
அந்தக் காலங்களில் வீட்டுக்கு வெளியே பசுமையான சூழல் அமைந்திருக்கும். வயல்வெளிகளுக்கு நடுவில் மாமரம், வேப்பமரம் உள்ளிட்ட மரங்களின் நடுவில் வண்ணமயமான மலர்கள் கொண்ட செடிகள் வீட்டை சூழ்ந்திருக்க, வீட்டில் உள்ளவர்கள் வேலை செய்யும் அலுப்பு தெரியாமல் இயற்கை சூழலில் பணிபுரிந்தார்கள். ஏனெனில், அன்று விவசாயமும் அதைச் சார்ந்த பணிகளுமே முக்கியப் பணியாக இருந்தது.
ஆனால், இன்று அறிவியல் முன்னேற்றம் பெருகியதில் மடியில் கணினி இருந்தால் போதும் என்ற நிலை. ஆகவே, ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறையுடன் அலுவலக அறை என்பது தற்போது புதிதாக இணைந்துள்ளது. வீட்டிலிருந்து பணி புரியும் தகவல் தொழில்நுட்பத் துறை மட்டுமின்றி, மற்ற துறை சார்ந்தவர்களும் தங்களுக்கென ஒரு அலுவலக அறையை உருவாக்குவது அவசியமாகிவிட்டது.
அலுவலக அறை என்பது மனதில் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருவதாக அமைய வேண்டும் என்பதால் அதை அலங்கரிக்கும்போது மிகவும் கவனமாக இருப்பார்கள். அந்தக் காலத்தில் வண்ண வண்ண மலர்கள் கொண்ட பிளாஸ்டிக் பூ தொட்டிகளை ஆங்காங்கே வைத்து அழகு செய்தார்கள். ஆனால், இன்று உண்மையான மலர்கள், தாவரங்களை அலுவலக அறையில் வைப்பதன் மூலம் தாங்கள் செய்யும் பணியை மன அமைதியுடன் செய்ய முடிவதாகச் சொல்கின்றனர். சரி, அலுவலக அறைகளுக்கு ஏற்ற மலர்கள் அல்லது தாவரங்கள் எவை என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
மினியேச்சர் ஆர்க்கிட்கள் (Miniature Orchids): மினியேச்சர் ஆர்க்கிட்கள் அலுவலக மேசைகளுக்கு ஒரு சிறந்த தேர்வாகும். ஏனெனில், அவற்றின் சிறிய அளவிலான அழகான பூக்கள் ஒரு சிறப்பான வண்ணத்தையும் நேர்த்தியையும் சேர்க்கின்றன. இவை செழித்து வளர குறைந்த வெளிச்சமே போதுமானது என்பதால் ஏராளமான இயற்கை ஒளி இல்லாத அலுவலக சூழல்களுக்கு ஏற்றதாக அமைகிறது. அத்துடன் வறண்டதாக ஆகும்போது மட்டும் நீர் ஊற்றினால் போதும் என்பதும் இதன் சிறப்பு.
ZZ செடிகள்: இதற்கும் குறைந்த வெளிச்சமும் குறைவான தண்ணீரும் இருந்தால் போதும். ZZ செடிகள் அலுவலக மேசைகளுக்கு ஏற்ற நேர்த்தியான, நவீன அழகியலைக் கொண்டுள்ளதால் எந்தப் பணியிடத்திற்கும் ஒரு ஸ்டைலான லுக்கை சேர்க்க முடியும். குறைந்த பராமரிப்பில் நீடித்து இருக்கும் தன்மை கொண்ட ZZ செடிகள், பராமரிப்பு சீராக இல்லாத அலுவலக சூழல்களுக்கு ஏற்றவை.
போத்தோஸ் தாவரங்கள் (Pothos Plants): இந்தத் தாவரங்களைப் பராமரிக்க எளிது என்றாலும் இதன் மகிமை என்பது வேறு. போத்தோஸ் செடிகள் காற்றிலிருந்து பென்சீன், ஃபார்மால்டிஹைட் மற்றும் கார்பன் மோனாக்சைடு போன்ற நச்சுக்களை அகற்றுவதன் மூலம் உட்புறக் காற்றின் தரத்தை மேம்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். இந்தத் திறன் அலுவலகக் காற்றை ஆரோக்கியமாக்குவது மட்டுமல்லாமல், அறிவாற்றல் செயல்பாட்டை ஊக்குவித்து சோர்வைக் குறைப்பதால் இவை உற்பத்தித் திறன் கொண்ட பணிச்சூழலுக்கு ஏற்றதாக பரிந்துரைக்கப்படுகிறது.
சதைப் பற்றுள்ள செடிகள் (Succulents): குறைந்தபட்ச நீர்ப்பாசனத் தேவைகள் மற்றும் சிறிய இடத் தேவைகள் காரணமாக அலுவலக சூழல்களுக்கு இந்த தாவரங்கள் மிகவும் விரும்பப்படுகின்றன. அத்துடன் இவை காண்பதற்கு நவீன அமைப்பிலும், மேசையில் வைக்கக்கூடிய வகையிலும் இருப்பது இதன் கூடுதல் சிறப்பு. இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் தேவைப்படும் இது, வடிகால் வசதியுள்ள மண்ணில் செழித்து வளர்கிறது. அலுவலகத்தின் பரபரப்பான சூழல்களுக்கு ஏற்றதாக அதிகம் கவனிக்கவேண்டிய அவசியமில்லாத இவற்றுக்கு முன்னுரிமை தரப்படுகிறது.
சிலந்தி செடிகள் (Spider Plants - Chlorophytum comosum): சிலந்தி செடிகள் (Chlorophytum comosum) குறைந்த நீர் பராமரிப்புடன் வளரும் திறன் உடையது. இந்த செடிகளின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று அவற்றின் வலுவான காற்று சுத்திகரிப்புத் திறன்கள். அவை பொதுவான உட்புற காற்று மாசுபாடுகளான ஃபார்மால்டிஹைட் மற்றும் சைலீன் போன்ற நச்சுக்களை நீக்குவதில் சிறந்தவை என்பதால் மாசுக்கள் அடங்கிய தொழிற்சாலைகளுக்கு ஏற்றது. மேலும், அறை நிழல் முதல் மறைமுக சூரிய ஒளி வரை பல்வேறு ஒளி நிலைகளில் நன்கு வளர்வதும் இதன் சிறப்பு.
இவற்றுடன், வெள்ளைப் பூக்களுடன்கூடிய நேர்த்தியான, மாசுக்களை நீக்குவதில் திறம்பட செயல்படும் பீஸ் லில்லி (Peace Lily), சருமப் பராமரிப்பு மற்றும் காற்று சுத்திகரிப்புக்குப் பயனுள்ளதாக இருக்கும் கற்றாழை (Aloe Vera), நல்ல அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பைக் குறிக்கும் மூங்கில் (Bamboo) போன்ற பல வகையான தாவரங்கள் உள்ளன. நமது எண்ணம் மற்றும் ரசனைக்கு ஏற்றவாறு நல்ல நர்சரி நிபுணர் உதவியுடன் இவற்றை நமது அலுவலக அறைகளில் வைத்து உற்சாகம் பெறலாம்.