எப்போதும் சுத்தமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.