வீட்டுக்கு ஒரு சைக்கிள் என்பது, அந்த வீட்டுக்கு வாசல் படி எப்படியோ அது போன்று இருந்தது அக்காலத்தில். சைக்கிளை பயன்படுத்தும் வழக்கம் மீண்டும் பலருக்கும் தற்போது ஒரு பழக்கமாகவே வந்து கொண்டு இருக்கிறது. சைக்கிள் ஓட்டுவதால் உடலுக்குக் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
தற்போது, முன்பைப் போல் வீட்டுக்கு ஒரு சைக்கிள் இருப்பதை அனைவரும் விரும்புகின்றனர். வெளியில் எங்காவது கடை தெருவுக்குச் செல்ல வேண்டுமென்றால் சைக்கிள் எடுத்துச் செல்கின்றனர். இளம்பருவத்தினர் ஆண், பெண் இருவரும் சைக்கிளில் செல்வதை விரும்புகின்றனர்.
அதை ஒரு உடற்பயிற்சியாக மேற்கொள்கின்றனர். இதற்கு இடைப்பட்ட காலத்தில் சைக்கிளில் செல்வதை பலரும் விரும்பவில்லை. ஸ்கூட்டர், பைக்கு என்று விதவிதமான இருசக்கர வாகனங்களில்தான் சென்று கொண்டிருந்தனர். அதைத்தான் அப்பொழுது பெருமையாக எண்ணினர். சைக்கிளை ஏழை எளியவர்களின் வாகனம் என்று நினைத்திருந்தனர். இப்பொழுது காலம் மாற மாற பழையபடி சைக்கிளின் அருமையை எல்லோரும் அறிந்து வைத்திருப்பதால் அவற்றை மீண்டும் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர்.
பொருளாதார மேம்பாடு அடைய இந்தியாவில் அனைவரும் குறைந்த தொலைவு செல்வதற்கு சைக்கிளைப் பயன்படுத்த ஆரம்பித்தால் ஆண்டுக்கு 1.80 லட்சம் கோடி ரூபாய் மிச்சமாகும் என்பது தெரியவந்துள்ளது. காரணம், சைக்கிளை பயன்படுத்தினால் பெட்ரோல், டீசல் பயன்பாடு குறையும். அதன் பயன்பாடு குறைந்தால் கச்சா எண்ணெய் தேவை குறையும். அப்பொழுது கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் அளவும் குறைந்து நேரடியாக பொருளாதாரப் பலன்கள் கிடைப்பதை உணர முடியும்.
அது மட்டுமல்லாமல், சைக்கிள் ஓட்டுவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். வண்டிக்கு பெட்ரோல், டீசல் போட வேண்டிய அவசியம் இல்லாததால் அதன் மூலம் புகை வருவதும் குறையும். இதனால் நோய் தாக்கம் குறையும். மார்கழி, தை போன்ற மாதங்களில் பனியின் தாக்கத்தால் தும்மல், இருமல் போன்ற நோயால் பாதிக்கப்படுபவர்கள் ஆஸ்துமா நோயாளிகள் போன்றவர்கள் புகை ஏற்படுத்தும் மாசுகளில் இருந்து தப்பிப்பார்கள். இதனால் உடல் நலமும் நன்றாக இருக்கும்.
நம்மில் பலருக்கும் உடல் நலன் பாதுகாக்கப்படுவதன் மூலம் தனி நபர்களின் மருத்துவச் செலவும் குறையும். சராசரியாக ஒருவர் 3.5 கிலோ மீட்டர் தூரம் நடந்தால் ரூபாய் 11,200 கோடி மிச்சம் ஆகும் என்கிறது அகில இந்திய சைக்கிள் உற்பத்தியாளர்களின் ஒத்துழைப்போடு இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு. மேலும், சைக்கிளின் பயன்பாடு அதிகரிக்கும் பொழுது பத்து லட்சம் டன் கரியமில வாயு காற்றில் கலப்பது தடுக்கப்படும்.
இப்படி சைக்கிளின் பயன்பாடு நமக்கு மட்டுமல்லாது, நமது சமூகத்துக்கும் பயனளிக்கும் வாகனம் என்ற எண்ணம் இப்பொழுது அனைவரிடத்திலும் அதிகரித்து வருகிறது .ஆதலால் சைக்கிளின் உபயோகமும் அதிகரித்திருக்கிறது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சைக்கிள் ஒரு வரப்பிரசாதமாக இன்றும் கிராமங்களில் வலம் வருகின்றன. இன்னும் மக்களிடத்தில் அதிகமாக விழிப்புணர்வு ஏற்பட்டால் ,அருகில் உள்ள இடங்களுக்கு சைக்கிளை எடுத்துச் சென்று வருவதற்கு மெனக்கெட்டால், வாகன நெரிசலும், சுற்றுச்சூழல் மாசுபடுதலும் நன்றாகக் குறையும் என்பதில் ஐயமில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக பொருளாதார மேம்பாடு அடையும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இப்படியாக வீட்டு வாகனமாகப் பயன்படுத்தப்படும் சைக்கிள் பல்வேறு நன்மைகளை நமக்கு அளிக்கிறது என்பதை நினைவில் கொண்டு வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு பிறந்த நாள் போன்ற தினங்களில் சைக்கிள் வாங்கி அன்பளிப்பாகக் கொடுத்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தலாம்.
சைக்கிளின் பயன்பாட்டை குழந்தைகளுக்கு எடுத்துரைத்து, இளம் வயதிலேயே அவர்களுக்கு சைக்கிளில் பயணம் செய்யக் கற்றுக் கொடுத்து , மேற்கூறிய அனைத்து நன்மைகளையும் பெற வழி வகை செய்வோம்!