ஜெட் லேக் (Jet lag) என்பது ஒரு தற்காலிக தூக்கக் கோளாறு ஆகும். இது ஒருவர் உலகின் வெவ்வேறு நேர மண்டலங்களில் விரைவாகப் பயணிக்கும்போது அவருடைய உடலின் உள் கடிகாரத்தை குழப்பமடையச் செய்யும். அதனால் உண்டாகும் விளைவுகள் மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் விதங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஜெட் லேக் ஏற்பட என்ன காரணம்?
உலகின் வெவ்வேறு பகுதிகளில் நேர மாற்றங்கள் இருக்கும். உதாரணமாக, இந்தியாவில் பகல் நேரமாக இருந்தால் அதுவே அமெரிக்காவில் இரவு நேரமாக இருக்கும். நியூயார்க்கிற்கும் லண்டனுக்கும் 5 மணி நேர வித்தியாசம். இதன் காரணமாக அமெரிக்காவிலிருந்து விமானத்தில் பயணித்து ஒருவர் இந்தியாவை அடையும்போது அவரது உடல் நேரக் குழப்பத்திற்கு ஆளாகிறது. அமெரிக்காவில் அவர் வழக்கமாகத் தூங்கும் இரவுப் பொழுது, இந்தியாவில் பகல் நேரமாக இருப்பதால் அவரது உடல் சோர்வு தூக்கக் கலக்கம் போன்றவற்றை அனுபவிக்கும்.
ஜெட் லேக்கின் முக்கிய அறிகுறிகள்:
சோர்வு, தூக்கமின்மை: பகலில் சோர்வு மற்றும் உடலில் ஆற்றல் இல்லாதது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். இரவில் தூங்குவதில் சிரமம் அல்லது தூக்கமின்மை உண்டாகும். சரியான தூக்கம் இல்லாததால் பகல் முழுவதும் புத்துணர்ச்சி இல்லாமல் இருக்கும். அதேசமயம் பகலில் அதிகத் தூக்கம் வரும். விழிப்புடன் இருப்பதும் செயல்படுவதும் கடினமாக இருக்கும். தூக்கமின்மை காரணமாக உணர்ச்சிகளில் மாறுதல் ஏற்பட்டு எரிச்சல் ஏற்படும்.
அறிவாற்றல் குறைபாடு: எந்த வேலையிலும் கவனம் செலுத்தி அதை சீராகச் செய்ய முடியாமல் போகும். நினைவாற்றல் குறைபாடு ஏற்படும்.
உடல் அறிகுறிகள்: தலைவலி, பொது உடல் நலக்குறைவு, அசௌகரியம் மற்றும் அமைதியின்மை போன்ற உணர்வுகள் ஏற்படும்.
செரிமான பிரச்னைகள்: மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு, குடல் ரீதியான தொந்தரவுகள் ஏற்படும்.
கவலை: சில நபர்கள் லேசான கவலை அல்லது அமைதியின்மையை அனுபவிக்கலாம்.
ஜெட் லேக்கில் இருந்து மீள்வது எப்படி?
இந்த அறிகுறிகள் புதிய இடத்துக்கு வந்த 12 மணி நேரத்திற்குள் தொடங்கி ஒன்று இரண்டு நாட்கள் நீடிக்கும். இது வயது மற்றும் ஆரோக்கியத்தைப் பொறுத்து நபருக்கு நபர் மாறுபடலாம். 3 மணி நேரம் பிரயாணம் செய்து ஒரு நாட்டை அடைந்தால் விரைவில் ஜெட் லேக்கில் இருந்து விடுபடலாம். 15 மணி நேரம் பயணிக்கும் ஒரு நபர் ஜெட் லேக்கில் இருந்து விடுபட ஒரு வாரம் வரை ஆகலாம்.
ஜெட் லேக்கின் விளைவுகளை குறைக்க சில உத்திகள்: வெளிநாட்டிற்கு பயணம் செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பு, உறங்கும் மற்றும் உண்ணும் நேரங்களை, போய் சேரும் இடத்திற்கு ஏற்றவாறு நெருக்கமாக மாற்றலாம்.
தூக்கம்: புறப்படுவதற்கு முந்தைய நாட்களில் நல்ல தூக்கத்தைப் பெறுவதன் மூலம் பயணத்திற்கு முன்பு நன்றாக ஓய்வெடுத்துக் கொள்கிறோம் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் விமானத்தில் பயணிக்கும்போது விமானத்தில் தூங்கவும். கழுத்து தலையணை மற்றும் கண் முகமூடியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தண்ணீர்: விமானம் ஏறுவதற்கு முன்னும் பின்னும் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆல்கஹால் மற்றும் காஃபின் நிறைந்த பானங்களைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அவை நீரிழப்புக்கு வழிவகுத்து தூக்கத்தை சீர்குலைக்கும்.
சூரிய ஒளி: ஊருக்குப் போய் சேர்ந்த பிறகு சூரிய வெளிச்சத்தில் சிறிது நேரத்தை செலவிட வேண்டும். உடலின் உள் கடிகாரத்தின் செயல்பாட்டை மீட்டெடுக்க சூரிய ஒளி உதவுகிறது. நடைப்பயிற்சி, லேசான உடற்பயிற்சி போன்றவற்றையும் செய்து உடலை ஆற்றலுடன் வைத்துக்கொள்ள வேண்டும். உடலை சரி செய்ய சிறிது நேரம் தர வேண்டும்.