
தற்போது மக்களிடையே செல்லப்பிராணிகளை வளர்க்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நாய்களை வளர்ப்பதற்கே மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். நாய் வளர்த்தால் இது வீட்டை பாதுகாப்பாக பார்த்து கொள்ளும் என்ற காரணத்திற்காக சமீபகாலமாக பலரும் நாயை வளர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். அதுமட்டுமின்றி நாய்களுடன் விளையாடும் போது கவலை, மனஅழுத்தம் நீங்குவதாக கருதுகிறார்கள்.
நாய்களின் சிறிய, பெரிய என பல்வேறு வகையான இனங்கள் உள்ளன. அதில் தற்போது தனித்துவமான நாய் இனமான புல்லிக்குட்டாவை வளர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
புல்லிக்குட்டா நாய் இனங்களில் முரட்டுத்தனமான பெரிய வகையை சேர்ந்தது. தமிழ்நாட்டின் பாரம்பரிய நாய் இனமாக (புல்லிக்குட்டா) அலங்கு இனம் கருதப்படுகிறது. ஆனாலும், இந்த நாய் இனங்கள் டெல்லி, அரியானா மற்றும் பாகிஸ்தானின் சில பகுதியிலும் காணப்படுகின்றன. பாரசீகத்தில் இந்த வகை நாய்கள் ராணுவத்தில் வளர்க்கப்பட்டு எதிரிகளின் முகாம்களை அறியவும், எதிரிகளை அச்சுறுத்தவும் வளர்க்கப்பட்டன.
நல்ல உயரம், வலுவான தசைகள், வலிமையான கால்கள், அச்சுறுத்தும் முகம் கொண்டவையாக அலங்கு நாய்கள் இருந்ததாகவும், இன்றைக்கு இந்திய அளவில் காணப்படும் வேறு எந்த நாட்டு நாய் இனங்களையும் விட அலங்கு வலிமையானவை என்றும் கூறப்படுகிறது.
இந்த நாய் இனங்கள் குறித்து ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், இவை மிகவும் புத்திசாலித்தனமான, மிகவும் சுறுசுறுப்பான மற்றும் மிகவும் மூர்க்கமான குணம் கொண்டவை என்று தெரிவிக்கின்றனர். யானைகளை போல புல்லிக்குட்டா நாய்கள் தன்னை பராமரிக்கும் உரிமையாளருக்கு மட்டுமே கட்டுப்படும் என்கிறார்கள்.
இதன் குணம் தெரியாமல் பழக்கம் இல்லாத நபர்கள், இந்த நாய்களை நெருங்கினால் அது அபாயகரமானது என்றும் குறிப்பிடுகின்றனர். மன்னர்கள் காலத்தில் இவை பெரும்பாலும் வேட்டையாடுதல் மற்றும் போர்களில் எதிரிகளை அச்சுறுத்தவும் பழக்கப்படுத்தி வந்ததாகவும், வேட்டையாடுதல் இல்லாதபோது குடியிருப்பு காவலுக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தஞ்சாவூர் பெரிய கோவிலில் அலங்கு நாயை சித்தரிக்கும் ஒரு சுவரோவியம் காணப்படுகிறது. இதுவே இந்த அலங்கு என்ற புல்லிக்குட்டா நாய் இனம் தமிழ்நாட்டின் பாரம்பரிய இனம் என்பதைக் குறிக்கும் சாட்சியாகவும் அமைந்துள்ளது.
பெரிய மற்றும் அரிதான இனமான புல்லிக்குட்டா சிறு வயதிலிருந்தே அன்புடனும் பாசத்துடனும் வளர்க்கப்பட்டால், அது விசுவாசமான மற்றும் அன்பான குடும்ப நாயாக இருக்கும். இவற்றிற்கு சிறு வயதிலிருந்தே அன்பும், பாசமும் அதிகம் தேவை. புல்லிக்குட்டா நாய்கள் பாதுகாப்பானவை மற்றும் விசுவாசமானவை. நாயைப் பயிற்றுவிப்பதற்கும் பழகுவதற்கும் நேரமும் பொறுமையும் கொண்ட அனுபவம் வாய்ந்த நாய் உரிமையாளர்களுக்கு அவை மிகவும் பொருத்தமானவை.
இந்தியாவில் புல்லிக்குட்டா நாய்க்குட்டி பாலினம் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து ரூ.35,000 முதல் ரூ.90,000 வரை விற்கப்படுகிறது. ஆண் நாய்க்குட்டிகள் பெண் நாய்க்குட்டிகளை விட விலை அதிகம்!