நம் சிறு வயதில் நம்மையும் அறியாமல் அல்லது பிறரைப் பார்த்து சில தோரணைகளை வெளிப்படுத்தி, பெரியவர்களிடம் திட்டு வாங்கி, அதை விட்டு, பின்பு நாம் பெரியவர்கள் ஆனதும் அதே தோரணைகளை ‘ஸ்டைல்’ என்ற அடிப்படையில் பின்பற்றுவது இயல்பு.
நீண்டகாலமாக நாம் பின்பற்றும் சில உடல் தோரணைகள், காலப்போக்கில் நம் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கலாம். அதில் ஒன்றுதான் நம் மனதிற்கு பிடித்த கால் மேல் கால் போட்டு ஸ்டைல் என்ற நினைப்போடு உட்காரும் விதம். பார்க்க நன்றாக இருந்தாலும், அதுதான் மோசமான ரத்த ஓட்டம், நரம்பு வீக்கங்கள்(varicose veins) மற்றும் நரம்பு சேதத்திற்கு வழிவகுக்கும்.
பலராலும் கவனிக்கப்படாத மற்றோரு தோரணை உட்கார்ந்தோ அல்லது நிற்கும்போதோ சற்று கூன்((slouching) போட்ட நிலையிலே இருப்பது. இந்தப் பழக்கம் நமக்கு முதுகு வலி, தசை வலி மற்றும் முதுகுத்தண்டு குறைபாடுகளை நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்க வைக்கும்.
சுவற்றிலோ அல்லது சாதாரணமாகவோ ஒரு காலில் சாய்ந்து நிற்பது என்பது பலர் ஸ்டைலாக கருதும் மற்றொரு தோரணையாகும். இது இடுப்பு மற்றும் முதுகு தசைகளில் ஏற்றத்தாழ்வை உருவாக்கி, நாள்பட்ட வலி மற்றும் சில உடல் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
அதேபோல், ‘டெக் நெக்’(Tech neck) என்று குறிப்பிடப்படும் தோரணை. போன் அல்லது லேப்டாப் திரைகளை தொடர்ந்து கீழே தலை சாய்ந்தபடி பார்ப்பது, கழுத்து பகுதிகளில் நாள்பட்ட வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
மற்றொரு சிக்கலான தோரணை தொலைபேசியை காது மற்றும் தோள்பட்டைக்கு இடையில் மணிக்கணக்கில் வைத்து பேசுவது. இது, கழுத்து தசைகளில் வலிகளை ஏற்படுத்தி நீண்டகால அசௌகரியத்திற்கு வழிவகுக்கும்.
இதிலிருந்து எப்படி விடுபடலாம்?
கால் மேல் கால் போட்டு உட்கார பழகியவர்கள், இரு கால்களையும் தரையில் படும்படியும், உங்கள் முழங்கால்களை நன்றாக வளைத்து (right angled) உட்கார பழகுங்கள். முடிந்தால் தேவைப்படும் நேரங்களில் இடைவெளிகள் எடுத்துக்கொள்வது, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க உதவும்.
சாய்வான கோணத்தில் உட்காரவோ அல்லது நிற்பதைத் தவிர்க்க, உங்கள் முதுகு தண்டை நேராக வைத்ததுபோல் பயிற்சி மேற்கொள்வது ஒரு நல்ல தோரணையை பழக்கப்படுத்த உதவும்.
பணிச்சூழலில் நல்ல வசதியுடன் கூடிய நாற்காலியை பயன்படுத்துவது(ergonomic furniture with lumbar support) உங்கள் முதுகு மற்றும் இடுப்பு பகுதிக்கு நல்ல ஆதரவை தரும். இதுவே முதுகெலும்பின் வளைவை தடுக்கவும் உதவும்.
தேவையான தசைகளை வலுப்படுத்த வழக்கமான உடற்பயிற்சிகள் மேற்கொள்வது உங்கள் தோரணையை மேம்படுத்தி முதுகுவலியை முற்றிலும் குறைக்கும்.
இதுபோக ஒருவர் தூங்கும் நிலையை வைத்துத்தான் முதுகெலும்பின் நிலையை நம்மால் கணிக்கமுடியும். அதற்கு தகுந்த மெத்தை மற்றும் தலையணை பயன்படுத்துவது முதுகு சம்பந்தமான பிரச்னையைத் தடுக்க உதவும்.
நாம் பின்பற்றும் இந்த உடல் தோரணைகளைப் பற்றிய விழிப்புணர்வு நமக்கு இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், இப்போது இதனால் வரும் பிரச்னைகளை நாம் தெரிந்துகொண்டு, மேலே குறிப்பிட்ட வழிகளை பின்பற்றி இதிலிருந்து விடுபடுவோம். பிறருக்கும் இதைப் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு செல்வோம்.